திருக்கோயிலூர் உலக நாதப்பெருமாள் கோயில்

திருக்கோயிலூர் உலக நாதப்பெருமாள் கோயில்.[அதியமான் ஆண்ட ஊர்]----மூலவர் : திருவிக்கிரமர்
உற்சவர் : ஆயனார், கோவலன்
அம்மன்/தாயார் : பூங்கோவல் நாச்சியார்
தல விருட்சம் : புன்னைமரம்
தீர்த்தம் : பெண்ணையாறு, கிருஷ்ண தீர்த்தம்,ஸ்ரீசக்ரதீர்த்தம்
விமானம் : ஸ்ரீ சக்கர விமானம்
ஆகமம்/பூஜை : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருக்கோவலூர்
ஊர் : திருக்கோவிலூர்
மஞ்சாடு வரையேழும் கடல்களேழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்
எஞ்சாமல் வயிற்றடக்கி ஆலின்மேல் ஓரிளந்தளிரில் கண்வளர்ந்த ஈசன் தன்னை
துஞ்சாநீர்வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால் தூயநான்மறையாளர் சோமுச் செய்ய
செஞ்சாலி விளைவயலுள் திகழந்து தோன்றும் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.
-திருமங்கையாழ்வார்!
நாலாயிர திவ்ய பிரபந்தம் முதன்முதலில் இங்குதான் பாடப்பட்டது என்பது மிக குறிப்பிடத்தக்கது. மூன்றடி மண் கேட்ட பெருமாள் என்பதால் இங்கு உலகளந்த பெருமாள் என்று போற்றப்படுகிறார். பெருமாளை புகழ்ந்து பாடிய முதலாழ்வார்களான பொய் கையாழ்வார்,பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் இத்தலத்து பெருமாளைத்தான் முதன் முதலாகப் பாடினர். இங்கு விஷ்ணுவும், துர்க்கையும் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் மூலவரின் திருமேனி தாருவால்(மரம்) ஆனது. இவ்வளவு பெரிய பெருமாள் நின்ற கோலத்தில் வேறு எங்கும் கிடையாது.
திருக்கோவிலூர், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, கபிஸ்தலம் ஆகிய பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் இது முதலாவது தலம். கோயில் நுழைவு வாயிலின் வலதுபக்கம் சாளக்கிராமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இவரை தரிசித்த பின் தான் மூலவரை தரிசனம் செய்ய வேண்டும்.
நல்ல பதவிகளை அடைய விரும்புவர்கள்,பதவி உயர்வு வேண்டுபவர்களும், பதவி இழந்தவர்களும் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் அவர்களது வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பதே இக்கோயிலின் தனிச் சிறப்பு.கல்யாண பாக்கியம், குழந்தை வரம் ஆகியவை நிறைவேறுகின்றன.108 வைணவத் தலங்களில் இங்கு மட்டும் தான் சுயம்பு விஷ்ணு துர்க்கை உள்ளது. இங்குள்ள சக்கரத்தாழ்வார் விஷ்ணு சொரூபமாக இருப்பதால் சத்ருக்கள் (எதிரிகள் ) தொல்லை நீங்கும்.
இக்கோயிலின் ராஜகோபுரம் 192 அடி உயரம் கொண்டது. 11 நிலைகள் கொண்டது. இது தமிழகத்தின் மூன்றாவது பெரிய கோபுரம் ஆகும். (முதல் இடம் ஸ்ரீரங்கம், இரண்டாம் இடம் ஸ்ரீவில்லிபுத்தூர்) கேரளா திருக்காக்கரையில் வாமனருக்கென மிகப்பெரிய கோயில் உள்ளது. இத்தலத்தில் மூலவருக்கு பின்னால் வாமனர் அருளுகிறார்.
108 திருப்பதிகளில் இங்கு மட்டும் தான் பெருமாள் சன்னதி அருகிலேயே விஷ்ணு துர்க்கை அருள்பாலிக்கிறாள். இவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் நின்று தரிசனம் செய்யலாம்.பெருமாளை மட்டுமே பாடும் திருமங்கையாழ்வார், இத்தலத்தில் துர்க்கையையும் (மாயை) சேர்த்து "விந்தம் மேவிய கற்புடை மடக்கன்னி காவல் பூண்டகடி பொழில்' என்று புகழ்ந்து பாடுகிறார். இவளுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் பூஜை செய்தால் நவக்கிரக தோஷம் விலகும் என்பதும், சகோதர சகோதரிகள் உறவு பலப்படும் என்பதும் நம்பிக்கை.
பெருமாள் சன்னதிக்கு நேர் எதிரில் கருடன் தூண் ஒன்று உள்ளது. 40 அடி உயரமுள்ள இந்தத் தூண் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. அதன் மேல் பகுதியில் உள்ள சிறிய கோயில் காண்போரை வியப்பில் ஆழ்த்தும். இந்த தூணின் மேல் பகுதியில் கருடன் நின்று பெருமாளை வணங்குவதாக ஐதீகம்.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்