மழவராயர்
மழவர்------மழவராயர்------ மழவர் என்பார் மற்றொரு பழைய குலத்தார் ஆவர். அன்னார் சிறந்த படை வீரர். முடிவேந்தர்களும் அவர் உதவியை நாடினர். அக்குலத்தார்க்கும், தமிழ் இராச குலத்தார்க்கும், உறவு முறை இருந்ததாகத் தெரிகின்றது. தஞ்சை நாட்டிலுள்ள பாடல் பெற்ற பதிகளுள் ஒன்று அக் குலத்தார் பெயரைத் தாங்கி நிற்கின்றது. “மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே” என்று தேவாரத்திற் பாடப்பெற்ற மழபாடி என்னும் ஊர் மழவரால் உண்டாக்கப் பட்டதாகும். மழவர் பாடி என்பது மழபாடியாயிற்று.