ஐராவதேஸ்வரர் கோயில், தாராசுரம்

ஐராவதேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் இரண்டாம் ராசராசரால் பனிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப் பட்டது. இக்கோவில், கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவில், பெருவுடையார் கோயில் ஆகிய மூன்றும் சேர்த்து அழியாத சோழர் பெருங்கோயில்கள் எனப்படுகின்றன.
1987-ல், பெருவுடையார் கோயில் யுனெஸ்கோ அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. பின்னர், 2004-ல் கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயிலும் மற்றும் ஐராவதேஸ்வரர் கோயிலும் உலகப்பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன. தமிழ் நாடு தொல்லியல் துறை இக்கோயிலின் அமைப்புக்களை ஆராய்ந்து இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களைப் படியெடுத்து சோழ மன்னர்களைப் பற்றிய பல தகவல்களை பதிப்பித்துள்ளது.
கோயிலின் சிறப்புகள்
சோழ மன்னர்களில் 2ம் ராஜராஜனால் கட்டப்பட்ட அழகிய கலைக்கூடம் இக்கோயில். இக்கோயிலைச் சுற்றிலும் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. தூண்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும், சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள வடிவங்களும், நாட்டிய முத்திரைகளை காட்டி நிற்கும் சிற்பங்களும், தேர் போன்று வடிவிலமைந்த மண்டபமும் என பல அரிய சிற்பக் கலைப் படைப்புக்களை இக்கோயில் கொண்டுள்ளது.
வல்லுனர்களால், "சிற்பிகளின் கனவு" என்று கருதப்படும் இந்த தலம் முழுவதும் மிகவும் நுணுக்கமான சிறிய மற்றும் பெரிய சிற்பங்களால் நிறைந்துள்ளது. வழக்கமான சைவத்தலங்களின் அமைப்பிலிருந்து சற்றே வேறுபட்டுள்ளது. இறைவிக்கென்று தனியே ஒரு கோயில் வலதுபுறம் அமைந்துள்ளது. இது வழக்கமான தலங்களைபோல முதலில் அமையப்பெற்று பின் கால மாற்றத்தில் சுற்றுச்சுவர் மறைந்து தனித்தனி சன்னதிகளாக அமையப்பெற்றிருக்கலாம் என்று ஒரு கூற்று இருந்தாலும், ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பெண் தெய்வத்துக்கும் சமமாய் ஒரு தனி கோயில் அமைத்திருப்பது இதன் சிறப்பாகும். கோபுரம் ஐந்து நிலை மாடங்களுடன் 85 அடி உயரம் உள்ளது.
கங்கை கொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த இரண்டாம் இராஜராஜன் அங்கிருந்து பெயர்ந்து தாராசுரத்திற்கு வந்து கட்டிய கோயிலே தாராசுரம் ஆகும். மூவருலாவில் சிறப்பிக்கப்படுகிறான். மூவருலா எனப்படுவது விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜசோழன் ஆகிய மூவருடைய புகழைப் பாடுவதாக அமைந்த பாடல். இதனை எழுதியவர் ஒட்டக்கூத்தர். கட்டிடக் கலை, சிற்பக்கலை, கலை நுணுக்கம் ஆகிய அனைத்து சிறப்புக்களும் கொண்ட ஒரு கோயில் தாராசுரம். முதன் முதலில் இதன் இறைவனுக்கு ராஜராஜேஸ்வரமுடையார் என்ற பெயர் வழங்கப்பட்டது. பின்னர் ஐராவதேஸ்வரர் என பெயர் கொண்டது. தக்கயாகப்பரணி இந்தக் கோயிலின் மண்டபத்தில் தான் அரங்கேற்றம் கண்டது.63 நாயன்மார்களின் சிற்பங்களும் இந்தக் கோயிலில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டில் இராஜராஜசோழனுக்கும் அவரது 5 மனைவியருக்கும் பள்ளிப்படை அமையப்பெற்றது என்ற செய்தி முதன் முதலாக அறியப்பட்டது.[2]
தல வரலாறு
இரண்டாம் இராஜராஜனின் காலத்தில் இராஜராஜேச்சுரம் என்று பெயரிடப்பட்டு, இன்று தராசுரமென மருவி வழங்கப்படுகிறது. ஐராவதேஸ்வரரின் துணைவி தெய்வநாயகி. இந்திரனின் வாகனமான ஐராவதம் என்கிற யானை துருவாச முனிவரின் சாபத்தால் அதன் வெள்ளை உருவம் மாறி கருமை நிறம் அடைந்தது. தன் நிறம் மாறியதால் வருத்தமுற்ற ஐராவதம் இத்தலத்திற்கு வந்து இங்கு எழுந்தருளிய சிவபெருமானை வணங்கி சாபத்திலிருந்து விடுதலை பெற்றதாகவும், அதனால்தான் இங்குள்ள இறைவனின் பெயர் ஐராவதேசுவரர் என்று வழங்கலாயிற்று என்றும் தல புராணம் தெரிவிக்கிறது.
இந்திரனின் வெள்ளை யானையான ஐராவதம் வந்து இங்கு வழிபாடு செய்ததால் இறைவனின் பெயர் ஐராவதேஸ்வரர். எமதர்மன் சாபம் பெற்றதால் கொண்ட உடல் எரிச்சல் தீர இங்குள்ள குளத்தில் நீராடி விமோசனம் பெற்றதால், அக்குளம் "எமதீர்த்தம்" என அழைக்கப்படுகிற்து.
இத்திருத்தலம் தொடர்பான மற்றொரு புராணமும் உள்ளது. மரணமற்ற பெருவாழ்வு வாழவும், தேவர்களை வெல்லவும் தாரன் என்ற அசுரன் இத்தலத்து இறைவனை பூசித்து, தவம் இருந்து தான் விரும்பிய அருளைப் பெற்றதால் இத்தலம் உள்ள இடம் தாராசுரம் என்றானது என்றும் கூறுகிறது.
நாதப்படிகள்
நுழைவாயிலில் நந்தியினருகே அமையப்பெற்றிருக்கும் பலி பீடத்தின் படிகள் இசையொலி எழுப்பும் நாதப்படிகளாக அமைக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு கனங்களிலிருக்கும் இந்த தூண்கள் தட்டும்போது சரிகமபதநீ என்ற சுரங்களைக் கொடுக்கின்றன.
ராஜ கம்பீர மண்டபம்
ராஜகம்பீரம் என்று அழைக்கப்படும் மகா மண்டபம் ஐராவதம் எனப்படும் யானைகளாலும் குதிரைகளாலும் இழுத்துச் செல்லப்படுவது போல் அமைக்கப்பட்டுள்ளது . இம்மண்டபத்திற்கு ஏறிச் செல்லும் படியில் யானைகள் ஒரு பக்கத்திலும் குதிரைகள் மற்றொரு பக்கத்திலும் தேரை இழுத்துச் செல்வதுபோல் உள்ள சிற்பத்தின் சக்கரம், இன்றுவரை இந்திய கலையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இதில் உள்ள சக்கரம் உள்ளிட்ட பல சிற்பங்கள் அந்நியர் படையெடுப்பால் சிதைக்கப்பட்டு தொல்லியல் துறையால் பிற்காலத்தில் திரும்ப சேர்க்கப்பட்டது.
குதிரைகள், யானைகள் பூட்டப்பட்ட ரதத்தின் அமைப்பில் இருக்கும் மண்டபம், நுணுக்கமான பல சிற்பங்களுடன் கூடிய தூண்களால் நிறைந்தது. தூண்களில் நர்த்தன கணபதியின் உள்ளங்கை அகல சிற்பம் உள்ளது. நாட்டியத்தின் முத்திரைகள் காட்டும் பெண்களின் சிற்பங்களும், வாத்தியக்காரர்களின் குழுக்களும், புராணக் கதைகளும் சில சென்டிமீட்டர் அளவிலேயே மிகவும் தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளன.
சிற்பங்கள்
கோயிலின் மகாமண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றிலும் நான்கு புறங்களிலும் பல புராணக் கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. மகாமண்டபத்தின் நுழைவாயிலில் காணப்படும் கண்ணப்ப நாயனார் மெல்லிய செருப்பு அணிந்திருக்கிறார். கருவரையில் இலிங்கத்தின் இருபுறமும் துவாரபாலகர்கள் காணப்படுகின்றனர். இது பிற சிவன் கோயில்களில் காணப்படாதது. சூர்ய லிங்கங்கள் (பதினொன்று), அபூர்வமான விலைமதிக்கமுடியாத சாலிக்கிராம லிங்கம் பிரகாரத்தில் காணப்படுகிறது. பிறகோயில்களில் இல்லாத, அதிசயமான சிற்பங்களும் இங்கு உண்டு. கையில் வீணையில்லாத சரஸ்வதி, பாம்புகளுக்கு அரசனான நாகராஜன், அன்னபூரணி என சாதரணமாகக் கோயில்களில் காணப்படாத சிற்பங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் வெளிச் சுவர்களில் மூன்றுமுகங்கள், எட்டுகைகளுடன் அர்த்தநாரீஸ்வரர்(சிவனும் பார்வதியும் ஒன்றுகலந்தது), மேல்கரங்களில் சிவனுக்குரிய மானும், கோடாலியும். கீழ்கரங்களில் அழகான புல்லாங்குழல் ஏந்திய சிவனும் குழலூதும் கண்ணனும் இணைந்த சிவன், காலை மடக்கி ஓய்வாக உட்கார்ந்திருக்கும் சிவன் எனப் பல சிற்பங்களும் உண்டு. குழலூதும் சிவன் இங்கு மட்டுமே காணப்படும் அரிய சிற்பம் என்று சரித்திர ஆய்வாளரான குடவாயில் சுப்ரமணியம் கண்டறிந்துள்ளார். மண்டபத்தின் மேல் பிரகாரத்தில் நாயன்மார்கள், 108 சிவனடியார்களின் உருவங்கள் ஆகியவை சோழர்களின் சைவப்பற்றுடையவன் இரண்டாம் இராஜராஜன் என்பதைக் காட்டும்.
சாளரங்கள்
பிரகாரங்களின் மற்றொரு அழகான அம்சம் அங்கு அமைக்கப்பட்டுள்ள காற்றோட்டமிக்க மண்டபங்கள். சதுர, செவ்வக, நீள்சதுர, வட்ட, பூக்கள் வடிவிலான குறுக்கும் நெடுக்கிலும் காற்று நுழையும்படி அமைக்கப்பட்ட ஒரே கல்லால் அமைக்கப்பட்ட கிரானைட் சாளரங்கள் அமைந்துள்ளன.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்