தைப்பூசம்









தைப்பூசம் என்பது உலகெங்கும் பரவி உள்ள சைவ சமயத்தைச் சார்ந்த தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும்..தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தை பூசம் ஒவ்வொரு வருடத்திலும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம். இது பூஸா மாதம் என்றும் அறியப்படும்) பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு (சுப்பிரமணியன் அல்லது கார்த்திகேயன்) எடுக்கப்படும் விழாவாகும். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப் படுகிறது.
தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.
முருகன் தமிழ்க்கடவுள்.ஆவார்.முருகன் என்றால் அழகு என்று பொருள். முருகன் தேவ சேனாதிபதி (தேவர்களின் சேனாதிபதி) ஆகையால் இவர் ஒரு போர்க்கடவுள் ஆவார். தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப் படுகிறது.
சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.
சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜரை இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இந்நாளிலேயே. இக்காரணங்களுக்காகவே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.
தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.
வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான் ஒளியானார். இதனைக் குறிக்கும் விதமாக அவர் ஒளியான வடலூருக்கு அருகில் உள்ள மேட்டுக்குப்பத்தில், தைப்பூசத்தன்று இலட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.
பழனியில்  தைப்பூசம்
பழனி (திருவாவினன்குடி - சக்திகிரி) முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவில் ஒரு மலைக் கோவிலாகும். மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான போகர் மூலவர் சிலையை நவபாஷாணத்தால் செய்து நிறுவியுள்ளார். இக்கோவிலில் தைப்பூசம் பத்து நாட்கள் நடைபெறும் முக்கிய விழாவாகும். ஏழாம் நாள் விழாவில் தேரோட்டம் நடைபெறும். முருகன் தன இரு துணைவியரான வள்ளி மற்றும் தெய்வயானையுடன் திருமணக்கோலத்தில் ரதவீதிகளில் தேரில் பவனி வருகிறார். பத்தாம் நாள் தெப்போற்சவம் நடைபெறுகிறது. தைப்பூசத்தன்று மக்கள் பழனியில் குவிவது வாடிக்கை. பகதர்கள் பல பகுதிகளிலிருந்து பாத யாத்திரையாக பழனிக்கு வருகிறார்கள். நேர்த்திக் கடனாக முருகனுக்கு காவடி எடுக்கிறார்கள். பக்தர்கள் பலநாட்கள் விரதமிருந்து காவடி எடுக்கிறார்கள். காவடி எடுப்பவர்கள் வரும் வழிகளில் பாடும் பாடல்கள் காவடிசிந்து என்று அழைக்கப்படுகின்றன. காவடிகளில் பல வகை உண்டு.
அலகு குத்துதல் - நாக்கு, கன்னம், கை, உடம்பின் பிற பகுதிகளில் சிறிய பெரிய வேல் வடிவமுடைய ஊசியால் குத்திக்கொண்டு கோவிலுக்கு வருதல். சிலர் சின்ன ரதம் போன்ற வண்டியை பக்தர்களின் முதுகில் கொக்கிகளால் இணைத்து இழுத்து வருகிறார்கள்.
சர்க்கரை காவடி - சர்க்கரை பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரபபடுகிறது.
தீர்த்தக் காவடி - கொடுமுடியிலிருந்து (கரூர் மாவட்டம்) காவிரி தீர்த்தம் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரபபடுகிறது.
பறவைக் காவடி - அலகு குத்தியவர் தொங்கியவாறு ஒரு வாகனத்தில் அழைத்து வரப்படுகிறார்.
பால் காவடி - பால்குடம் காவடியாக பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரபபடுகிறது.
மச்சக்காவடி - மீன் நீருடன் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரபபடுகிறது.
மயில் காவடி - மயில் தொகையால் அலங்கரிக்கப்பட்ட காவடி பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரபபடுகிறது.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்