திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில்

திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இச்சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆதிசேடன், திருமால், பிரம்மன் முதலானோர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 25வது சிவதலமாகும்.
தல வரலாறு
ஆதிசேஷன் வெளிப்பட்டப் பள்ளத்தில் காவிரியாறு பாய்ந்து பிலத்தினுள் (பாதாளத்தில்) அழுந்தியது. ஏரண்ட முனிவர் அப் பிலத்தினுள் இறங்க, காவிரி வெளிவந்து, வலமாய்ச் சுழித்துக்கொண்டு சென்ற காரணத்தால், இப் பெயர் பெற்றது.
அமுதம் பெறுதற் பொருட்டுத் தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபொழுது பூஜித்த வெள்ளைப் பிள்ளையாரை இந்திரன் இத் தலத்தில் எழுந்தருளுவித்து, வழிபட்டான்.
தல சிறப்புக்கள்
திருவிடை மருதூரானது மகாலிங்கத் தலமாக விளங்க, அதற்குரிய பரிவாரத் தலங்களுள் இது, விநாயகர் தலம். இங்குள்ள வெள்ளைப் பிள்ளையார் கோவில் மிகச் சிறப்பானது.மிகவும் வேலைப்பாடுடையது.
சோழர் காலக் கல்வெட்டுகள் உள்ளன.
அமைவிடம்
இது, கும்பகோணம்-தஞ்சாவூர் இரயில் பாதையில், சுவாமிமலை நிலையத்திலிருந்து வடக்கே 1-கி. மீ. தூரத்தில் உள்ளது. கும்பகோணம்- தஞ்சை நெடுஞ்சாலையில் இத்தலம் உள்ளது.
திருத்தலப் பாடல்கள்
திருநாவுக்கரசர் பாடிய பதிகம்
ஓத மார்கட லின்விட முண்டவன்
பூத நாயகன் பொற்கயி லைக்கிறை
மாதொர் பாகன் வலஞ்சுழி யீசனைப்
பாத மேத்தப் பறையுநம் பாவமே.
இளைய காலமெம் மானை யடைகிலாத்
துளையி லாச்செவித் தொண்டர்காள் நும்முடல்
வளையுங் காலம் வலஞ்சுழி யீசனைக்
களைக ணாகக் கருதிநீர் உய்ம்மினே..
திருஞானசம்பந்தர் பாடிய பதிகம்
விண்டெ லாமல ரவ்விரை நாறுதண் டேன்விம்மி
வண்டெ லாம்நசை யாலிசை பாடும் வலஞ்சுழித்
தொண்டெ லாம்பர வுஞ்சுடர் போலொளி யீர்சொலீர்
பண்டெ லாம்பலி தேர்ந்தொலி பாடல் பயின்றதே.
கிண்ண வண்ணமல ருங்கிளர் தாமரைத் தாதளாய்
வண்ண நுண்மணல் மேலனம் வைகும் வலஞ்சுழிச்
சுண்ண வெண்பொடிக் கொண்டுமெய் பூசவ லீர்சொலீர்
விண்ண வர்தொழ வெண்டலை யிற்பலி கொண்டதே..

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்