பெருவுடையார் கோயில்

 கி.பி. 985-ல் பெருவுடையார் கோயிலைக்  கட்ட ஆரம்பித்து, கி.பி. 1010-ல் நிறைவு செய்தார் ராஜராஜ சோழன். "கேரளாந்தகன் கோபுரம்' தாண்டி உள்ளே சென்றால், "ராஜராஜன் வாயில்' என்ற பெயரில் மற்றொரு ராஜ கோபுரத்தைக் காணலாம். அதனுள்ளே நுழைந்தால் பிரம்மாண்ட நந்தியெம்பெருமான் மண்டபமும், வலது புறத்தில் ஸ்ரீபிருஹன் நாயகி சந்நிதியும், நேரே 216 அடி உயரமுள்ள விண் முட்டும் கருவறை விமானத்துடன் கூடிய ஸ்ரீபிரகதீஸ்வரர் சந்நிதியும் காட்சியளித்து, நம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றன.
கருவறை விமானத்துக்கு, "தட்சிண மேரு' என்று பெயரிட்டுள்ளார் ராஜராஜ சோழன். வடக்கே மேருமலை உள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன. அதனால் இக்கருவறை விமானத்தை, "தெற்கில் உள்ள மேரு' என்றழைத்துள்ளார் பேரரசர். தட்சிண மேரு முழுவதற்கும் பொன் பூசிய தகடுகளை ராஜராஜ சோழன் வேய்ந்திருந்ததாகச் சொல்கின்றனர். இதை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பூரிக்கின்றது. ஆனால் பிற்காலப் படையெடுப்புகளில் இத்தகடுகள் களவாடப்பட்டிருக்கலாம்.
கருவறையில் பதிமூன்றடி உயரமும், அதற்கேற்ற ஆவுடையாரும் உடைய பிரம்மாண்டமான சிவலிங்கத்தை தரிசிக்கின்றோம். கருவறையின் பக்கவாட்டில் உள்ள புறச்சுவர்களும் பிரமிப்பூட்டும் வண்ணம் அமைந்துள்ளன. அவற்றில் அமைந்துள்ள பெரும் சிற்பங்களும், கீழ்ச்சுற்று அறையின் சுவரில் காணப்படும் சோழர் கால ஓவியங்களும், "தட்சிண மேரு'வில் உச்சியில் காணப்படும் 12 அடி உயர கலசமும், ஏன் ஆலயத்தின் அனைத்து அம்சங்களுமே ராஜராஜ சோழனின் பெரும் புகழை உள்ளத்தில் பதியும்படி உணர்த்துகின்றன.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்