இருக்குவேளிர்


இருக்குவேளிர்
விஜயாலயன் தோற்றுவித்த சோழப் பேரரசு தொடர்ந்து 400 ஆண்டு காலம் தமிழ்நாட்டை ஒரு குடைக்கீழ் ஆண்டது. இதற்குக் காரணம் அந்தச் சோழ மாமன்னர்கள் மட்டும் அல்ல. அவர்கள் காட்டிய திசைவழியில் ஈட்டிகளையும் வேல்களையும் ஏந்தி, தேர்பூட்டிப் படைநடத்தி உயிர்கொடுத்து வெற்றிக்கனி பறித்தோர் ஏராளம். ஏராளம். அவர்களில் சிலர் சிற்றரச மரபினர். இருக்குவேளிர், பழுவேட்டரையர், மழவரையர் எனப் பலகுறுநிலத்தலைவர்கள் படைதிரட்டி உதவியதால்தான் சோழமன்னர்களின் சாதனைகள் சாத்தியமாயின. அத்தகைய ஓர் சிற்றரசர்குடியே கொடும்பாளூரை தலைநகராகக் கொண்ட இருக்குவேளிர்குடி. இவர்களில் செம்பியன் இருக்குவேள், மகிமாலய இருக்குவேள், பூதிவிக்கிரமகேசரி எனப் பலதலைவர்கள் சோழர் படை நடத்தியவர்கள். இவர்கள் ஆண்ட தலைநகரம் கொடும்பாளூர் இன்றைய மதுரை – திருச்சி சாலையில் விராலிமலைக்கு சற்று முன்பாக கொடும்பாளூர்சத்திரம் என்ற பெயரில் இருக்கிறது. இவ்விடத்தில் இறங்கி சற்றே கிழக்காக இரண்டு கி.மீ தொலைவு சென்றால் கொடும்பாளூர் மூவர்கோயிலைக் காணலாம்.

இக்கொடும்பாளூர் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது. கண்ணகியும் கோவலனும், கவுந்தி அடிகளோடு தொடர்ந்த மதுரைப் பயணத்தின் போது ‘கொடும்பை மாநகர்க் கோட்டகத்தே’ தங்கியதாகச் சிலம்பிலே குறிப்பு உண்டு. கொடும்பையிலிருந்து மதுரைக்கு மூன்று பெருவழிகள் சிவபெருமானின் மூவிலைச் சூலம் போலப் பிரிந்து செல்வதாகவும் அக்குறிப்புக் கூறும். எனவே, நீண்ட காலமாகச் சோழநாட்டையும் பாண்டியநாட்டையும் இணைத்த பெருவழியில் அமைந்திருந்த கொடும்பாளூர் இருக்குவேளிரின் தலைநகராக அமைந்தது. அவர்கள் இங்கு தங்கள் ஆட்சியைத் தொடர்ந்து எல்லை காவலர்களாகவும் விளங்கினர். சோழர்களின் பல்லவருடனான போரிலும், ஈழப்போரிலும் பெரும்பங்காற்றினர்.

சோழ அரச குடும்பத்தினரோடு மண உறவும் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன்தான் பூதிவிக்கிரம கேசரி என்னும் பெரும்வீரன். இரண்டாம் பராந்தகன் சுந்தரச்சோழனின் சமகாலத்தவன். அவனுக்கு இருமனைவியர். கற்றளிபிராட்டி, வரகுண நங்கை என்பது அவர்களின் பெயர்கள். பூதிவிக்கிரமகேசரியும், அவன் மனைவியர் இருவரும் சேர்ந்து எடுத்த கோயிலே மூவர் கோயில் என்பது. மூன்றும் சிவன் கோயில்களே. மூன்றும் ஒரே விதமான அமைப்பில் சிறிய இடைவெளிவிட்டு ஒரே வரிசையில் கட்டப்பட்டவை. மூன்று கோயில்களையும் உள்ளடக்கிய மிகப்பெரிய திருச்சுற்றும் கட்டப்பட்டது. ஆனால், இன்று முதல் கோயிலும், திருச்சுற்றும் முற்றிலும் அழிந்து இரண்டு கோயில்கள் மட்டுமே அதுவும் விமானம்(கருவறை உள்பட) மட்டுமே எஞ்சியுள்ளன. பிறமண்டபங்கள் எல்லாம் அழிந்துபட்டன. இவை சோழர்கோவில் கலைவரலாற்றுக்கு முக்கிய சான்றுகளாய்த திகழ்கின்றன.

சோழர்களின் கோயில்கட்டடக் கலைப்பாணியை ஆராய்ந்தவர்கள் அதனை முற்சோழர்பாணி, இடைச்சோழர்பாணி, பிற்சோழர்பாணி என மூவகைப் படுத்துவர். இதில் முற்சோழர்பாணிக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாய்த் திகழ்வது மூவர்கோயில். அதிட்டான வரியில் விரிந்த தாமரை இதழ்களும், உருள் குமுதமும், அதற்கும் மேலாக வரிசையாக அமைந்த யாளி வரியும் அமைத்து ஒரு புதிய பாணியை அறிமுகப்படுத்தியுள்ளனர். இக்கோயில்களில் தேவகோட்டச் சிற்பங்களின் எழிலும் கலைநேர்த்தியும் கண்டோரைக் களிப்படையச் செய்வன. ஸ்தூபி வரை கல்லிலேயே கட்டப்பட்டுள்ளன. விமானத்தின் உள்கட்டமைப்பு தஞ்சைப் பெரிய கோயிலுக்கு முன்னோடியாய் அமைந்துள்ளது. இங்குள்ள அர்த்தநாரி, ஆடவல்லான், திரிபுராந்தகர் ஆகியோரின் கற்சிற்பங்கள் கண்டு மகிழத்தக்கவை. இங்குள்ள தமிழ், கிரந்தக் கல்வெட்டுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. பிற்காலத்தில் கொடும்பாளூர் மணிக்கிராமத்தார் என்ற பெயரில் தமிழகமெங்கும் வணிகம் செய்த குழுவினர் இவ்வூரைச் சேர்ந்தவர்களே. இதன் முக்கியத்துவம் கருதி இது வரலாற்றுச் சின்னமாகப் பராமரிக்கப்படுகிறது.

நன்றி
சாந்தலிங்கம், பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம், மதுரை.


Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்