தமிழ்நாட்டுக் கோயில் விமானம்

தமிழ்நாட்டுக் கோயில் விமானம் என்பது பொதுவாக ஆறு அங்கங்களைக் கொண்டுள்ளது, எனவே அது ஷடங்க விமானம் என அழைக்கப்படுகிறது. அவை:
அதிட்டானம்
பித்தி
பிரஸ்தரம்
கிரீவம்
சிகரம்
கலசம்
இந்த ஆறு அங்கங்களும் மனிதனுடைய பாதம், கால், தோள், கழுத்து, தலை, முடி (கிரீடம்) ஆகிய உறுப்புகளுக்கு இணையாகக் கொள்ளப்படுகின்றன.
அதிட்டானம்
விமானத்தின் ஆறு அங்கங்களில் முதலாவதாக அமையும் இந்த அதிட்டானம் ஒரு அடித்தளமாகும். இந்த அடித்தளத்தின் மேல்தான் மீதமுள்ள ஐந்து அங்கங்கள் ஒன்றன்மேல் ஒன்றாக அமைக்கப்படுகிறது. இந்த அதிட்டானம் பற்றிய செய்திகள் கட்டடக்கலை நூலான மானசாரத்தில் இடம் பெற்றுள்ளன. மானசாரத்தில் அதிட்டானம் 18 வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை
பாதபந்த அதிட்டானம்
உரசுபந்த அதிட்டானம்
பிரதிபந்த அதிட்டானம்
குமுதபந்த அதிட்டானம்
பத்ம சேகர அதிட்டானம்
புஷ்பபுஷ்கல அதிட்டானம்
ஸ்ரீபந்த அதிட்டானம்
மச்ச பந்த அதிட்டானம்
ஸ்ரெனி பந்த அதிட்டானம்
பத்மபந்த அதிட்டானம்
கும்ப பந்த அதிட்டானம்
வப்ரபந்த அதிட்டானம்
வஜ்ரபந்த அதிட்டானம்
ஸ்ரீபோக அதிட்டானம்
ரத்ன பந்த அதிட்டானம்
பட்டபந்த அதிட்டானம்
காக்ஸபந்த அதிட்டானம்
கம்பபந்த அதிட்டானம்
பித்தி
பித்தி என்பது கருவறையின் சுவர்ப்பகுதியாகும். இது அதிட்டானத்திற்கு மேலும் எழுதகத்திற்குக் கீழான பகுதியில் இடம் பெறும் பகுதியாகும். இது கால் என அழைக்கப்படும். இச்சுவர்ப்பகுதியில் கட்டடக்கலைக் கூறுகளாக அரைத்தூண், தேவகோட்டம், சாளரம், கோட்டபஞ்சரம், கும்பபஞ்சரம், கம்பபஞ்சரம் முதலான உறுப்புகள் இடம் பெறுகின்றன.
அரைத்தூண்
அரைத்தூண் என்பது சுவர்ப்பகுதியில் இடம்பெறும் அலங்கார வேலைப்பாட்டுடன் கூடிய கட்டடக்கலைக் கூறாகும். விமானத்தின் ஆறு அங்கங்களில் ஒன்றான சுவர்ப்பகுதி "கால்" எனப் பெயர் பெறுவதே இந்த அரைத்தூண் சுவர்ப்பகுதியில் இடம்பெறுவதுதான். இந்த அரைத்தூண் சதுரம், அரைவட்டம் என அமைவதோடு பதினாறு பட்டை வரை மடிப்புகளுடன் அமையும். இந்த அரைத்தூண் பல உறுப்புகளுடன் அமையும். அவை
சதுரப்பகுதி
நாகபந்தம்
கம்புப்பகுதி
மாலசுதானம்
பத்மபந்தம்
கலசம்
தாடி
குடம்
பத்ம இதழ்
பலகை
வீரகண்டம்
போதிகை
தேவகோட்டம்
தேவகோட்டம் என்பது மையத்தில் இடம்பெறும் பத்ராபகுதியில் கருவறை சுவர்ப்பகுதியின் தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய மூன்று பக்கங்களில் இடம்பெறும். தொடக்கக் காலத்தில் அர்த்த மண்டபத்தின் இருமருங்கிலும் தேவகோட்டங்கள் அமைக்கப்பட்டன. பின்னர் இம்மரபு அருகிப்போனது.
சாளரம்
கோயிற்கட்டடக் கலைக்கூறுகளில் சாளரங்கள் அலங்கார வேலைப்பாட்டிற்காகவும், பயன்பாட்டுத் தேவைக்காகவும் இடம் பெறும் ஒரு கூறாகும். சாளரம் என்பது கருவறையின் வெளீச்சுவரிலும் அர்த்தமண்டபச் சுவரிலும் இடம் பெறும்.
கோட்ட பஞ்சரம்
கோட்ட பஞ்சரம் என்பது ஓர் அலங்கார வேலைப்பாடாகும். இது கருவறைச் சுவர்ப்பகுதியில் தேவகோட்டத்தின் இருமருங்கிலும் அகாரை மற்றும் கர்ணப்பகுதிகளில் அமைக்கப்படும். இது அமைப்பில் தேவகோட்டத்தைப் போன்றிருந்தாலும் அதனின்று வேறுபட்டதாகும்.
கும்பபஞ்சரம்
கும்பபஞ்சரம் என்பது கீழிருந்து மேலாகக் கலசம், கால்ப்பகுதி பஞ்சரம் என அமையும். இந்த அமைப்பில் கும்பம் இடம் பெற்றிருந்தால் அது கும்பபஞ்சரம் எனப்படும்.
கம்பபஞ்சரம்
கும்பமின்றி அமைக்கப்பட்டிருந்தால் அது கம்பபஞ்சரம் எனப்படும்.
பிரஸ்தரம்
பிரஸ்தரம் என்பது எழுதகம், கபோதகம், யாளிவரி எனும் அமைப்புகளைக் கொண்டு விளங்கும். இந்தப் பிரஸ்தர யாளி வரிசைக்கு மேல் விமானதளங்கள் இடம் பெறும்.
எழுதகம்
கபோதத்தின் கீழ் இடம்பெறும் புடைப்புப் பகுதியே எழுதகம் எனப்படுகிறது. இந்த எழுதகப் பகுதியில் பூதகண வரிசை, அன்ன வரிசை, பத்ம வரிசை போன்ற சிற்ப அலங்கார வேலைப்பாடுகளில் ஏதேனும் ஒன்று இடம் பெறும். சில கோயில்களில் எழுதகம் அலங்கார வேலைப்பாடுகள் எதுவுமில்லாமல் வெறும் புடைப்புப் பகுதியாக மட்டும் இடம் பெறுவதுண்டு.
கபோதம்
கபோதம் எனும் கட்டடக்கலை உறுப்பானது பயன்பாட்டுத் தேவை கருதி எழுதகத்தின் மேல் அமைகிறது. இது கவிழ்ந்திருப்பதால் கபோதகம் என அழைக்கப்படுகிறது.இது கருவறைச் சுவரின் வெளிப்பகுதியில் மழைநீரானது படாமலிருப்பதற்காக அமைக்கப்படுவதாகும். கபோதமானது சிம்மமுக நாசியுடன் கூடிய கூடுகளுடன் அமையும். மேல் ஆலிலை வேலைப்பாடு இடம் பெறும். கொடுங்கை அமைப்பு இடம் பெறும் போது அதன் கீழ் எழுதகத்தில் தாழ்வாரக்கட்டை அமைப்பு காணப்படும்.
கூடுகள்
கபோதகங்களின் மேல் இடம்பெறும் கூடுகள் அலங்கார வேலைப்பாடு கருதி அமைக்கப்படுவதாகும்.
யாளிவரி
கபோதத்திற்கு மேல் இடம்பெறும் கட்டடக்கலை உறுப்பு யாளிவரி ஆகும். இந்த யாளிவரியில் யாளியானது முழுமையாகவோ அல்லது பாதியாகவோ காட்டப்பட்டிருக்கும். இதுவும் அலங்கார வேலைப்பாடாகவே அமைகிறது. இந்த யாளிவரிசையின் இறுதி முனைகளில் மகரங்கள் இடம்பெறும். சில கோயில்களில் யாளிக்குப் பதிலாக உத்திரக்கட்டை முன்வரிசையோ, அலங்காரமற்ற உத்திரமோ இடம் பெறும்.
கிரீவம்
பிரஸ்தரத்திற்கு மேல் அமையும் பகுதி கிரீவம் எனப்படும். இப்பகுதி சிகரத்தை விட சற்று உள்ளடக்கி இருக்கும். இக்கிரீவப் பகுதி சிகரத்தின் அமைப்பையே பெற்றிருக்கும். கிரீவமானது சதுரம் எண்பட்டை, வட்டம், நீள்சதுரம் என நான்குவகையான அமைப்புகளில் அமையும். இக்கிரீவப் பகுதியில் திசைக்கு ஒரு கோட்டம் அமையும். அதில் இடம் பெறும் சிற்பங்களைக் கிரீவக் கோட்டச் சிற்பங்கள் எனபர். இச்சிற்பங்கள் சைவக் கோயிலுக்கென்றும் வைணவக் கோயிலுக்கென்றும் தனித்தனி அமைப்புகளாக உள்ளன. முதலில் பொதுவாக அமைக்கப்பட்டாலும் காலப் போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சைவக் கோயிலில்
தெற்கே - தட்சிணாமூர்த்தி
மேற்கே - திருமால்
வடக்கே - பிரம்மன்
கிழக்கே - இந்திரன்
என அமையும். இது பொதுவான அமைப்பாகும். சில சைவக் கோயில்களில் மாற்றங்களிருக்கின்றன. வைணவக் கோயில்களில் நான்கு திசைகளிலும் திருமாலது உருவங்கள் இடம் பெறும் அமைப்பு காணப்படுகிறது. இதில் திருமாலின் அவதார வடிவங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
சிகரம்
சிகரம் என்பது கிரீவத்தின் மேலே அமையும் பகுதியாகும். இது நாகரம், வேசரம், திராவிடம் எனப் பெயர் பெறும். இச்சிகரம் வட்டமாக இருந்தால் "வேசரவிமானச் சிகரம்" என்றும், சதுரமாக இருந்தால் "நாகரவிமானச் சிகரம்" என்றும், எண்பட்டை அமைப்பிலிருந்தால் "திராவிடச் சிகரம்" என்றும் அழைக்கப்படுகிறது.
கலசம்
சிகரத்தின் மேல் ஆறாவது நிலையில் இடம் பெறும் உறுப்பு கலசமாகும். இது கல், கதை மற்றும் உலோகம் ஆகியவற்றால் அமையும். இது பொதுவாக கோயில் குடமுழுக்கு விழாவில் புனித நீரை ஊற்ற வேண்டி அமைக்கப்படுவதாகக் கொள்ளலாம். கோயிற்பணி முடிந்த பின்பு இறுதியில் கலசம் எனும் உறுப்பு சிகரத்தில் அமைக்கப்படும்.
அஷ்டாங்க விமானம்
கருவறைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி மூன்று கருவறைகளைக் கொண்ட விமானத்தை அமைப்பது அஷ்டாங்க விமானம் எனப்படுகிறது.
ஆதாரம்
டாக்டர் அம்பை மணிவண்ணன் எழுதிய "கோயில் ஆய்வுகளும் நெறிமுறைகளும்" நூல்


Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்