ஸ்ரீராகவேந்திரரின் மகிமை

மகான் ஸ்ரீராகவேந்திரரின் மகிமை!
ஒரு முறை, தஞ்சாவூரில் கடுமையான வறட்சி ஏற்பட, மகான் ஸ்ரீராகவேந்திரரின் அருளை வேண்டி நின்றார் தஞ்சை மன்னர். தனக்கு சந்நியாசம் தந்த நகரமான தஞ்சையில் எழுந்தருளினார் ஸ்ரீராகவேந்திரர்.
மகானின் திருப்பாதங்கள் பட்டதுமே மண்ணும் வளமாகும்; அவர் விரும்பினால் இயற்கையும் வளைந்து கொடுக்கும் என்பதற்குச் சான்றாக... மழை பொத்துக்கொண்டு ஊற்றியது, வறண்டிருந்த மண் வளமானது. பஞ்சம் நீங்கிட ஸ்ரீராகவேந்திரர் செய்த யாகத்தால், காய்ந்து கிடந்த உணவுக் கிடங்கும் நிரம்பத் தொடங்கியது.
மழை தருவித்து, மக்களைக் காத்த மகானுக்கு சிறப்பான பரிசு தர விரும்பினான், தஞ்சை மன்னன். குரு ஸ்ரீராகவேந்திரரின் பாதம் பணிந்து வணங்கி, விலை உயர்ந்த நவரத்தின மாலை ஒன்றைச் சமர்ப்பித்தான். மகான்கள் பொன்னுக்கும் பொருளுக்கும் என்றுமே மதிப்பளிப்பதில்லை அல்லவா? மகான் ஸ்ரீராகவேந்திரரும் அந்த மாலையை, தனக்கு முன்பிருந்த அக்னி குண்டத்தில் சேர்த்தார்.
இதனைக் கண்டு பதறிய மன்னன், ''குருவே, அது விலை மதிப்புமிக்க நவரத்தின மாலை... அதனை இப்படி அக்னியில் போட்டுவிட்டீரே" என்று கேட்டான். புன்னகைத்த மகான், அக்னி பகவானை வேண்டினார். நவரத்தின மாலை தீயிலிருந்து புதுப் பொலிவுடன் மீண்டும் அவர் கைகளுக்கு வந்தது.
''இந்தா வைத்துக்கொள்" என குரு ஸ்ரீராகவேந்திரர், மாலையினை மன்னனிடம் அளித்தார். தனது தவறை உணர்ந்த மன்னன் குருவின் பாதங்களில் விழுந்து வணங்கி, தன் அறியாமையை மன்னிக்கும்படி வேண்டினான். மன்னிப்புக் கேட்பவர்களை மன்னிப்பது தான், மகான்களின் இயல்பு அல்லவா? மகான் ஸ்ரீராகவேந்திரரும் மன்னனை மன்னித்தார். அந்த நவரத்ன மாலையினை, மூலராமருக்கு அணிவித்து பூஜைகளைத் தொடர்ந்தாராம்.

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்