காரமடை ரங்க நாதர் கோயில்

பச்சை மாமலையை போன்றவனும் பவள வாய் கமலச் செங்கண்களைக் கொண்டவனுமான பெருமாளை எண்ணுந்தோறும் வாழ்வில் நலம் கூடும். தமிழகத்தில் எண்ணற்ற வைணவத் தலங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக உள்ளன. அவற்றுள் கோவையிலிருந்து ஊட்டி செல்லும் சாலையில் காரமடையில் எழுந்தருளும் அரங்கநாதர் கோயிலும் ஒன்று.

இக்கோயில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. ரங்கநாயகித் தாயார், ஆண்டாள் உடனமர் ரங்கநாதர் இங்கு அருள் பாலிக்கிறார்.அக்காலத்தில் இப்பகுதியில் காரைச் செடிகள் மிகுந்து காணப்பட்டது. மாதம் மும்மாரி பெய்ததால் இங்கு நீர்மடைகளும் நிறைந்து காணப்பட்டன. எனவே இப்பகுதி "காரைமடை' என்றே அழைக்கப்பட்டது. தற்போது மருவி காரமடை என்று அழைக்கப்படுகிறது.

காரை புதர்கள் நிறைந்திருந்த இப்பகுதியில் தொட்டியர்கள் என்போர் காராம் பசுக்களை மேய்ப்பது வழக்கம். அதில் காராம் பசு ஒன்று மாலையில் வீடு திரும்பும்போது மடியில் பாலின்றி இருந்ததாம். இதனால் சந்தேகமடைந்த மாட்டின் உரிமையாளர் காரணத்தை அறிய முற்பட்டார். அதன்படி ஒரு காரைபுதருக்கு சென்று பசு பாலைச் சொரிவதைக் கண்டார். இதனால் ஆத்திரமடைந்தவர் கையில் வைத்திருந்த கொடுவாளால் புதரை வெட்டினார். டங் என்ற சத்தத்துடன் புதரிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. இதனைப் பார்த்த அவர் மயங்கிவிழுந்தார். அவருடைய கண் பார்வையும் பறிபோனது. உறவினர்கள் வந்து பார்த்தபோது ரத்தம் வந்த இடத்தில் கோயில் கட்டி வணங்கும்படி அசரீரி ஒலித்தது. அந்தப் பசுவின் உரிமையாளருக்கும் கண் பார்வை வந்தது.

இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் அவ்விடத்தில் சந்தனக் காப்பிட்டு பார்த்த போது சங்கு சக்ர தாரியாக பெருமாள் காட்சியளித்தார். வெட்டப்பட்ட இடத்தில் தற்போதும் சுயம்பு வடிவில் பெருமாள் காட்சியளிப்பது மெய்சிலிர்க்க வைக்கிறது.கோவையை ஆண்ட மதுரை மன்னன் திருமலைநாயக்கன் தன் பரிவாரங்களுடன் கோவையில் முகாமிட்டிருந்தார். அப்போது அவருக்கு ராஜபிளவை என்ற நோய் ஏற்பட்டது. அது குணமாக காரைமடையில் உள்ள ரங்கநாதனை வழிபடுமாறு பெரியோர்கள் கூறினர். அவரும் பிரார்த்திக்க அந்நோய் குணமானது. அதற்கு நன்றிக் கடனாக கருங்கற்களால் கோயில் எழுப்பி மஹாசம்ப்ரோக்ஷணம் நடத்தினான் திருமலைநாயக்கன்.

இதையடுத்து கடந்த 1982 ஆம் ஆண்டு பெரியோர்களின் உதவியுடன் கோயில் விரிவுபடுத்தப்பட்டு மஹாசம்ப்ரோக்ஷணம் நடந்தது. இந்தக் கோயிலுடன் தொடர்புடைய இன்னொரு வரலாறும் உண்டு. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கோவையிலிருந்து இவ்வழியாக மேட்டுப்பாளையத்திற்கு இருப்புப் பாதை அமைக்க பணி நடந்தது.

வெள்ளைக்காரப் பொறியாளர் ஒருவர் பலர் சொல்லியும் கேட்காமல் கோயிலை இடித்துவிட்டு பாதை அமைக்கத் திட்டமிட்டார். அன்றைய வேலை முடிந்து அவர் தூங்கும்போது வெள்ளைக் குதிரையில் ஏறி கோபத்துடன் வந்த பெருமாள் அந்தப் பொறியாளரை இருமுறை சாட்டையால் அடித்துள்ளார். தமது தவறை உணர்ந்த பொறியாளர் பாதையை மாற்றி அமைத்தார். அத்துடன் பிரதி உபகாரமாக கோயிலுக்கு ஒரு வெள்ளைக் குதிரை வாகனமும் செய்து கொடுத்து வணங்கினாராம்.

இத்தனை சிறப்பு மிக்க இத்திருத்தலத்தில் மூலவருக்கு வலது புறம் ரங்கநாயகித் தாயாரும்,இடதுபுறம் ஆண்டாளும் அருள்கின்றனர். தாயார் கோயிலுக்கு வலதுபுறம் பரவாசுதேவரின் சந்நிதியும், ஆழ்வார்களின் திருமேனிகளும் அமைந்துள்ளன. ஆண்டாள் சந்நிதிக்கு இடதுபுறம் வீர ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் ஆசி வழங்குகிறார். வலது புறம் பரமபத வாசல் உள்ளது. முன்புறம் ராமானுஜர் கோயில் அமைந்துள்ளது.

கோயிலின் முன்புறம் நெடிதுயர்ந்த கருடகம்பம் காட்சியளிக்கிறது. கோயிலின் இடது புற மூலையில் தல விருட்சமாக 700 ஆண்டுகள் பழைமையான காரை மரம் உள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த மரத்தில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கோயிலில் உள்ள இராமபாணத்தை வணங்கினால் பேய், பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைவார்கள். இங்கே பெரிய முன்மண்டபம் உள்ளது. அங்கு பெருமாளின் சேவகர்கள் எனப்படும் தாசர்கள் அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குகின்றனர். பந்த சேவை, தண்ணீர் சேவை, கவாள சேவை செய்பவர்களுக்கு நினைத்த காரியம் கைகூடும் என்பது இக்கோயிலின் தனிச்சிறப்பு ஆகும்.

இக்கோயிலில் சந்நிதி கொண்டுள்ள ரங்கநாயகித் தாயார் பெருமாளுடன் கோபித்துக் கொண்டு அருகில் உள்ள ஒரு மலையில் பெட்டத்தம்மனாக அருள்புரிகிறார். இவரை திருத்தேர் உற்ஸவத்தின்போது மட்டும் அழைத்து வந்து பெருமாளுடன் திருக்கல்யாணம் நடத்துகின்றனர். பின்னர் நான்கு நாட்கள் கழிந்து மீண்டும் மலைக்கே சென்று விடுகிறார்.இங்கே காரடையான் நோன்பு மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இதுதவிர வருடந்தோறும் மாசி மாதம் நடக்கும் 12 நாட்கள் உற்ஸவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பாஞ்சராத்ர முறையில் ஆகம விதிகளின்படி இந்த உற்சவம் நடக்கிறது. முதலில் திருவீதிகளில் துஷ்ட சக்திகளை அகற்றும் வகையில் கிராம சாந்தி நடத்தப்படுகிறது.அஷ்ட பலி முடிந்து துவஜாரோகணம் நடக்கிறது.

தொடர்ந்து மூன்று நாட்கள் பெருமாள் அன்னவாகனம், சிங்கவாகனம், அனுமந்த வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். பின்பு கருடசேவை நடக்கிறது. இதன் பின்பு ரங்கநாயகித் தாயாரான பெட்டத்தம்மனை அழைத்து வருகிறார்கள். அவருடனும், ஆண்டாளுடனும் ரங்கநாதர் யானை வாகனத்தில் எழுந்தருளுகிறார்.

அடுத்தநாள் மூவருக்கும் திருக்கல்யாண உற்ஸவம் நடக்கிறது. அடுத்த நாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதப் பெருமாள் மாலை 3 மணியளவில் திருத்தேருக்கு எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். மறுநாள் இரவு கொள்ளையடிப்பதற்கென வந்த திருமங்கை மன்னனை ஆட்கொண்ட நிகழ்ச்சியை நினைவு கூரும் வண்ணம் சுவாமியை குதிரை வாகனத்தில் பரிவேட்டைக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கு வேட்டை முடிந்த பின்னர் வாணவேடிக்கை நடக்கும். காலையில் சேஷ வாகனத்தில் தெப்பத்தேர் நடக்கிறது. இதன்பின்னர் மலையிலிருந்து வந்த பெட்டத்தம்மன் தாயார் பெருமாளுடன் கோபித்துக் கொண்டு மீண்டும் மலைக்கே சென்று விடுகிறார். இதனையடுத்து விழா நிறைவு பெறுகிறது.

உற்ஸவத்தையொட்டி சுற்றியுள்ள கிராமங்களில் தாசர்கள் பந்த சேவை எடுத்து அனைத்து பகுதிகளிலும் வலம் வருவர். இங்குள்ள கன்னிப் பெண்கள் கொடியேற்றும் தினத்திலிருந்து தேரோட்டம் வரை ஊருக்கு பொதுவான இடத்தில் கூடி தேர் கோலமிட்டு கும்மியடிப்பர். இறுதி நாளன்று அனைவரும் தேர் உற்ஸவத்தில் கலந்து கொள்வர்.

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்