அருள்மொழி வர்மன்


பராந்தக சுந்தர சோழரின் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் ராஜராஜன். இவரது இயற்பெயர், "அருள்மொழி வர்மன்' என்பதாகும். அன்றைய அரசியல் முறைப்படி இவரது அண்ணனாகிய, "இரண்டாம் ஆதித்தன்' என்பவரே பட்டத்து இளவரசராக இருந்தார். இவர் வீரபாண்டியனின் மெய்க்காப்பாளர்களால் கி.பி. 969ல் மர்மமான முறையில் கொல்லப்பட்டார் என்கின்றனர். அதன் பின்னர் தனது மகளான குந்தவை பிராட்டியாரிடமும், மூன்றாவது மகனான அருள்மொழி வர்மனிடமும் பெரும் நம்பிக்கை வைத்து வாழ்ந்தார் சுந்தர சோழர். "சோழ சாம்ராஜ்யத்தின் எதிர்காலமே அருள்மொழியால் வளப்படும்' என்றவர் உறுதியாக நம்பியதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் எதிர்பாராத விதமாக கண்டராதித்த சோழரின் மகனான உத்தமசோழர் என்பவர் வசம் சோழ நாட்டை ஒப்படைக்கும் சூழ்நிலை உருவானது. "ராஜராஜனை அரசாளும் மோகம் ஆட்டிப் படைக்கவில்லை' என்றே அவரது வரலாற்றினை நுட்பமாக ஆராய்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் காலம், அவரை தலைமை ஏற்க வைத்தது.
இங்கே ஒரு முக்கியமான விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். சுந்தர சோழரின் மூத்த மகனான ஆதித்த சோழரும் - கண்டராதித்த சோழரின் வாரிசான உத்தம சோழரும் வாழ்ந்த காலத்திலேயே அருள்மொழி வர்மருக்கு, மக்கள் செல்வாக்கு மகோன்னதமாக இருந்தது. அருள்மொழி வர்மரை "திருமாலின் அவதாரம்' என்றே அன்று சோழ அரசின் குடிமக்களில் பெரும்பாலானோர் கருதினர். திருவதிகையில் கிடைத்த கல்வெட்டொன்று, ""அருள்மொழியின் அங்கத்தில் காணப்படும் "சாமுத்ரிகா லட்சணங்கள்' அவரை மூவுலகும் ஆளும் திருமாலின் அம்சம் என்பதைத் தெளிவுப்படுத்துவதாய் உள்ளன'' என்றும் கருத்துபடப் பேசுகின்றது.
மக்களின் மகத்தான ஆதரவினால் சோழ சாம்ராஜ்யத்தின் அரசராக முடி சூட்டிக் கொண்டார், அருள்மொழி வர்மர் என்னும் முதலாம் ராஜராஜ சோழன். மக்கள், தன் மீது காட்டிய பேரன்பை மனதில் கொண்டே "குடவோலைத் தேர்தல்' முறையைத் தனது ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தினார் போலும் இந்தப் பேரரசர்!

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்