மருதுபாண்டியர்

மருதுபாண்டியரின் போர்ப் படைத் தளபதிகளில் முதன்மையானவர் இச்சப்பட்டி அமில்தார் சேக் உசேன்.
சிவகங்கை சீமையின் திருப்பத்தூர் கோட்டை வாயில். சுற்றிலும் மக்கள் வெள்ளம். ஒவ்வொருவர் முகத்திலும் ஆறாத் துயரம். ஒருவர் இருவர் அல்ல. ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ்ப் போராளிகளை தூக்கிலிட்டுக் கொண்டிருக்கிறார்கள் வெள்ளையர்கள்.
முதலில் அஞ்சாநெஞ்சன் சின்னமருது மக்கள் இதயம்துடிதுடித்தது.அடுத்தது சின்னமருதுவின் மூத்தமகன், உற்றார், உறவினர், போர் வீரர்கள், கடைசியாக பெரிய மருது இப்படி மருது பாண்டியர் வம்சத்தையே கூண்டோடு தூக்கிலிட்டனர். அழுவதைத் தவிர அந்த மக்களுக்கு எதுவும் செய்யமுடியாத நிலை. கடைசியாக சின்ன மருதுவின் மகன் பதினைந்து வயது பாலகன். வயதை காரணம் காட்டி அவனை தூக்கிலிடவில்லை.ஆனால் அவன் உடல் முழுவதும் சங்கிலியால் பிணைத்திருந்தனர்.கால்களில் இரும்பு குண்டை கட்டிவிட்டிருந்தனர். தந்தை,பெரியப்பா,சகோதரன்,பங்காளிகள் தூக்கில் தொங்கும் காட்சியை காண வைத்தது கொடுமை.அவனோடு சேர்த்து ஒரு மாவீர்னையும் உடல் முழுவதும் சங்கிலிகளால் பிணைத்து வைத்திருந்தார்கள். நடக்க முடியாத அளவிற்கு இருப்பு குண்டுகளை அந்த வீரனின் கால்களிலும் கட்டிவிட்டிருந்தார்கள்.
இந்த வீரனை விட்டு வைத்தால், துரைச்சாமியை வெள்ளையருக்கு எதிராக உருவாக்கி விடுவான் என்ற பயம் வெள்ளையருக்கு அதனால் அவனையும் சங்கிலியால் கட்டி நாடு கடத்த உத்தரவிட்டான் கர்னல் வெல்ஷ் என்ற வெள்ளை அதிகாரி.72 பேரில் இவர்கள் இருவருக்கு மட்டும் இரும்பு குண்டுகளைப் பிணைத்திருந்தார்கள்.
அந்த வீரன் இச்சப்பட்டி அமில்தார் சேக் உசேன். மருதுபாண்டியரின் போர்ப் படைத் தளபதிகளில் ஒருவர். முதன்மையானவர்.மாவீரன்புலித்தேவன், கட்டபொம்மன், மருதுபாண்டியர் காலங்களில் இஸ்லாமிய சகோதரர்கள் படைத் தளபதிகளாகவும் முக்கிய பொறுப்புக்களை வகித்ததாகவும் நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் கூறுகின்றன. ராமநாதபுரத்திற்கு ஜாக்சன் துரையைச் சந்திக்க கட்டபொம்மன் சென்ற போது, அவனோடு சென்றவர்கள் என்று,
"மம்மது தம்பியும் முகம்மது தம்பியும் மார்க்கமுள்ள தம்பி வரிசையுந்தான் தர்மகுணவான் இபுராமு சாகிபும் தம்பி இசுமாலு ராவுத்தனும்..." என்று வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் (பேரா.வானமாமலை பதிப்பு - 1971) கூறுகிறது. அவர்களில் முக்கியமானவராக, நாட்டுப்பற்றுள்ள இஸ்லாமிய வீரராக சின்னமருதுவின் படைத்தளபதி சேக் உசேன் குறிபிடப்படுகிறார்.
தெற்கே சின்ன மருதும், ஊமைத்துரையும், விருப்பாச்சி கோபால் நாயக்கரும், தீரன் சின்னமலையும் சேர்ந்து உருவாக்கிய திண்டுக்கல் புரட்சிப்படைக்கு யாரைத் தளபதியாக அறிவிப்பது என்று யோசித்து கொண்டிருந்தனர்.
‘நானே அதற்கு தலைமை ஏற்பேன்’ என்று திண்டுக்கல் புரட்சிப்படைப் படையின் எழுச்சி மிக்க வீரராக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டவர் இந்த சேக் உசேன் தான். வெள்ளையரை இந்த நாட்டை விட்டே விரட்ட, உருவான கூட்டுப்படையின் முதல் தாக்குதலுக்கு தலைமை தாங்குவது என்பது சாதாரண விஷயமல்ல. அதற்கு வீரம் மட்டுமல்ல விவேகமும், நாட்டுபற்று, நிர்வாகத்திறன் என்று சகல திறமையும் வேண்டும். அந்த செயலை செய்து தன்னை போராளியாக பிற்காலத்தில் வரலாற்று ஆசிரியர்கள் புகழும் அளவிற்கு உயர்ந்து நின்ற வீரர் சேக் உசேன்.
சின்னமருது பல வெற்றிகளைக் குவிக்க பக்கபலமாக இருந்ததால் இவர் மேல் வெள்ளையருக்குக் கோபம். கடைசியாக நடந்த காளையர்கோயில் போர் பல மாதங்களாக முடிவுக்கு வராமல் இருந்ததற்கு சேக் உசேன் போன்ற சின்னமருதுவின் படைத்தளபதிகளின் வீரமிக்க போராட்டமே என்று கருதினர். அதனால் போர் முடிந்ததும் சேக் உசேனை பொறி வைத்துப் பிடித்து வந்தனர். மலேசியாவிற்கு சொந்தமான பினாங்கு தீவுக்கு உடனே இவரை நாடு கடத்த உத்தரவிட்டார்கள்.
இரும்பு குண்டுகள் பிண்ணைக்கப்பட்ட நிலையில் சேக் உசேனும் துரைச்சாமியும் கப்பலில் ஏற்றப்பட்டனர். கப்பல் நகர்ந்தது. அது எங்கே போகிறது? என்றே அவர்களுக்கு தெரியாது. கப்பலில் இருந்தபடி தன் தாய்நாட்டையும் 15 வயது துரைச்சாமியையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தார் சேக் உசேன். துரைச்சாமிக்கு முடிந்த அளவு உதவ வேண்டும் என்று உறுதிபுண்டார். கடலிலே நாட்டுகள் பல கடந்தன.
சேக் உசேன், துரைச்சாமி உட்பட 72 பேரும் இந்த தீவில் கொண்டு வந்து விடப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு இது எந்த இடம் , இங்குள்ளவர்கள் என்ன மொழி பேசுபவர்கள் என்றே தெரியாது.
உடல் முழுதும் இரும்பு சங்கில்களால் பிண்ணைக்கப்பட்டிருப்பதால், இவர்கள் நடக்கும் போது ‘கிளிங்!’ ‘கிளிங்!’ என்று சத்தம் எழுந்தது.இவர்கள் தப்பிப் போகாமல் இருக்கவே இப்படியோரு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அங்குள்ளவர்கள், ‘கிளிங் கிளிங்” என்ற சத்தம் வந்ததால் இவர்களை ‘கிளிங்கர்கள்’ என்றே அழைத்தனர். இதுவே நாளடைவில் பிறமொழியைச் சேர்ந்தவர்கள் பினாங்கு சென்ற தமிழர்கள் அனைவரையும் ‘கிளிங்கர்கள்’ என்றே அழைத்ததாக வரலாறுகள் கூறுகின்றன.
சேக் உசேனுக்கு இரு கால்களிலும் இரும்பு குண்டுகள் இணைக்கப்பட்டிருந்தால், அவரால் சிறிது நேரம் கூட நடக்க முடியாது. என்றாலும் கடுமையான வேலைகளைக் கொடுத்து வாட்டினார்கள்.சரியாக உணவு தராமல் வாட்டி வதைத்தார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் உணவே தராமல் சித்திரவதை செய்யத் தொடங்கிவிட்டனர்.எந்த நாட்டில் இருக்கிறோம் என்பதே தெரியாமல் உணவு கூட தராமல் காலம் தள்ளியது கொடுமை. ஒரு நாள், தங்களை எந்த வெள்ளைக்கார அதிகாரி இந்தத் தீவிற்கு நாடு கடத்தச் சொல்லி உத்தரவிட்டானோ, அதே கர்னல் வெல்ஷ் துரை தன் மனைவி மக்களோடு விடுமுறையைக் கழிக்க இந்தத் தீவிற்கு வந்திருந்தான்.உடன் இருந்தவர்கள் எல்லாம் வெல்ஷை பார்த்து கருணை மனு கொடுக்க சொன்னார்கள்.காலில்உள்ள இரும்பு குண்டுகளை மட்டுமாவது அகற்றச் சொல்லச் சொல்லி மனு கொடுக்குமாறு அறிவுறுத்தினார்கள்.
நீண்ட மௌனத்திற்குப் பிறகு சேக் உசேன்,"என் தாய் மண்ணிற்காகப் போராடியவன் நான். என்னை விடுவிக்க இந்த இழிநிலை வெள்ளையர்களிடம் போய் கெஞ்சமாட்டேன்.செத்தாலும் சாவேனே தவிர அந்தச் செயலை மட்டும் செய்யமாட்டேன்" என்று வீராவேசமாகப் பேசியிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் உணவு இன்றி, இரும்பு குண்டுகளால் நகரக்கூட முடியாமல் யாரிடமும் எதையும் யாசகமாகக் கேட்காமல் சேக் உசேனின் உயிர் அந்த பினாங்கு மண்ணில் அடங்கியது.இவர்கள் பினாங்கு தீவிற்கு நாடு கடத்தப்பட்ட விஷயமே, கர்னல் வெல்ஷ் துரை,"எனது இராணுவ நினைவுகள்" என்ற நூலில் குறிப்பிட்ட பின்னர்தான் உலகிற்கே தெரியும்.
இனமொழி வேறுபாடின்றி தமிழ் மண்ணுக்காகப் போராடிய சேக் உசேன் போன்ற தன்மானம்மிக்க வீரர்களின் வரலாறுகள் இன்னும் அதிகளவில் வரவேண்டும். அதுவே நம் வீரமண்ணிற்கு நாம் செய்யும் வணக்கமாகும்.

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்