தமிழகத்தில் குற்றப்பரம்பரைச் சட்டம்

தமிழகத்தில் குற்றப்பரம்பரைச் சட்டம்-----தமிழ்நாட்டில் முக்குலத்தோராகிய கள்ளர், மறவர், பிரமலை கள்ளர், மறவர், வலையர், கேப்மாரி, அகமுடையர்... என 89 சாதிகள் குற்றப் பரம்பரைச் சட்டப்படி இப்பட்டியலில் இருந்தன. சில சாதியினர் குற்றப் பரம்பரையினர் என அறிவிக்கப்பட்டனர். அதில் குறவர், உப்புக் குறவர், ஆத்தூர் மேல்நாட்டுக் குறவர், சி.கே. குறவர், போன்ற ஜாதிகளும் அடங்காத, அடங்க மறுக்கும் ஜாதிகளும் குற்றப் பரம்பரைப் பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தன. கைரேகைச் சட்டம்
குற்றப் பரம்பரைப் பட்டியலில் கொண்டுவரப்பட்ட சாதி ஆண்கள் குறிப்பாக 16 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் காவல் கண்காணிப்பில் இருக்கவேண்டும். அவர்களிடம் நாள்தோறும் கைரேகை பதிவு செய்யப்படும். மேற்கண்ட சாதிகளில் குறிப்பாக கள்ளர், மறவர், அகமுடையோர் போன்ற சில சமூகத்தினர் கைரேகை சட்டத்தில் சேர்க்கப்பட்டனர். அகமுடையார்களிலும் விவசாய நிலம் வைத்திருந்த விவசாயிகள், நிலவரி கட்டுபவர்கள், நிரந்தரத் தொழில் செய்வோர், அலுவலர், நிரந்தரமாக ஒரே இடத்தில் வசிப்போர் ஆகிய பெரும்பான்மையோர் கைரேகைச் சட்டத்தில் இணைக்கப்படவில்லை.
1921 ஆம் ஆண்டில் கள்ளர்கள் தலைமையிலேயே கள்ளர்களைக் கண்காணிக்கும் கண்காணிப்பு கிராமங்களாக ‘கள்ளர் பஞ்சாயத்துக்கள்’ உருவாக்கப்பட்டன. உள்ளூரிலேயே அதே சாதியைச் சேர்ந்த கள்ளர் சமுதாயத்தைச் சார்ந்தவர்களும் இடம் பெற்றிருந்த ஒரு குழுவிடம் ஒரு பதிவேடு இருக்கும். அதிலேயே கைரேகை வைக்கலாம். ஆனாலும் பல நேரங்களில் அவர்கள் காவல் நிலையத்தில் தூங்குமாறும், அருகே இருக்குமாறும் கட்டாயப்படுத்தப்பட்டனர்.வெளியூர் செல்ல வேண்டுமென்றால் அந்தக் குழுவிடம் அடையாளச் சீட்டு வாங்கிச் செல்ல வேண்டும். தாம் செல்லும் ஊரில் இருக்கும் ஊர்ப் பெரியவர் குழுவில் இந்த அடையாளச் சீட்டைக் காண்பிக்க வேண்டும். அடையாளச் சீட்டு இல்லாதவர்கள் கைது செய்யப்படுவார்கள். அடையாளச் சீட்டு இல்லாமல் அடிக்கடி கைதாகும் நபர்கள் தனியாகப் பட்டியலிடப்பட்டு அவர்கள் நேரடியாக காவல்நிலையத்தில் கைரேகை வைக்க வலியுறுத்தப்பட்டனர்.
ராத்திரிச் சீட்டு
ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல நேர்ந்தால், ‘ராத்திரிச் சீட்டு’ பெற்றுச் செல்லவும் கட்டாயப்படுத்தப்பட்டனர். (இந்தச் சீட்டில் வ.எண், பெயர், குற்றப்பதிவு எண், குற்றப் புலனாய்வுத் துறை, குழு எண், வெளியே போவதற்கான காரணம், செல்லும் வழித்தடம், நேரம், திரும்பும் நேரம், பெருவிரல் ரேகைப் பதிவு ஆகியவை இருந்தன). மூன்று பிரதிகளைக் கொண்ட இந்த ராத்திரிச் சீட்டின் முதல் படி உள்ளூர் காவல் நிலையத்திலும், இரண்டாவது படி அந்த நபர் செல்ல இருக்கும் காவல் நிலையத்துக்கும், மூன்றாவது படி அந்த நபரிடமும் தரப்பட்டது. வழியில் எங்காவது இரவு தங்க நேர்ந்தால், அந்தக் கிராமத்தின் தலைவனது கையொப்பம் பெறப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தஞ்சைப் போராட்டம்
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலசாமி ரெகுநாத ராஜாளியார் என்பவர் 1911-லேயே ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை நேரில் சந்தித்துப் பேசி குற்றப் பரம்பரைப் பட்டியலில் இருந்து தஞ்சை, திருச்சி மாவட்ட கள்ளர்களை குற்றப் பரம்பரைப் பட்டியலில் இருந்து மீட்கப் போராடி வெற்றி பெற்றார்.
பெருங்காமநல்லூர்ப் போராட்டம்
1920 ஆம் ஆண்டு உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் என்ற கிராமத்தில் இச்சட்டத்தை எதிர்த்தும், ஆங்கில அரசாங்கத்தை எதிர்த்தும் கடுமையான போராட்டம் நடைபெற்றது. அதை அடக்குவதற்காக அரசாங்கம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 'மாயாக்காள்' என்ற பெண் உட்பட 17 பிரமலைக் கள்ளர் சமூகத்தினர் வீரமரணம் அடைந்தனர். குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து தமிழ்நாட்டில் நடைபெற்ற மிக முக்கியப் போராட்டம் இது.
ஜார்ஜ் ஜோசப்
அதன் பிறகு 1921 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக கேரளாவைச் சேர்ந்தவரும் மதுரையில் குடியிருந்தவருமான ஜார்ஜ் ஜோசப் என்ற வழக்குரைஞர் முதன்முறையாக கள்ளர் நாடு முழுமைக்கும் சுற்றுப் பயணம் செய்து மக்களைத் திரட்டி குறிப்பாகக் குற்றப் பரம்பரைச் சட்டத்திற்கெதிராக மட்டுமே போராட்டங்களை முன்னெடுத்தார். இவரை அப்பகுதி கள்ளர்கள் அப்போது ‘ரோசாப்பூ துரை’ என்றே அழைத்தனர். அவரது நினைவாக இன்று வரை குழந்தைகளுக்கு ரோசாப்பூ என்று பெயர் சூட்டுகின்றனர்.
அம்பேத்கர்
1933 இல் இந்திய அரசியல் சட்ட சீர்திருத்தக் குழு முன்னிலையில் நடந்த விசாரணையில் அம்பேத்கர் இச்சட்டத்தின் கொடுமைகளையும் தீர்க்கும் வழிமுறைகளையும் குறித்து எடுத்துரைத்தார். இந்த விசாரணையில்தான் மிக முக்கியமாக குற்றப் பரம்பரைச் சட்டத்தில் திருத்தம் செய்யவோ, குற்றப் பரம்பரையினர்க்கு மறுவாழ்வு அளிப்பதற்கோ, அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கோ இந்திய அரசின் ஆளுநரைவிட அந்தந்த மாகாண அரசுகளுக்கே அதிக அதிகாரம் இருக்கிறது என்பதை இந்திய அரசே பதிவு செய்தது.
பசும்பொன் முத்துரமலிங்கத் தேவர்
1927ம் ஆண்டு மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் குற்ற பரம்பரைச் சட்டம் அமலில் இருந்து வந்தது. அக்காலத்தில் அரசியலில் ஈடுபட்ட முத்துராமலிங்கம் இந்தச் சட்டத்தை நீக்குவதற்காக அவர் ஆதரவு திரட்டத் தொடங்கினார். கிராமம் கிராமமாகச் சென்று கூட்டங்களை நடத்தினார்.
இந்த நிலையில் 1929ம் ஆண்டு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 19 கிராமங்களைச் சேர்ந்த மறவர் சமுதாயத்தினரை இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வந்தனர். இதை எதிர்த்து மிகப் பெரிய அளவில் கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்தினார் முத்துராமலிங்கம். இந்த சட்டத்திற்கு மறவர் சமுதாயத்தினர் யாரும் அடிபணிய வேண்டாம் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அவர்களும் போராட்டத்தில் குதிக்க அந்தச் சட்டத்தைப் பகுதியாக விலக்கிக் கொண்டது அப்போதைய சென்னை மாகாண அரசு. இவரின் தொடர் முயற்சிகளால் 2000 கிராமங்கள் இந்தச் சட்டத்தின் கீழ் இருந்த நிலை மாறி 341 ஆக குறைந்தது
சட்டத்தைத் திரும்பப் பெறுதல்
இப்படிச் சட்டத்தின் பெயரால் நடந்த இக்கொடுமைகளை எதிர்த்து, 1930களில் இருந்தே பல விவாதங்கள் நடந்தன. 1936களில் பண்டித ஜவஹர்லால் நேரு, ‘சட்டப் புத்தகத்திலிருந்து இந்தச் சட்டம் நீக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்’ என்றார். இதே போல, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு சுப்பராவ், ஹரிஜன சேவா சங்கத் தலைவர் கி.சி. தக்கா, ப. ஜீவானந்தம், பி. ராமமூர்த்தி, முத்துராமலிங்கத் தேவர் ஆகியோர் வலியுறுத்தினர். அதன் விளைவால், 1947-இல் காவல் துறை அமைச்சராக இருந்த பி. சுப்பாராவ், இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுவதற்கான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். பேகம் சுல்தான் அம்ருதீன் போன்றவர்களால் இதற்கு முட்டுக்கட்டை போடப்பட்டபோதும், தீர்மானம் நிறைவேறியது; சுதந்திரத்திற்குப் பிறகு தானாகவே காலாவதியானது.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்