திருமயம் மலைக்கோட்டை


திருமயம் மலைக்கோட்டை 1676 ஆம் வருடம் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் ரகுநாத சேதுபதி என்னும் கிழவன் சேதுபதியின் (கிபி 1671-1710) காலத்தில் கட்டப்பட்டது.
வரலாறு
திருமயம் என்ற இந்த சிறு நகரம் பழமையும் நெடிய வரலாற்றையும் கொண்டு திகழ்கிறது. முத்தரையர்கள் கி.பி. 8-9-ஆம் நூற்றாண்டுகளில் திருமயம் உள்ளடக்கிய பகுதிகளை அரசாண்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள். தொடர்ந்து சோழ மன்னர்கள், பாண்டிய மன்னர்கள், விஜயநகர அரசர்கள், பராக்கிரம பாண்டிய விஜயாலயத் தேவர், சுந்தரபாண்டிய விஜயாலயத் தேவர் போன்ற பாண்டிய குறுநில மன்னர்கள் என்று பலராலும் ஆளப்பட்டுள்ளது இந்த ஊர். இராமநாதபுரம் சேதுபதிகள் 16 - 17 நூற்றாண்டுகளில் திருமயம் உள்ளடக்கிய பகுதிகளை தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்தனர். அடுத்து பல்லவர்களாலும், புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களாலும் ஆளப்பட்டுள்ளது இவ்வூர். கிழவன் சேதுபதியின் காலத்தில் இவ்வூர் சேதுபதி நாட்டின் வட எல்லையாகத் திகழ்ந்ததாம்.
மலைக்கோட்டை அமைப்பு
திருமயம் மலைக்கோட்டை ஒரு வட்ட வடிவில் அமைந்துள்ள கோட்டையாகும். கோட்டையைச் சுற்றி ஆழமான அகழிகள் இருந்ததற்கான அடையாளங்களை இன்றும் காண முடிகிறது. எனினும் இந்த அகழிகள் பல இடங்களில் தூர்ந்து போய்க் காணப்படுகின்றன. பாதுகாப்பு அரணாக அமைந்த வெளிச்சுற்று மதிகள் சிதைந்த நிலையில் உள்ளன. உள்சுற்று மதிகள் இன்றும் கட்டுக்கோப்பாக உள்ளன. ஏழு சுற்று மதில்கள் இருந்ததாக இங்கே காணப்படும் தொல்லியல் வரலாற்று அறிவிப்பு பலகைகள் சொல்கின்றன. திருமயம் மலைக்கோட்டைக்கு மூன்று நுழைவாயிகள் முறையே தெற்கு, தென் கிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் உள்ளன.
மலைக்கோட்டையின் உச்சியில் ஒரு பீரங்கி மேடையில் கிழக்கு நோக்கி ஒரு பீரங்கி
ஒரு உயர்ந்த குன்றின் உச்சியில் இயற்கை அரண்களுடனும் கலை நேர்த்தியுடனும் அமைந்துள்ள திருமயம் மலைக்கோட்டையின் உள்கோட்டையைச் சுற்றி உயரமான மதிற்சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. இன்றும் இந்தச் சுற்று மதில்கள் கட்டுக் கோப்பகத் திகழ்கின்றன. உள்கோட்டைக்கு ஊரின் மேற்குப் பகுதியிலிருந்து தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகின்ற நுழைவாயில்கள் உள்ளன. மலைக்கோட்டையின் உச்சியில் ஒரு பீரங்கி மேடையில் கிழக்கு நோக்கி ஒரு பீரங்கி நிறுவப்பட்டுள்ளது. இது போல கோட்டையின் தெற்கு நுழைவாயில் அருகே இரண்டு பீரங்கிகள் உள்ளன. இவற்றைத் தவிர மலைக் கோட்டையில் வேறு பாதுகாக்கப்பட்ட கட்டடங்கள் ஏதுமில்லை. எனினும் இக்கோட்டையிலிருந்து சேகரிக்கப்பட்ட உடை வாள்கள், பீரங்கிக் குண்டுகள், பீரங்கிகள், பூட்டுகள், சங்கிலிப் போர் உடைகள் போன்ற அரிய பல பொருட்கள் புதுக்கோட்டை மாவட்ட அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்