புண்ணியம்_தரும்_புனித_புரட்டாசி

#புண்ணியம்_தரும்_புனித_புரட்டாசி

‘பொன்னுருகக் காய்ந்து மண்ணுருகப்
பெய்யும் புரட்டாசியில்’ என்பார்கள்.
அதாவது, புரட்டாசி மாதத்தில் பகல்
பொழுதினில் தங்கம் உருகும்
அளவிற்கு கடுமையான வெயில் காய்ந்து,
இரவினில் மண் உருகி வழிந்தோடும் அளவில் நல்ல
மழை பெய்யும் என்பது இதன்
பொருள். இந்த மாதம் முழுவதும்
சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிப்பதால்
இதனை கன்னியா மாதம் என்றும் அழைப்பர்.
புரட்டாசி என்ற வார்த்தையைக் கேட்கும்போதே நம்
கண் முன் தோன்றுவது பெருமாளின்
திருவுருவமே. புரட்டாசி மாதம் முழுவதும்
பெருமாளுக்கு விரதம் இருப்போரும் உண்டு.
இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில்
நெற்றி நிறைய திருமண் இட்டு பாத்திரம்
ஏந்தி வீடு வீடாகச்
சென்று ‘நாராயணா, கோபாலா...’
என்று அவன் நாமத்தை உச்சரித்து பிக்ஷை எடுத்த
அரிசியினை அரைத்து அதில்
மாவிளக்கு மாவு இட்டு பெருமாளை சேவிப்பதை இன்றும்
கிராமப்புறங்களில் காணமுடியும். கடந்த 10
ஆண்டுகளுக்குள் நாகரிகம் என்ற
பெயரால் நகரங்களில் இந்தப் பழக்கம்
காணாமல் போய்விட்டது! நவகிரகங்களில்
மகாவிஷ்ணுவின் அம்சமாக உருவானவர்
புத பகவான். புதன் கிரகம் உச்ச பலம்
பெறுவது கன்னி ராசியில்.
எனவேதான் சூரியன் கன்னி ராசியில்
சஞ்சரிக்கும் புரட்டாசி,
பெருமாளுக்கு உரிய மாதம் என
பெரியவர்கள் வகுத்திருக்கிறார்கள்.
அதோடு பெரும்பாலும்
புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில்
சூரியனோடு புதனும் இணைந்திருப்பார்.
சூரியனுக்கு உரிய
பிரத்யதி தேவதை பசுபதி என்றழைக்கப்படும்
சிவபெருமான். புதனுக்கு உரிய
பிரத்யதி தேவதை நாராயணன். இவர்கள்
இருவரும் தெய்வீக மூலையாக கருதப்படும்
கன்னி மூலையில் இணைவது சங்கர-
நாராயணர் இணைவாகக் கருதப்படுகிறது.
சூரியநாராயண ஸ்வாமி என்று சூரியன்
பெயர் பெற்ற காரணமும் இதுவே.
இதன் மூலம் அரியும், சிவனும் ஒன்று என்ற
கருத்து நமக்கு நன்றாக புலப்படுகிறது.
எனவேதான் புரட்டாசி மாதத்தில் சைவ,
வைணவ பேதம் இன்றி பெரும்பாலான
இந்துக்கள் அசைவ உணவினை தவிர்த்து சைவ
உணவினையே உட்கொள்கின்றனர்.
அறிவியல் ரீதியாக ஆராய்ந்தால்
புரட்டாசி மாதத்தில் பகல்
பொழுதினில் காற்றினில் ஈரப்பதம்
குறைந்து உஷ்ணமாக உணர்வோம்.
அதோடு வெயிலும் கடுமையாக இருக்கும்.
இந்த நேரத்தில் அசைவ
உணவினை உட்கொள்வதால்
வயிறு சார்ந்த உபாதைகளுக்கு ஆளாவோம்
என்பதை உணர்ந்தே நம் முன்னோர்கள்
அசைவத்தை புரட்டாசியில் தவிர்த்தனர் என்றும்
சொல்வார்கள்.

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

பறவை நாச்சியார்

வாணர் குல அரசர்கள்