துளசியைப் பற்றி பாத்ம புராணம்

துளசியைப் பற்றி பாத்ம புராணம்

     1. எந்த இடத்தில் துளசிச் செடி வளர்ந்திருக்கிறதோ அங்கே
மும்மூர்த்திகளுடன் சகல தேவதைகளும் வாசம் செய்கிறார்கள். சூரியனைக்
கண்டதும் இருள் மறைவது போல் துளசியின் காற்றுப் பட்டாலே பாவங்களும்
ரோகங்களும் விலகி விடும். துளசி இலையைத் தெய்வப் பிரசாதமாக
உண்பவர்க்கு சகல பாவங்களும் தொலையும்.

     2. எவரது இல்லத்தில் துளசிச்செடிகள் நிறைய இருக்கிறதோ அந்த
இடம் புண்ணியமான திருத்தலம். அங்கு அகால மரணம், வியாதி முதலியன
ஏற்படாது. துளசிச் செடிகளைத் திருமாலின் அம்சமாக மதித்துப் பூஜை செய்ய
வேண்டும். துளசி தளத்தால் திருமாலை அர்ஜனை செய்து பூசிப்பவருக்கு
மறுபிறவி கிடையாது.

     அனுமார் இலங்கையில் சீதா தேவியைத் தேடி அலைந்தபோது ஒரு
மாளிகையில் துளசி மாடத்தையும் நிறைய துளசிச் செடிகளையும் கண்டு இங்கு
யாரோ ஒரு விஷ்ணு பக்தர் இருக்கிறாரென்று ஊகித்தாராம். அங்கு இறங்கி
விசாரித்தபோது அது விபீஷணரின் மாளிகை என்று தெரியவந்ததாம்.

     சீதை துளசியை பூஜை செய்ததின் பயனாக அவளுக்கு ராமபிரான்
கணவராக கிடைத்தாரென்று துளசி ராமாயணம் கூறுகிறது.

     விஷ்ணு பூஜைக்குப் பிறகு சந்தன தீர்த்தத்துடன் துளசி தளத்தைப்
பிரசாதமாகப் பெறுவது பக்தர்கட்கு உவப்பானதாகும். இதைச் சரணாமிர்தம்,
தீர்த்த பிரஸாதம், பெருமாள் தீர்த்தம் என்றெல்லாம் சிறப்பித்துக் கூறுவர்.
இதைப்பற்றி ஆகமநூல்,
     அகால மிருத்யு ஹரணம்
          ஸர்வ வியாதி விநாசனம்
     விஷ்ணோ பாதோதகம் பீத்வா
          புனர் ஜன்ம ந வித்யதே

     துளசி தளம் கலந்த ஸ்ரீமந் நாராயணனின் ஸ்ரீபாத தீர்த்தத்தை
பருகுபவர்களுக்கு மறு பிறப்பில்லை. அகால மரணம், உடல், உள்ளம் பற்றிய
வியாதிகள் எல்லாமே விலகும் என்கிறது ஆயுர்வேதம்.

     தன்வந்திரி, சரகஸம்ஹிதை, பாஸ்கரீயம் போன்ற மருத்துவ நூல்கள்
இதன் மேன்மையினையும் மருத்துவப் பயனையும் பேசுகிறது.

     துளசி எடுப்பதை ஸ்ரீவைஷ்ணவர்கள் திருத்துழாய்
எழுந்தருளப்பண்ணுதல் என்பர். துளசியை எடுக்கும்போது கீழ்க்கண்ட
ஸ்லோகத்தையும் கூறுவர்.

     விருந்தாயை துளசி தேவ்யை
          பிரியாயை கேசவஸ்யச
     கேசவார்த்தே சினோமி த்வாம்
          வரதா பவ சர்வதா

     “திருமாலுக்கு உகந்த ஒளஷதியே, விருந்தா, துளசி என்றெல்லாம்
போற்றப்படும் தேவியே உன்னை வணங்குகிறேன். ஸ்ரீமந் நாராயணனை
ஆராதிக்க உன்னைத் தொழுகின்றேன். எனக்கு என்றும் அருள்
பாலிப்பாயாக” என்பது இதன் பொருள். நம்மாழ்வார் திருவிருத்தத்தில்,
     வாராயின முலையாளிவள் வானோர் தலைமகனாம்
     சீராயின தெய்வ நன்றோயிது தெய்வத் தண்ணந்துழாய்
     தாராயினும், தழையாயினும் தன் கொம்பதாயினும் கீழ்
     வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே - 2530

     என்ற பாசுரத்தில் விஷ்ணுவுக்கு துளசி மாலை, தழை, கொம்பு, வேர்
நின்ற மண், ஆகிய ஏதாயினும் ஒன்றால் அர்ச்சிக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்