ஓர் எருக்கன் செடியின் உலகம்!
ஓர் எருக்கன் செடியின் உலகம்!
பொதுவாக நம்மில் பலருக்கு நமக்கு பயன்தரும் செடிகள் தவிர்த்து மற்றவை எல்லாம் தேவையற்றவை ஆபத்தானது என ஓர் எண்ணம் உண்டு. ஏன் நம்மில் பலர் நம் சுற்றியுள்ள இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள தேவையற்ற செடிகளை வெட்டி வீசுவதும் குப்பையோடு சேர்த்து எரித்து இடத்தை சுத்தம் செய்ததாக கருதி பெருமை கொண்டதும் உண்டு!
இது உண்மையில் சுத்தப் படுத்தும் வேலையா என்றால்? நிச்சயம் இல்லை. பிறகு ஏன் அப்படி செய்கிறோம் என்றால்? அறியாமை தான் வேறு என்ன நம் பண்பாட்டு அறிவை இழந்தது தான்!
நம்மை சுற்றி நம் சூழலில் வளரும் நம் மண்ணின் தாவரங்கள் பல பல்லுயிர்களின் இருப்பிடமாகவும் அதுபோக ஏதாவது ஓர் மருத்துவ குணமும் பெற்றுள்ளது. அதைப்பற்றி தெரிந்து கொள்ள முற்படுவோம் குறைந்தது அதன் பெயரையாவது அறிந்து கொள்வோம். இதில் உட்படாத மற்ற பிரதோச நிலையில் உள்ள நாடுகளில் இருந்து கொண்டு வந்த நம் சூழலுக்கு ஏற்காத ரப்பர், தூங்கு மூஞ்சி மரம்,தைலமரம்,சவுண்டல்(கூபாபுல்),சீமக்கருவேலம், பார்த்தீனியம்,கொளரீயா போன்றவை பற்றி அறிந்து அதை மட்டும் அகற்றவும்.
பல்லுயிர்களுக்கு நமக்கு பயன்படாத செடிகளே பெரிதும் உதவுகிறது. எடுத்துக்காட்டாக தேள் கொடுக்கு செடி செவ்வந்தி சிறகன் பட்டானையும் பசும்முன்னை செடி கருப்பு அழகி பட்டாம்பூச்சியும் அதிகம் ஈர்க்கிறது. இதைப்பற்றிய அறிவு நமக்கு இல்லாததால் அது நமக்கு தேவைப்படாத செடியாகிறது.
ஆனால் இவ்வுலகில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிருக்கும் செடிக்கும் அதற்கென தனித்துவம் மற்றும் நம் உணவுச் சங்கிலியை சமன் செய்கிற வேலையும் உள்ளது. எது இல்லையென்றாலும் அதன் சமனை சரி செய்ய இயற்கை நகர்வுகளை நடத்தும் :)
சரி எருக்கன் செடிக்கு வருவோம்!
கண்ணில் பால் பட்டால் கண் போய்விடும் என ஒதுக்கப்பட்ட செடி எருக்கன்; ஆனால் உண்மை என்னவென்றால் இது காற்றில் உள்ள தேவையற்ற தூசுக்களையும் நஞ்சு வாயுக்களையும் அதனுள் சேகரித்து வைக்கும் சிறந்த செயலை செய்கிறது. அதனால் அதன் கடும் கசப்புடைய பால் கண்ணில் படும் போது கடும் எரிச்சல் ஏற்படுகிறது. இது பிரதானமான பால் வரும் தாவரங்களுக்கு பொருந்தும். அந்த பால் உள்ள இலையை உண்டு வாழும் பூச்சிகளுக்கும் அந்த குணம் வருகிறது அதனால் அதை மற்ற பூச்சிகள் அதிகம் விரும்பி உண்பதில்லை !
இப்படிப்பட்ட செடியில் என்ன இருக்கும் என்றுதானே யோசிக்கிறீர்கள்! இயற்கை அதற்கும் பலவற்றை படைத்துள்ளது. அதை வெட்டு வீழ்த்தும் நாம் அதையெல்லாம் இந்த அவசர உலகத்தில் காண எங்கு நேரம்?
அதை காண்போம்!
கடந்த ஞாயிறு அடையாறு கழிமுக பகுதியில் பறவைகள் காண சென்று இருந்தோம். சென்னையில் பெய்து வரும் சமீபத்திய மழையால் அடையாற்றில் நீர் வரத்து கொஞ்சம் அதிகரித்து மணல் மேடுகளை நீர் மூடியிருந்ததாலும் ஆற்று நீர் கடலுக்குள் செல்லாமல் அடைக்கப்பட்டு இருந்ததாளும் பறவைகள் அதிகம் இல்லை. சரியென திரும்பி வரும் போது ஓர் எருக்கன் செடி கண்ணில் பட்டது. சட்டென "கதவைத்திறங்கள் அவை உள்ளே வரட்டும்" புத்தகத்தில் எருக்கன் செடிப் பற்றி ஜீயோ டாமின் அண்ணா எழுதிய "நானும் வாழும் பூமி" கட்டுரை ஞாபகத்திற்கு வந்தது. சென்று அந்த எருக்கன் செடியை கவனிக்கும் போது ஆச்சர்யங்களை பரப்பி வைத்து இருந்தது இயற்கை :)
அந்த எருக்கன் செடிப் புதரில் இருந்த பல்லுயிர்கள் பின்வருமாறு:
1) ஓவிய வெட்டுக்கிளி (Painted Grasshopper)
2) நண்டுஅ சிலந்தி (Crab spider)
3) சிறு கருச் சிலந்தி
4) கட்டெறும்பு
5) சுள்ளான் எறும்பு
6) சிறு வெட்டுக்கிளி
7) நடுத்தர மர வண்ண வெட்டுக்கிளி
8) ஓடக்காண்/ஓணான்
9) பெரிய தச்சர் ஈக்கள் (carpenter bee)
10) குயவன் குழவி (Potter wasp)
11) வெந்தய வரியண் பட்டாம்பூச்சியின் கூட்டுப் புழு (Plain tiger butterfly larvae)
12) ஆண் சிறு கொசுக்கள் -- தாவரத்தின் சாரை மட்டுமே உணவாக கொண்டு வாழ்பவை
பிகு: மேலே கூறிய தமிழ் பெயர்கள் தெளிவாக அறிந்தோர் பகிரவும்.
இவைப்போக பெயர் தெரியாத சிறு சிறு பூச்சிகளும் இப்பூச்சிகளை பிடித்து சாப்பிட அருகில் கொண்டலாத்தி, நாகணவாய் போன்ற பறவைகளும் செடியின் பூவில் இருக்கும் தேனைச் சுவைத்திட தேன் சிட்டுக்களும் சுற்றி இருந்தது :) நண்பர்கள் இது போன்ற புதர்களை அப்படியே விட்டு விடுவது பல்லுயிரை பெருக்கும் !
நம்மை சுற்றி இருக்கும் அனைத்து தாவரம் பல்லுயிர் பற்றி கவனித்து அறிவோம். இயற்கையோடு இணைந்து தற்சார்பாக வாழ்வோம்; வாழ்தல் இனிது :)
#மகிழ்வித்துமகிழ்
#எருக்கன்
#பல்லுயிர்
Comments
Post a Comment