கீழடி நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது



கீழடி நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது: இந்திய வரலாற்றையே மாற்றும் அகழ்வாய்வு முடிவுகள்

கீழடியில் மிகப் பெரிய பானை வனையும் தொழிற்கூடம் இருந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
மதுரை அருகே உள்ள கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் தமிழக சங்ககாலம் என்பது மேலும் 300 ஆண்டுகள் பழமையானது எனத் தெரியவந்திருப்பதாக தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

மதுரை நகரத்திற்கு தென்கிழக்கில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி கிராமத்தில் 2014ஆம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆகழ்வாய்வில் அங்கு, 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலிருந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்தப் பகுதியில் மேலும் ஆய்வுகளை மேற்கொள்ள கீழடி அகழ்வாய்வு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா விண்ணப்பித்திருந்த நிலையில், அவர் அங்கிருந்து அசாமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், அங்கு அகழ்வாய்வைத் தொடர மாநில தொல்லியல் துறை முடிவுசெய்தது. அதற்குப் பிறகு மாநில தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு தொடர்ந்து நடைபெற்றுவந்தது.

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட, பெண்கள் பயன்படுத்திய ஏழு பொன்னாபரணங்கள்.
அந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் மீது செய்யப்பட்ட ஆய்வின் முடிவுகள் தமிழக தொல்லியல் துறையால் வெளியிடப்பட்டுள்ளன. வியாழக்கிழமை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன், தொல்லியல் துறை செயலர் த. உதயசந்திரன் ஆகியோர் இதனை வெளியிட்டனர்.

2018ம் ஆண்டில் கீழடியில் தமிழக அரசால் நடத்தப்பட்ட 4வது அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களை வைத்து கிடைத்த முடிவுகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.

கீழடி நாகரீகத்தின் காலம் என்ன?
கீழடியில் கிடைத்த 6 பொருட்கள் ஆக்சலரேட்டட் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி (Accelerated mass spectometry) ஆய்வுக்காக அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள பீட்டா அனலிடிகல் லேப்பிற்கு அனுப்பப்பட்டன. அதில் கிடைத்த முடிவுகளின்படி, அந்தப் பொருட்கள், கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்தவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த இரு மட்டங்களுக்கு கீழேயும் மேலேயும் பொருட்கள் இருப்பதால், கீழடியின் காலகட்டம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு முதல் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டு வரையிலானது என தொல்லியல் துறை முடிவுக்கு வந்துள்ளது.

கீழடியில் கிடைத்த விளையாட்டிற்குப் பயன்படும் ஆட்டக்காய்கள்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வரலாற்றுக் காலம் என்பது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில்தான் துவங்குகிறது. ஆகவே கங்கைச் சமவெளியில் நடந்ததைப் போல, இரண்டாவது நகர நாகரீகம் இங்கு நிகழவில்லை எனக் கருதப்பட்டுவந்தது. ஆனால், கீழடியில் கிடைத்த பொருட்களை வைத்து, கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே இரண்டாவது நகர நாகரீகம் துவங்கியுள்ளது என்ற முடிவுக்கு தொல்லியல் துறை வந்துள்ளது. கங்கைச் சமவெளியிலும் இதே காலகட்டத்தில்தான் நகர நாகரீகம் உருப்பெற்றது.

கொடுமணல், அழகன்குளம் ஆகிய இடங்களில் கிடைத்த எழுத்தின் மாதிரிகளை வைத்து தமிழ் பிராமி எழுத்தின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டாகக் கருதப்பட்டது. ஆனால், தற்போது கீழடியில் கிடைத்த ஆய்வு முடிவுகளின்படி, தமிழ் பிராமி கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆகவே 2,600 ஆண்டுகளுக்கு முன்பாக கீழடியில் வாழ்ந்தவர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தார்கள், எழுதத் தெரிந்திருந்தார்கள் என்ற முடிவுக்கு தொல்லியில் துறை வந்துள்ளது.

கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை (53%) காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. ஆகவே கீழடியில் வாழ்ந்த சமூகம் பெரும்பாலும் ஆடு, மாடுகளை வளர்த்த சமூகமாக இருந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர் ஆய்வாளர்கள்.

கீழடியில் கிடைத்த ஓடுகள், செங்கற்கள், காரை ஆகியவை வேலூர் இன்ஸ்டிடடியூட் ஆஃப் டெக்னாலஜியில் ஆய்வுசெய்யப்பட்டன. அவற்றில் மண், சுண்ணாம்பு, இரும்பு, மெக்னீசியம், அலுமினியம் ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது
தமிழ் பிராமி எழுத்துகளில் ஆதன், குவிரன் ஆதன் என எழுதப்பட்ட பானை ஓடுகள்.
இங்கு நடத்தப்பட்ட ஆய்வுகளில் சுவர்கள், கட்டடங்களின் இடிபாடுகளும் கிடைத்தன. தரைகள் வழுவழுப்பான களிமண்ணால் மெழுகப்பட்டிருந்தன. கட்டடங்களைப் பொறுத்தவரை அவற்றின் சுவர்கள் கூரை வரை எழுப்பப்பட்டிருக்கவில்லை. மாறாக சுவர்களுக்கு அருகில் கம்புகள் நடப்பட்டு கூரைகள் போடப்பட்டிக்கின்றன.

இந்தியாவில் கிடைத்த வரிவடிவங்களில் சிந்து சமவெளியில் கிடைத்த வரிவடிவங்களே மிகப் பழமையானவை. சிந்துவெளி பண்பாடு மறைந்து தமிழ் பிராமி எழுத்து தோன்றியதற்கு இடையில் கீறல் வடிவில் ஒரு வரிவடிவம் இருந்ததாக தொல்லியலாளர்கள் கருதுகின்றனர். சிந்து சமவெளி எழுத்துகளைப் போலவே இவற்றின் பொருளும் இதுவரை முழுமையாகப் புரியவில்லை. செப்புக்கால பண்பாட்டிலும் தொடர்ந்து பெருங்கற்கால பண்பாட்டிலும் இக்குறியீடுகள் கிடைக்கின்றன.

கீழடியில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் வீட்டு உபயோகப் பொருள்கள்.
தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர், அழகன் குளம், கொற்கை, கொடுமணல், கரூர், தேரிருவேலி, பேரூர் உள்ளிட்ட இடங்களில் கிடைத்த பானை ஓடுகளில் இந்த வரிவடிவங்கள் கிடைத்துள்ளன. இலங்கையில் திசமஹரம, கந்தரோடை, மாந்தை, ரிதியகாம போன்ற இடங்களிலும் இது போன்ற குறீயிடுகள் கிடைத்துள்ளன. கீழடி அகழாய்வில் 1001 ஓடுகள் இத்தகைய வரி வடிவங்களுடன் கிடைத்துள்ளன
அதே போல, இந்த கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆத(ன்) உள்ளிட்ட பெயர்களும் முழுமையடையாத எழுத்துகளும் கிடைத்துள்ளன. இதில் ஆதன் என்ற பெயர், அதன் என்று குறிப்பிடப்படுகிறது. முற்கால தமிழ் பிராமியில், நெடிலைக் குறிக்க ஒலிக்குறியீடு இடும் வழக்கம் இல்லை என்பதால், இந்த தமிழ் பிராமி எழுத்துகள் காலத்தால் மிகவும் முந்தையவையாகக் கருதப்படுகின்றன.

இந்த எழுத்துகள் பெரும்பாலும் பானைகளின் கழுத்துப் பகுதியில் எழுதப்பட்டுள்ளன. பானையில் கிடைக்கும் எழுத்துகள் பெரும்பாலும் பானை செய்வோரால் சுடுவதற்கு முன்பாக ஈர நிலையில் எழுதப்படும். கீழடியில் பானைகள் சுடப்பட்டு, உலர்ந்த பிறகு எழுதப்பட்ட எழுத்துகள் கிடைத்துள்ளன. அவற்றின் எழுத்தமைதி (எழுத்தின் வடிவம், கையெழுத்து) ஒரே மாதிரியாக இல்லை. ஆகவே வெவ்வேறு ஆட்கள் இவற்றை எழுதியிருக்கலாம்
தமிழ் பிராமி எழுத்துகளுடன் கூடிய பானை ஓடுகள் கீழடியில் பெரும் எண்ணிக்கையில் கிடைத்துள்ளன.
கீழடியில் இரண்டு இடங்களில் 4 மீட்டர் அளவுக்குமேல் மிகப் பெரிய அளவில் பானை ஓடுகளின் குவியல்கள் கிடைத்ததை வைத்துப் பார்க்கும்போது அங்கு மிகப் பெரிய பானை வனையும் தொழிற்கூடம் இருந்திருக்கலாம் என்ற முடிவுக்கு தொல்லியல் துறை வந்துள்ளது.

மேலும் கீழடியில் நூல் நூற்கப் பயன்படும் தக்கிளி, தறிகளில் பயன்படுத்தப்படும் தூரிகை, தறியில் தொங்கவிடும் கருங்கல் போன்றவையும் கிடைத்திருப்பதால், இப்பகுதியில் வாழ்ந்தவர்கள் நெசவுத் தொழிலிலும் ஈடுபட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

கீழடியில் பெண்கள் பயன்படுத்திய தங்கத்தாலான ஏழு ஆபரணத் துண்டுகள் கிடைத்துள்ளன. பல்வேறு மதிப்புமிக்க கற்களால் ஆன வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இங்கு பல விளையாட்டுப் பொருட்கள் குறிப்பாக ஆட்டக்காய்கள், தாய விளையாட்டிற்கான பகடைக்காய்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன. இவை பெரும்பாலும் சுட்டமண்ணால் ஆனவை.

கீழடியில் கிடைத்த உறைகிணறு.
மேலும், வடமேற்கு இந்தியாவின் மகாராஷ்டிரம், குஜராத் போன்ற பகுதிகளில் பரவலாகக் காணப்படும் அகேட் மற்றும் கார்னீலியம் கற்களால் ஆன மணிகளும் கிடைத்துள்ளன. ரோம் நாட்டை சேர்ந்த அரிட்டைன் பானை ஓடு மண்ணடுக்கின் மேல் நிலையில் கிடைத்திருக்கிறது. இவை ரோம் நாட்டில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்தவை.
இங்கு ஒட்டுமொத்தமாக சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், 650க்கும் மேற்பட்ட விளையாட்டுப் பொருட்கள், 35 காதணிகள், பிற அணிகலன்கள் கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு தொடர்பான தொல்பொருட்கள் எவையும் தெளிவான முறையில் இதுவரை கிடைக்கவில்லையென தொல்லியல் துறையின் ஆய்வறிக்கை கூறுகிறது.

கீழடி எங்குள்ளது?
மதுரை நகரிலிருந்து தென்கிழக்கு திசையில் 13 கி.மீ. தூரத்தில் இந்த இடம் அமைந்திருக்கிறது. இந்த இடத்திலிருந்து வடக்கில் இரண்டு கி.மீ. தூரத்தில் வைகை நதி ஓடுகிறது. இந்த ஊருக்குக் கிழக்கே மணலூரும் தென்கிழக்கில் அகரம் என்ற ஊரும் மேற்கில் கொந்தகையும் அமைந்திருக்கின்றன.

கீழடியில் உள்ள தென்னந்தோப்பில்தான் முதன் முதலில் அகழ்வாய்வுப் பணிகள் நடத்தப்பட்டன. பெங்களூரில் உள்ள இந்திய அகழ்வாய்வுப் பிரிவு 2014 - 15, 2015- 16 ஆகிய ஆண்டுகளில் ஆகழ்வாய்வுகளை மேற்கொண்டது. இதற்குப் பிறகு தமிழ்நாடு அரசு 2017 -18ல் அகழாய்வுப் பணிகளைத் துவங்கியது.

கீழடியின் முக்கியத்துவம் என்ன?
தமிழ்நாட்டில் இதுவரை செய்யப்பட்ட அகழ்வாய்வுகளில் சுட்ட செங்கல்களால் ஆன கட்டடங்களுடன் நகர நாகரீகம் இருந்தது இங்குதான் முதன் முதலில் வெளிப்பட்டுள்ளது. தவிர, கி.மு. 3-ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2-ம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியே தமிழில் சங்க காலம் எனக் கருதப்படுகிறது. ஆனால், இங்கு கிடைத்த பிராமி எழுத்துகளை வைத்து சங்க காலம் மேலும் மூன்று நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்லலாம் எனக் கருதப்படுகிறது.

கங்கைச் சமவெளியில் இரண்டாம் நகர நாகரீகம் (சிந்து சமவெளி நாகரீகம் முதலாம் நகர நாகரீகம்) கிட்டத்தட்ட கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தோன்றியது. ஆனால், அதற்கு இணையான காலகட்டத்தில் தமிழகத்தில் எந்த நகர நாகரீகமும் இருந்ததற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைத்ததில்லை. முதன் முதலாக கீழடியில் அதே காலகட்டத்தில் நகர நாகரீகத்திற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஆகவே, இரண்டாம் நகர நாகரீக காலத்தில் தமிழகத்திலும் நகர நாகரீகம் இருந்ததாகக் கொள்ள முடியும்.

இந்த ஊரில் வாழ்ந்த மக்கள் வட இந்தியா, ரோம் போன்ற பகுதிகளுடன் வணிகத் தொடர்புகளை வைத்திருக்கக்கூடும் என்பதற்கு ஆதாரமாக பல வெளிநாடுகளைச் சேர்ந்த பானை ஓடுகள் கிடைத்துள்ளன.

"அடுத்தகட்டமாக கீழடிக்கு அருகில் உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் அகழாய்வு செய்ய இருக்கிறோம். ஆதிச்சநல்லூரிலும் புதிதாக ஆய்வுகளைத் தொடங்கவிருக்கிறோம். இதில் கொந்தகை ஆதிகால மனிதர்களைப் புதைக்கும் நிலமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இங்கு கிடைக்கும் எலும்புகளின் மரபணுவை ஆய்வு செய்ய மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடனும் ஹாவர்ட் மெடிக்கல் ஸ்கூலுடனும் இணைந்து செயல்படவிருக்கிறோம்" என மாநில தொல்லியல் துறையின் செயலாளர் த. உதயச்சந்திரன் கூறினார்.........செய்தி

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்