பூலித்தேவன்


1750 முதல் 1767 வரை ஏறத்தாழ 17 ஆண்டுகளில் பலமுறை வெள்ளைக்காரர்களோடு பூலித்தேவன் யுத்தம் செய்திருக்கிறார்.

*திருச்சியில் ராபர்ட் கிளைவ் உடன் போர் புரிந்ததாகப் “பூலித்தேவன் சிந்து”கூறுகிறது.

*அலெக்சாண்டர் கெரானுடன் 1755இல் போர் நடத்தியிருக்கிறார்.

*களக்காட்டில் மாபுஸ்கானுடன் 1755இல் போர் நடத்தியிருக்கிறார். அந்தப் போரில் மாபுஸ்கான் தோல்வியுற்றார். மாபுஸ்கானை அழைத்துவந்து தன்னுடைய மாளிகையிலேயே விருந்தாளியாக வைத்து மரியாதையோடு நடத்தினார் என்று வரலாறு கூறுகின்றது. அவருக்காக பள்ளிவாசல் கட்டி கொடுத்துள்ளார்

*திருவில்லிப்புத்தூரில் ரகீமுடன் 1755இல்போர் நடத்தினார்.

*திருநெல்வேலியில் 1756இல் போர் நடத்தினார்.

*நெல்கட்டும் செவலில் 1759இல் யூசுப்கான் என்று சொல்லப்படுகின்ற கான்சாகிப்போடு போர் நடத்தியிருக்கிறார்.

*வாசுதேவநல்லூரில் 1759 மற்றும் 1760 ஆகிய ஆண்டுகளில் யூசுப்கானுடன் மீண்டும் போர் நடத்தியிருக்கிறார்.

*1761இல் நெல்கட்டும் செவல், வாசுதேவநல்லூர் கோட்டைகளில் அதே யூசுப்கானுடன் மறுபடியும் போர் நடத்தினார்.

*1767இல் வாசுதேவநல்லூரில் ஆங்கிலத்தளபதி டோ னால்டு காம்பெல் உடன் நடத்திய போர்தான் இறுதிப் போராகும்.இவற்றைத் தவிர கங்கை கொண்டான், ஆழ்வார் குறிச்சி, சேத்தூர், கொல்லங்கொண்டான், ஊத்து மலை, சொக்கம்பட்டி, தலைவர் கோட்டை ஆகிய கோட்டைகளில் நடைபெற்ற போர்களிலும் பூலித் தேவன் பங்கு பெற்றார்.

மருதநாயகம் என்ற கான்சாகிப்பின் வரலாற்றை அறிந்து கொள்ள ‘கான்சாகிப் சண்டை’ என்ற கதைப்பாடல் பேராசிரியர் நத்தர் ஷா அவர்களுக்கு மிகவும் உதவி புரிந்துள்ளது.

அதே போல் முனைவர் ந. இராசையா அவர்கள் பூலித்தேவனின் வரலாற்றை எழுத பூலித்தேவன் ஓயில் கும்மிப் பாடல், பூலித்தேவன் சிந்து, பூலித்தேவன் கதைப் பாடல் முதலியன மிகவும் உதவிகரமாக இருந்திருக்கின்றன.வட்டாரம் வாரியாக வாழ்ந்த குறுநில மன்னர்களின் வரலாறுகளைத் தொகுக்கவும்.

இன்றைக்கு நாட்டார் பாடல்களும், நாட்டார் சொல் கதைகளும்; கதைப் பாடல்களும் மிகவும் உதவுகின்றன.நெல்கட்டும் செவலைச் சுற்றி உள்ள குகைகளின் பெயர்களும், ஊர்களின் பெயர்களும், பாதைகளின் பெயர்களும், குளங்களின் பெயர்களும், ஊர்களின் பெயர்களும் கூட மாவீரன் பூலித் தேவனின் வரலாற்றைச் சொல்லாமல் சொல்லும் சான்றாதாரங்களாகத் திகழ்கின்றன.

 அத்தகைய சில சொற்றொடர்களையும், அத்தொடர்களோடு தொடர்புடைய வரலாற்றுச் செய்திகளையும் இனிப் பார்ப்போம்.

வாசு தேவ நல்லூருக்கு மேற்கே, மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு குகையின் பெயர். பூலித்தேவர் குகை என்பதாகும். ஆங்கிலேயருடன் பூலித்தேவன் யுத்தம் செய்த காலத்தில் ஆங்கிலேயரின் படைகளை மறைந்திருந்து தாக்க, பூலித்தேவர், தன் படைகளுடன், இந்த இடத்தில் தங்கி இருந்தார். எனவேதான் இக்குகைக்கு பூலித்தேவர் குகை என்று பெயர் வந்தது என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றார்கள்.

இவ்வாறு ஊரை விட்டு வெகு தூரம் விலகி உள்ள இக்குகைக்கு அருகில் உள்ளபாறை ஒன்றின் பெயர், ‘சோறூட்டும் பாறை’ என்பதாகும். “பாறை எப்படிச் சோறூட்டும்?” என்று இப்பகுதி மக்களிடம் விசாரித்த போது பூலித்தேவனோடு தொடர்புடைய , ஒரு செய்தியை இப்பகுதியில் வாழும் மக்கள் சொன்னார்கள்.

பூலித்தேவரும், அவரது படையைச் சேர்ந்த போர் வீரர்களும், இக்குகையில் வாழ்ந்தபோது பகலெல்லாம் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டார்கள். இரவில் அடுப்பு அமைத்துத் தீமூட்டிச் சமையல் செய்தால் அத்தீயின் வெளிச்சம் எதிரிகளுக்கு, படைவீரர்கள் மறைமுகமாகத் தங்கி இருக்கும் இடத்தைக்காட்டிக் கொடுத்து விடும் என நினைத்து பாறையின் கிழக்குப் பகுதியில் உள்ள ஊர்களில் வாழ்கின்ற மக்களிடம், இன்ன இன்ன கிழமையில், இன்ன இன்ன ஊரில் வாழ்கின்ற மக்கள், சோறு சமைத்தும் குழம்பு வைத்தும், கரு, கரு என்று பொழுது மயங்கிய கருக்கல் நேரத்தில், சோற்றை, பெரிய, பெரிய நார்ப்பெட்டிகளில் தட்டியும், குழம்பை அந்த நார்ப்பெட்டியின் மேல் மண் சட்டிகளில் வைத்தும், குறிப்பிட்ட ஒரு பாறையின் மேல் வைத்துவிட வேண்டும் என்று மன்னர் பூலித்தேவர் உத்தரவிட்டிருந்தார்.

மன்னரின் உத்தரவுப்படியே, அப்பகுதி மக்களும், பகலெல்லாம் சமையல் செய்து, அந்திக் கருக்கல் நேரத்தில், சோற்றைப் பெரிய, பெரிய நார்ப்பெட்டிகளில் போட்டும், அதற்கு ஏற்ப குழம்பு கூட்டு முதலியவற்றை, பெரிய பெரிய மண்சட்டிகளில் ஊற்றியும் சுமந்து கொண்டு போய், குறிப்பிட்ட அப்பாறையின் மேல் வைத்துவிடுவார்கள்.

பொழுது இருட்டும் வரை, ஊர்க்காரர்களில் ஒன்றிரண்டு பேர், அச்சோற்றுக்குக் காவலும் இருப்பார்கள், காட்டில் வாழும் நரி, கரடி முதலிய மிருகங்கள் அச்சோற்றையோ, குழம்பையோ, கொட்டிவிடாமல் இருப்பதற்காக. பொழுது இருட்டிய பிறகு குகையில் தலைமறைவாகத் தங்கி இருக்கும்.

படை வீரர்களில் சிலர் வந்து பாறையின் மேல் ஊர் மக்களால் சமையல் செய்து வைக்கப்பட்டிருக்கும் சோற்றையும் குழம்பையும் தூக்கிக் கொண்டு செல்வார்களாம்.சோற்றுக்குக் காவலிருக்கும் ஆட்கள் தான் கொண்டு வந்திருந்த வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை முதலியவைகளையும் படைவீரர்களிடம் கொடுத்து அனுப்புவார்களாம்.

இப்படியாக தலைமறைவாக வாழ்ந்து ஆயுதப்பயிற்சி பெற்ற பூலித்தேவருக்கும், அவரின் படை வீரர்களுக்கும், தேவையான, சாப்பாடும், தாம்பூலமும் வெற்றிலை, பாக்கு முதலியவை இப்பாறையின் வாயிலாக ஊர் மக்களிடம் இருந்து சென்றது. எனவே இப்பாறையை இன்றும் இப்பகுதி மக்கள் “சோறு ஊட்டும் பாறை” என்ற பொருத்தமான பெயரால் அழைக்கின்றார்கள்

நெற்கட்டான் செவ்வலுக்குத் தென்புறமும் பெரிய ‘மேடு’ போன்ற ஒரு பகுதி உள்ளது. அந்த இடத்தை, மக்கள் ‘கான்சா மேடு’ என்று அழைக்கின்றார்கள். ஏன் அப்பகுதிக்கு அப்பெயர் வந்தது என்று விசாரித்த போது; இந்த இடத்தில்தான் கான்சாகிப் சுமார் பதினெட்டு பவுண்டு எடையுள்ள பீரங்கிகளை அமைத்து, நெற்கட்டுஞ் செவல் கோட்டை மீது தாக்குதல் நடத்தினார். எனவே தான் இப்பகுதிக்கு, ‘கான்சா மேடு’ என்ற பெயர் வந்தது என்றார்கள்.

ஆங்கிலேயர்களை எதிர்த்து பூலித்தேவர் போரிட்ட காலத்தில், நெல்கட்டுஞ் செவலுக்கு அருகில் உள்ள பாளையக்காரரான கொல்லங் கொண்டான் ஜமீனைச் சேர்ந்த வாண்டாயத் தேவன், பூலித் தேவருக்கு மிகவும் உதவியாக இருந்தார். இதனால் ஆங்கிலேயர்கள் கொல்லங்கொண்டான் மீதும் படையெடுத்துச் சென்றார்கள்.

ஆங்கிலேயப் படைகளால் வாண்டாயத் தேவனின் கொல்லங்கொண்டான் கோட்டை முற்றுகை இடப்பட்டது. அப்போது வாண்டாயத் தேவனின் மனைவி கர்ப்பிணியாக இருந்தாள் தேவைப்பிள்ளையைக் கருவில் சுமந்திருந்தாள்.

போர் நடைபெறும் போது ஒருவேளை தோல்வியைத் தழுவ நேரலாம், அல்லது வீர மரணத்தைத் தழுவ வேண்டிய நிலை வரலாம். எனவே, தன் குல வாரிசைக் கருவில் தாங்கி நிற்கும். தன் மனைவியை, அரண்மனையில் இருந்து வெளியேற்றி விட வேண்டும் என்று வாண்டாயத் தேவன் நினைத்தார்.

எனவே, தனக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரிய ஒருவரின் துணையுடன் தன்மனைவியை, ரகசிய வழி ஒன்றின் மூலம் அரண்மனையை விட்டு வெளியேறச் செய்தார்.இரவோடு, இரவாக, அரண்மனையை விட்டு வெளியேறிய வாண்டாயத் தேவனின் மனைவி, தன் நாட்டின் எல்லையில் உள்ள ஒரு ஊரில் போய் மக்களோடு மக்களாகக் குடியேறினார்.

எதிர்பார்த்தது போலவே, ஆங்கிலேயருடன் நடந்த யுத்தத்தில் வாண்டாயத் தேவன் கொல்லப்பட்டார். என்றாலும், அவரின் மனைவியான நாச்சியார், மனத்திடத்துடன் மக்களோடு மக்களாக எளிய வாழ்க்கை வாழ்ந்து, குறிப்பிட்ட காலத்தில் அழகான ஒரு ஆண் மகவைப் பெற்றெடுத்தாள்.

தாயையும் சேயையும், அவ்வூர் மக்கள் உதவிகள் புரிந்து பாதுகாத்து வந்தார்கள்.அரண்மனையில் பிறந்து வளர்ந்து ஒரு பாளையக்காரருக்கு மனைவியாக வாழ்க்கைப் பட்ட நாச்சியார், காலம் செய்த கோலத்தால் வெள்ளையரின் படை எடுப்பில் பஞ்சைப் பதாரி போல், ஏழைய, எளிய மக்களுடன் வாழ நேர்ந்த காரணத்தால், பிற்காலத்தில் அவ்வூரையே மக்கள் ‘பஞ்சம் பட்டி’ என்று அழைத்தார்கள் என்று அவ்வூரைச் சேர்ந்த தகவலாளர் ஒருவர் கூறினார்.கொல்லங்கொண்டான் பாளையக்காரரான வாண்டாயத் தேவனின் கோட்டைக்கு அருகில் இடர் தீர்த்த பெருமாள் கோயில் உள்ளது.

இக்கோயிலில் நாட்டியமாட மயிலாள், குயிலாள் என்ற இரண்டு தேவதாசிப் பெண்களை நியமித்திருந்தார் வாண்டாயத் தேவன்.ஆங்கிலேயர்களுடன் போர் தொடங்கிய காலத்தில், வெள்ளையர்களின் படை பலத்தை அறிந்து கொள்வதற்காகவும், உளவுபார்த்து வரவும் இவ்விரு நடன மங்கையர்களை வாண்டாயத் தேவன்.

அக்கம்பக்கத்துப் பாளையங்களுக்கும் அனுப்பி வைத்தார். இப்படி, கலைப்பணியையும், அரசியல் பணியையும் ஒருசேரச் செய்த சகோதரிகளுக்கு, இருகுளத்துப்பரவுகளை (குளத்துநீர் பாயும் வயல்களை) தானமாகக் கொடுத்துள்ளார்.

வாண்டாயத் தேவர் அக்குளங்கள் இன்றும் குயிலாள் குளம்; மயிலாள் குளம் என்று அவ்வூர் மக்களால் அழைக்கப்படுகின்றன.பூலித்தேவர் காலத்தில் இருந்து சிவகிரி உள்ளிட்ட தென்பகுதி பாளையக்காரர்கள் மேல் படை எடுத்து வர மருதநாயகம் என்ற கொமந்தான் கான்சாகிப், ஆற்காட்டு நவாப் மற்றும் ஆங்கிலேயர்கள், திருவில்லிபுத்தூர் கோட்டையைத்தான் ஒரு நுழைவு வாயிலாகப் பயன்படுத்தினார்கள். எனவே இன்றும் திருவில்லிபுத்தூரில் உள்ள அக்கோட்டை ‘தலைவாசல்’ என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது.

இக்கோட்டையைச் சுற்றிலும் உள்ள, கொம்மந்தான்புரம், மம்சாபுரம், கான்சா புரம் என்ற ஊரின் பெயர்கள், கொமந்தான்புரம் என்ற கான்சாகிப் என்ற முகம்மது யூசுப் கான் என்ற மருத நாயகம் இப்பகுதியில் படை எடுத்து வந்தபோது முகாமிட்டுத் தங்கி இருந்த காரணத்தால் சூட்டப் பட்டது என்று இப்பகுதியில் வாழும் தகவலாளர்கள் கூறுகின்றார்கள்.

படம் பூலித்தேவரின் மரபு வழி போர் ஆயுதங்கள்

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

பறவை நாச்சியார்

வாணர் குல அரசர்கள்