சோழர்காலச்_செப்பேடுகள்


#சோழர்காலச்_செப்பேடுகள்
#சிறிய_லெய்டன்_செப்பேடு

ஹாலந்து நாட்டின் லெய்டன் நகரிலுள்ள அருங்காட்சியத்தில் இரண்டு சோழர்காலச் செப்பேடுகள் உள்ளன, 21 இதழ்களை கொண்ட செப்பேடு பெரிய லெய்டன் செப்பேடு என அழைக்கப்படுகிறது
(நாகை பெளத்த விகாரம் கட்ட  ஆனைமங்கலம் என்னும் ஊரில் உள்ள நிலங்களை தானம் செய்ய இராஜராஜர் பிறப்பித்த ஆணை, இராஜேந்திரரின் காலத்தில் செப்பேட்டில் மாற்றிய விவரங்கள் இதில் உள்ளது)

3 இதழ்கள் கொண்ட சிறிய செப்பேடு, சிறிய லெய்டன் என அழைக்கப்படுகிறது, இது முதலாம் குலோத்துங்கன் காலத்தை சேர்ந்தது, இதுவும் ஆனைமங்கலத்தில் உள்ள பெளத்த விகாரத்திற்கு நிலம் கொடுத்தது பற்றியதாகும், பெரிய லெய்டன் செப்பேட்டில் உள்ளது மாதிரியே இதிலும் முத்திரை உள்ளது, அதில் இராஜசேசரி வர்மன் ஶ்ரீ குலோத்துங்க சோழனின் ஆணை எனப் பொறிக்கப்பட்டுள்ளது,

கி.பி 1009 ஆம் ஆண்டு நாகையில் பெளத்த விகாரம் கட்டிக்கொள்ள நிலங்களை ஒதுக்கினார் மாமன்னர் இராஜராஜர், இதனை அவரது மகன் இராஜேந்திரர் செப்பு சாசனமாக மாற்றிக் கொடுத்தார்,
முதலாம் குலோத்துங்கனின் இருபதாவது ஆட்சியாண்டில் (1090) இந்த இடத்தில் சில பிரச்சனைகள் வந்துள்ளது, இந்த இடத்தை சிலர் ஆக்ரமித்துள்ளனர், இதனால் அந்த இடத்தில் வரிகள் (பள்ளிச்சந்தம்) வசூலிக்க பெளத்த துறவிகளால் இயலவில்லை, இந்த சூழ்நிலையை உணர்ந்த கடாரத்து அரசன் இதை தீர்த்து வைப்பதற்காக தமது இரு தூதர்களை குலோத்துங்க சோழனிடம் அனுப்பி, பெளத்த விகாரத்திற்கு வரி கட்டாமல் நிலங்களை ஆக்ரமித்தவர்களை வெளியேற்றவும், தங்கள் உரிமைக்கு ஒரு செப்பு சாசனத்தையும் கேட்டு உள்ளனர், இதற்கு குலோத்துங்க சோழன் அனுமதி கொடுத்துதான் இந்த சிறிய லெய்டன் செப்பேடு,

குலோத்துங்க சோழன் ஆயிரந்தளியான ஆகவமல்ல குல காலாபுரம் என்ற ஊரிலுள்ள அரண்மனையின் திருமஞ்சன சாலை மண்டபத்தில் பள்ளிப்பீடம் காலிங்கராயன் என்ற பெயருடைய நாற்காலியில் வீற்றிருந்த போது இந்தச் செப்பேட்டை வழங்க ஆணை பிறப்பித்துள்ளார், தூதுவராக வந்த இருவரது பெயர்கள் ராஜவித்தியாத்ர ஶ்ரீசமந்தா, அபிமானதுங்கா ஶ்ரீ சமந்தா என்பதாகும்,

குலோத்துங்க சோழனின் வாய்மொழி உத்தரவு, சோழ அதிகாரியான இராஜேந்திர சிங்க மூவேந்த வேளாணுக்கு தரப்படுகிறது, அவரும் ராஜ வல்லப பல்லவராயனும் உடனடியாக செயல்பட்டு பெளத்த விகாரத்திற்கு சலுகைகள் அளிக்க முடிவு செய்யப்படுகிறது, அதன்படி நிலத்தை தற்போது அனுபவித்து வரும் காணியாளர்கள் என்ற குத்தகைதாரர்கள் நிலத்திலிருந்து வெளியேற வேண்டும், வரிகளை பணமாகவோ, பொருளாகவோ வசூலித்து கொள்ள புத்த விகாரத்திற்கு அனுமதி தரப்படுகிறது, பெளத்த விகாரத்திற்கு ஒன்பது கிராமங்களில் நிலங்கள் ஒதுக்கப்பட்டதையும், பெளத்த விகாரத்தின் நான்கு எல்லைகளும் இச்செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளது,

இந்தச் செப்பேட்டில் மறைமுகமாக சொல்லப்படும் விஷயம்

இராஜேந்திரர் காலத்தில் கடாரத்து நாட்டின் மீது போர் தொடுக்கப்பட்டது, இரு நாடுகளுக்கு இடையே பகை இருந்து வந்தது, இது அவரது மகன்கள் காலத்திலும் தொடர்ந்துள்ளது, வீரராஜேந்திரர் காலத்தில்  அவரிடம் ஆதரவு கேட்ட கடாரத்து அரசர் ஒருவருக்காக சோழப்படை கடாரம் சென்றதாக அவரது மெய்கீர்த்தியில் உள்ளது, ஆனால் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் இந்தப் பகை நீங்கியதாக இந்த செப்பேடின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

கார்த்திகேயபாண்டியன்

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்