கள்ளர் குல தொண்டைமான்கள்

கள்ளர் குல தொண்டைமான்கள்
=============================

இரண்டாயிரம் வருடங்களாக தொடர்ச்சியாக பழந்தமிழ்நாட்டை நிலைத்து ஆட்சி புரிந்தவர்கள் தொண்டைமான் அரச குலத்தை சார்ந்தவர்கள். அவர்களில் சிறப்புடன் விளங்கியவர்கள்

1) தொண்டைமான் இளந்திரையன்
2) வண்டையர்கோன் கருணாகரத் தொண்டைமான்
3) அறந்தாங்கி தொண்டைமான்
4) புதுக்கோட்டை தொண்டைமான்
5) குளத்தூர் தொண்டைமான்
6) திருநெல்வேலி தொண்டைமான்

தொண்டைமான் இளந்திரையன் :
*********************************************

காஞ்சி பண்டு அருவாநாடு எனப் பெயர்பெற்று விளங்கிற்று அந்தநாட்டில் வாழ் மக்கள் அருவாளர் என அழைக்கப் பெற்றனர் (அருவாத்தலைவன், அருவாத்தலையன், அருவாநாடன், அருமைநாடன், அருமடான், அருவாநாட்டான், அருமநாட்டான் என்னும் பட்டங்களையுடைய கள்ளர் குடியினர் மன்னார்குடி பைங்காநாடு என்ற ஊரில் வாழுகின்றனர். அருவாநாட்டான், அருவாத்தலையன் என்னும் பட்டங்கள் அருவாநாட்டு வெற்றிகளோடு சம்பந்தப்பட்டுள்ளது).

கரிகாலன் காலத்திற்குப் பிறகு, அந்நாடு, தொண்டையர் என்பார் ஆளுகைக்கு உட்பட்டதால், அது தொண்டையர் நாடு அல்லது தொண்டைநாடு என்ற பெயர் பெற்றது; திரையன் என்பானொருவன் தோன்றி, பவத்திரி என்ற ஊரை உரிமைகொண்டு வேங்கடத்தைச் சூழ உள்ள அந்நாட்டை ஆண்டு வந்தான். இவனே பெரும்பாணாற்றுப்படை பெற்ற தொண்டைமான் இளந்திரையன்.

தொண்டைமான் இளந்திரையனையும் சான்றோர் “தொண்டையோர் மருக”என்பர். தொண்டை நாட்டுக்கு வடக்கெல்லை வேங்கடமாகும்.

“வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர், இனமழை தவழும்
ஏற்றரு நெடுங்கோட்டு, ஓங்குவெள் ளருவி வேங்கடம்”(அகம். 213)

எனச் சான்றோர் கூறுதல் காண்க. இதற்குத் தென்னெல்லை பெண்ணையாறும், மேலெல்லை வடார்க்காட்டையும் சேலமா நாட்டையும் பிரிக்கும் சவ்வாது மலைத்தொடருமாமென்பது கல்வெட்டுக்களால் அறிகின்றோம்.

இத்தொண்டையரை, “உரவுவாள் தடக்கைக் கொண்டி யுண்டித் தொண்டை யோர்”(பெரும்பாண். 454-5) என்றும்,

“பொருவார் மண்ணெடுத் துண்ணும்
அண்ணல் யானை வண்டேர்த் தொண்டையர்”(குறுந். 240) என்றும்,

சான்றோர் கூறுவதை, நோக்கின் இத்தொண்டையர் யானைப்படை கொண்டு பெரும்போருடற்றும் சிறப்புடையரென்பது தெளிவாம்.

தொண்டைமான்களில் இளந்திரையன் என்பவன் மிக்க சிறப்புடையவன். இவனைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார்,
“இருநிலங்கடந்த திருமறு மார்பின், முந்நீர் வண்ணன் பிறங்கடை அந்நீர்த், திரை தருமரபின் உரவோன் உம்பல்”(பெரும்பாண்.29-31) என்பதனால்,

இவன் முன்னோன் திரைகடல் வழியாகப் போந்து தொண்டை நாட்டுக்கு வேந்தனாயினானென்றும், அவன் வழித் தோன்றல் இவனென்றும் அறியலாம்.

வென்வேற்கிள்ளி யென்னும் சோழனுக்கும், நாகநாட்டு வேந்தன் மகள் பீலிவளை யென்பாட்கும் பிறந்து, கடலில் கலமூர்ந்து வருங்கால் அது சிதைந்ததாக, இவன் திரையில் மிதந்து கரை யடைந்தானென மணிமேகலை கூறுகிறது.

கரிகால் சோழன் வழி வந்தவன் கிள்ளிவளவன். இவனுக்கு நெடுமுடிகிள்ளி, மாவண்கிள்ளி, வடிவேற்கிள்ளி என்ற பெயர்களும் உண்டு. கிள்ளிவளவன் தன் இளமைக்காலத்தில் கடல் கடந்து நாகர்களின் நாடாகிய நாகர் நாட்டை அடைந்தான். நாகர் நாட்டு மன்னன் வளைவணன் மகளாகிய பீலிவளை என்னும் இளவரசி நாக கன்னிகையை மணம் புரிந்தான். நாகர் மகளுக்கும் சோழன் கிள்ளிவளவனுக்கும் பிறந்த இளம்குமரன் தொண்டை கொடியை அடையாளமாக அணிந்து கடலில் மிதந்து சோழநாட்டின் கிழக்கு கரையை அடைகிறான். சோழ ராஜ புத்திரனை கடலின் திரை (அலைகள்) கொண்டு வந்தமையால் திரையன் என்று பெயரிடப்படுகிறான். மேலும் தொண்டைக் கொடியை அடையாளமாக அணிந்து வந்தமையால் தொண்டைமான் இளந்திரையன் என்று அழைக்கப்பட்டான்.

சோழ இளவரசனாக மகுடம் சூடியபின்னர் சோழநாடு இரண்டாகப்பிரிக்கப் பட்டு கிழக்கே கடலும்,மேற்கே பவளமலையும், வடக்கே வேங்கடமும் தெற்கே பெண்ணையாற்றையும் எல்லைகளாக கொண்டு தொண்டை மண்டலம் உருவாக்கப்பட்டு காஞ்சிமாநகரை தலைநகராக கொண்டு தொண்டைமான் இளந்திரையன் அரசுபுரிந்தான்.

சிறந்த வீரமும் கொடைநலமும் உடையவன். கவி பாடுவதிலும் வல்லவன் இளந்திரையம் எனும் நூலையும் இயற்றியுள்ளான். இவன் பாடிய பாடல்கள் பல புறநானூற்றிலும்,நற்றிணையிலும் கானப்படுகின்றன. சங்க இலக்கிய நூலான பெரும்பாணாற்றுப்படை இவனைப் பற்றி புலவர் கடிலூர் உருத்திரங் கண்ணனார் பாடியதாகும். குறும்பர்களின் கொட்டத்தை அடக்கி,காடுகளை வெட்டி, நிலத்தை திருத்தி,வளம் பெருக்கி தொண்டை நாட்டை வலிமைமிக்க நாடாக்கினான்.

இவன் ஆட்சியில் தொண்டைநாடு சான்றோருடைத்து என்று ஔவையால் புகழப்பட்டது. இளந்திரையன் நாகநாட்டில் இருந்து சோழநாட்டு கிழக்குக்கரையில் ஒதுங்கிய இடமே நாகர்பட்டினம் என்றழைக்கப்பட்டு இந்நாளில் நாகப்படினம் என்றழைக்கப்படுகிறது.  காஞ்சி மாநகரம் (இன்றைய காஞ்சிப்புரம்) 181 பெரும் திருக்கோயில்களை கொண்டு மாமதிற்கச்சி எனவும் கோயில் மலிந்த காஞ்சி எனவும் அழைக்கப்ப்டுவதும் வரலாராகும். தொண்டைமான் இளந்திரையன் பின் நாளில் ஆத்தொண்டை சக்கரவர்த்தி என்றும் அழைக்கப்பட்டான்.

‘ஆதொண்டை’ என்னும் கொடி ஒன்று உண்டு, ஆடி அம்மாவாசை விரதம் இருப்போர் இக்காலத்தில் தொண்டங்காயை உண்டுகொண்டு விரதம் இருப்பர். இந்த ஆதொண்டை என்னும் சொல் முதலெழுத்து குறைந்து தொண்டு என வழங்கலாயிற்று எனலாம். இந்தத் தொண்டைக்கொடி மிகுதியாகப் படர்ந்திருந்த நாடு தொண்டைநாடு எனப்பட்டது எனக் கொள்வாரும் உண்டு.

தொண்டைமான் இளந்திரையன் வழி வந்தவர்களே தொண்டைமான் பட்டம் கொண்ட கள்ளர் குலத்தவராவர். இப்பட்டம் கி.பி முதல் நூற்றாண்டில் இருந்து வழக்கத்தில் வருவதும் ஒரு வரலாராகும். பொன்னம்பலநாத தொண்டைமான் இலங்கையை ஏழு நாட்களில் அழித்தவன் தொண்டைமான் ஆவுடைரகுநாத தொண்டைமான்  இவர்கள் எல்லாம் தொண்டைமான் வம்சம் சார்ந்தவர்கள். தொண்டைமார், தொண்டையார், தொண்டைபிரியர், தொண்டைமான் கிளையர் என்றும் பட்டங்களிலும் அழைக்கப்படுகின்றனர்.

'மணிபல்லவம்' என்னும் தீவு மணிமேகலையில் குறிக்கப்பட்டிருத்தல் காண்க. மணிமேகலை காலத்து மக்கட்கு விளங்கி இருத்தல் புலனாகும். பல்லவத்திலிருந்து வந்தவர் பல்லவர் என்று என்று தம்மைக்கூறிக் கொண்டமை இயல்பே அன்றோ?' 'வீரகூர்ச்சன் நாகர் மகளை மணந்து அரசு பெற்றான்' என்று பல்லவர் பட்டயம் கூறுதலும் சோழன் நாகர் மகளை மணந்து பெற்ற இளந்திரையன் தொண்டை மண்டலம் ஆண்டான் என்பது ஆராய்ச்சிக்கு உரியன.

கரிகாலனையடுத்துத் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சியிலிருந்து ஆட்சி புரிந்தோனாவன் இவன் மரபினர் காஞ்சீபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை அரசாண்டு வந்தனர்.

இளந்திரையனுக்குச் சில தலைமுறை பின் வந்தோரே சிலர் ஆந்திர நாட்டிலும், சிலர் காஞ்சியிலுமாக இருந்து பல்லவர் என்னும் பெயருடன்ஆட்சி புரிந்தோராதல் வேண்டும், தொண்டை நாட்டுக்குப் பல்லவ என்பது ஒரு பெயர், அதுபற்றியே தொண்டையர், பல்லவரெனப்பட்டனர். இப்பெயர்களும், பல்லவர்க்கு வழங்கும் காடவர், காடுவெட்டி முத்தரையர் என்னும் பெயர்களும், அந்நாடு முன்பு காடடர்ந்ததாய் இருந்திருக்கவேண்டு மென்று கருதச் செய்கின்றன. தொண்டையர் அல்லது தொண்டைமான் என்னும் பெயரும், பல்லவர் என்னும் பெயரும், ஒருவகுப்பினரையே குறிப்பன.

சோழர்கள் வழியில் வந்தோரே பல்லவர் என்றும் சிலர் கருதுகின்றனர். தொண்டைமான் என்னும் பெயர் தொண்டைக் கொடிபற்றி வந்ததென்று கூறப்படுதலாயினும், பல்லவம் என்பதற்குத் தளிரென்பது பொருளாகலானும் இவ்விரு பெயரும் ஒருவரைக் குறிக்கும்.
.
.

வண்டையர்கோன் கருணாகரத் தொண்டைமான்
******************************************************************

பன்னிரண்டாம் நூற்றாண்டில் செயங்கொண்டாரால் பாடப்பட்டது கலிங்கத்துப் பரணி.கலிங்க நாட்டு அரசன் அனந்தவன்மனை வெற்றி கொண்ட போர்தான் கலிங்கப்போர். இன்றைய ஒரிஸ்ஸாவின் கீழ்ப்பகுதிதான் கலிங்க நாடாக விளங்கியது. பரணி என்றால் போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைப் பாடும் பாடல் என்று பொருள். கருணாகர தொண்டைமான் என்ற தளபதியைக் கொண்டு முதல் குலோத்துங்க சோழன் அனந்தவன்மனை வென்ற கலிங்கப் போரைப் பற்றியதே கலிங்கத்துப் பரணி. இவன் தொண்டை நாட்டை ஆண்டு வந்த பல்லவ அரசன் ஆவான். சோழ மாமன்னனான குலோத்துங்கனுக்கு உட்பட்ட சிற்றரசர்களில் ஒருவனாய் நெருங்கிய நண்பனாகவும் இருந்திருக்கிறான். இந் நட்பு காரணமாகவே குலோத்துங்கன் காஞ்சியில் வந்து படைகளுடன் தங்கினான் என்பர். கருணாகரன் கலிங்கப் போருக்குப் படைத்தலைவனாய்ப் புறப்படும் போது, இவனுடைய தமையனும் குலோத்துங்க சோழனின் நன்பனுமாகிய பல்லவனும் உடன் சென்றான் எனக் குறிக்கப்படுகிறது.

"தொண்டையர்க் கரசு முன்வ ருஞ்சுரவி
துங்க வெள்விடை உயர்த்த கோன்
வண்டையர்க்கரசு பல்லவர்க்கரசு
மால் களிற்றின் மிசை கொள்ளவே" -- (பாடல். 364)
என்ற பாடலால் இதை அறியலாம்.

தமையன் தொண்டை நாட்டை ஆள, குலோத்துங்கனுக்குப் படைத் தலைவனாய் அமைந்த கருணாகரன், வண்டைநகரின் கண் இருந்த பகுதியை ஆட்சி செய்தான் என அறியலாம். இவன் வண்டையர்க்கரசு என்றே பல இடங்களில் குறிப்பிடப்படுகிறான். வண்டை நகர் அக்காலத் தொண்டை நாட்டில் சிறந்திருந்த நகரங்களில் ஒன்று. இக்காலத்தில் சென்னைக்கு அருகில் உள்ள வண்டலூர் வண்டை நகராக இருக்கலாம் எனக் கூறுகின்றனர். அக்காலத்தில் வண்டைநகர், மல்லை மாமல்ல புரம், காஞ்சி, மயிலை (மயிலாப்பூர்) என்பன சிறந்த பட்டினங்கள் எனவும் அவை அடங்கிய நாடே தொண்டை நாடு என்பதும் கீழ்வரும் பரணி பாடலால் அறியலாம்.

அலகில் செருமுதிர் பொழுது வண்டையர்
அரச னரசர்கள் நாதன் மந்திரி
உலகு புகழ் கருணாகரன்றன தொருகை
யிருபணை வேழ முந்தவே!

கடற்கலிங்க மெறிந்துசயத் தம்ப நாட்டிக்
கடகரியுங் குவிதனமுங் கவர்ந்து தெய்வச்
சுடர்ப்படைவா ளபயனடி யருளி னோடுஞ்
சூடினான் வண்டையர்கோன் தொண்டை மானே

வண்டை வளம்பதி பாடிரே
மல்லையுங் கச்சியும் பாடிரே
பண்டை மயிலையும் பாடிரே
பல்லவர் தோன்றலைப் பாடிரே - பாடல் . 534

வண்டன், வண்டயன், வாண்டயன், வண்டதேவன், வண்டப்பிரியன், வாண்டப்பிரியன் என்ற பட்டங்களை பெற்றனர். இப்பட்டமுடைய கள்ளர் மரபினர் வாண்டையார் குடியிருப்பு, கீரனூர், மேலக்கரும்பிரான்கோட்டை, ஆற்றங்கரைப்பட்டி (புதுக்கோட்டை) வாண்டையாரிருப்பு (தஞ்சாவூர்) கண்ணுகுடி, மேல உழுவூர், புதுப்பட்டி, பட்டுக்கோட்டை, மேடைக்கொல்லை, கறம்பயம், மன்னார்குடி, பஞ்சவாடி, குன்னூர், இடையூர், அரிச்சயபுரம், மறவாக்காடு, செம்பியன்மாதேவி, சாந்தமாணிக்கம், சோலைக்குளம், பைங்காநாடு, காரக்கோட்டை, பேரையூர், பெருகவாழ்ந்தான், திருக்களர், திருமங்கலக்கோட்டை, பாபநாசம், பூண்டி, கோனூர், திருபுவனம்,வலங்கைமான், சின்னகரம், சாத்தனூர் முதலிய ஊர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழுகின்றனர்.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்