பொப்பண்ணக்கோட்டை

2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பொப்பண்ணக்கோட்டை
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத் தமிழகத்தில் பல நகரங்கள் கோட்டை, கொத்தளங்கள், அகழிகள் சூழத் திகழ்ந்ததை பத்துப்பாட்டு, எட்டுத் தொகை நூல்கள் விளக்கமுற எடுத்துரைக்கின்றன.

உறையூர், நான்மாடக்கூடல் எனும் மதுரை, கரூவூர் வஞ்சி ஆகிய மூவேந்த~களின் தலை நகரங்களும், பல குறுநில மன்னர்களின் தலைமை ஊர்களும் அகழிகள் சூழப் பெற்ற கோட்டைகளுடன் திகழ்ந்தன என்பதை இலக்கியம் பகரும் எண்ணற்ற சான்றுகள் வழி அறியலாம். பிற்கால வரலாற்றிலும், தமிழகத்தில் அகழிகள் சூழ்ந்த பெரு நகரங்களாக காஞ்சி, தஞ்சை, கங்கை கொண்ட சோழபுரம், மதுரை ஆகிய நகரங்கள் விளங்கின. ஆனால் அங்கு திகழ்ந்த அரண்மனைகளும், அவற்றைச் சூழ்ந்து அமைந்த கோட்டை, அகழி ஆகியவைகளும் கால வௌ;ளத்தில் கரைந்து அவை இருந்த சுவடுகள் கூட இல்லாமல் மறைந்து விட்டன.

வல்லம் கோட்டை(தஞ்சை)
சங்க காலத்தில் திகழ்ந்த வல்லம் கோட்டை(தஞ்சை) கி.பி. 1850க்குப் பிறகு தான் சுவடு அழிந்தது. இருப்பினும் அதனைச் சூழ்ந்து திகழ்ந்த அகழியின் ஒரு பகுதி மட்டும் இன்றும் காட்சி தருகின்றது. ஆனால் சங்க காலத்துக் கோட்டை ஒன்று முழு தடயத்தோடு புதுக்கோட்டைக்கு அருகில் இருப்பது பலரும் அறியாத செய்தியாகும்.

புதுக்கோட்டையும் பழைய கோட்டையும்
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வாழ்ந்த பகுதிகளின் சான்றுகளை மிகுதியாகப் பெற்றுள்ள மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டமே என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

திருமயம் வட்டம் குருவிக் கொண்டான்பட்டி எனும் ஊரில் கிடைத்த பழைய கற்கால ஆயுதமொன்று சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென வல்லுநர்கள் உறுதி செளிணிதுள்ளனர்.

புதுக்கோட்டையை ஒட்டி அமைந்துள்ள சித்தன்னவாசல், அன்னவாசல், ஒலியமங்கலம் போன்ற இடங்களில் பெருங்கற்சின்னங்கள் எனப் பெறும் இறந்தோரின் நினைவுச் சின்னங்கள் அதிக அளவில் இன்றும் காணப்பெறுகின்றன. சங்கத் தமிழ் நூல்களில் குறிப்பிடப் பெறும் கோனாடு, ஒல்லையூர் கூற்றம் என்பவை தற்போதைய புதுக்கோட்டை நகரம் சார்ந்த பகுதிகளேயாகும்.

புதுக்கோட்டை அரையர்கள்
பாண்டியர்களின் கல்வெட்டுகளில் ‘புதுக்கோட்டை அரையர்கள்’ என்ற குறிப்பு காணப் பெறுகின்றது. பிற்காலத்தில் தொண்டைமான் மன்னர்களின் நாடாக விளங்கிய புதுக்கோட்டை சமஸ்தானத்தின் தலைநகராக கி.பி.1686லிருந்து இந்நகரம் விளங்கிற்று. ஏறத்தாழ கி.பி.1650க்குப் பிறகே புதுக்கோட்டை திட்டமிட்டு விரிவு பெற்ற ஒரு நகரமாக உருவாக்கம் பெற்றது. இந்நகரத்தின் கிழக்கில் அமைந்த கலசமங்கலம் (திருக்கட்டளை) மேற்கில் திகழும் திருவேட்பூர், திருக்கோகர்ணம் ஆகிய ஊர்கள் பழமைச் சிறப்பு வாய்ந்தவையாகும்.

பொப்பண்ண கோட்டை
தற்போதைய புதுக்கோட்டை நகரத்தின் அரண்மனை கோட்டை, அவை சார்ந்த குடியிருப்புக்கள் ஆகியவை கட்டுமானங்களாக உருப்பெறுவதற்கு அடிப்படையாய் விளங்கியது, இந்நகரத்திற்கு கிழக்கே 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பழைமையான கோட்டையின் மதிற்சுவர்களும் மற்ற செங்கற்கட்டுமானங்களுமே ஆகும். அப்பழைய கோட்டையின் பெயர் பொப்பண்ண கோட்டை என்பதாகும்.

மக்கள் வழக்கில் தற்போது அக்கோட்டை பொற்பனைக் கோட்டை என்று அழைக்கப் பெறுகின்றது. இக்கோட்டையின் மேற்குத் திசையில் அமைந்துள்ள பொப்பண்ண முனீஸ்வரர் என்ற காவல் தெய்வமே தற்போதைய புதுக்கோட்டை நகரத்தவர்க்கு கண்கண்ட காவல் தெய்வமாகும். பொற்பனை ஈஸ்வரன் கோயிலின் பனை மரங்கள் பொன்னால் ஆன காய்களை காய்த்ததாக ஒரு புராணக் கதையைக் கூறி அந்தத் தெய்வத்திற்கு பொற்பனை முனீஸ்வரன் என்றும், அங்குள்ள கோட்டையை பொற்பனைக் கோட்டை என்றும் மக்கள் அழைக்கலாயினர். ஆனால் அந்தக் கோட்டைதான் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார்க்கு சோறிட்டு ஆக்கம் தந்தவர் வாழ்ந்த கோட்டை என்ற செய்தி தமிழ் கூறு நல்லுலகம் அறியாத செய்தியாகும்.

சங்க காலக் கோட்டை
பல நூறு ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கியதாய் அமைந்த வட்ட வடிவ மண் கோட்டை, சுற்றிலும் அமைந்த அகழி ஆகியவற்றோடு தற்போது காணப்பெறும் பொப்பண்ண கோட்டை ஏறத்தாழ 50 அடி உயரமும், 50 அடி அகலமும் உடைய மண்மேடுடைய கோட்டையாக விளங்குகிறது. அகலமான இம்மண் கோட்டை மீது செங்கல்லால் அமைந்த நெடுமதில் முன்பு இருந்து காலப் போக்கில் இயற்கையின் சீற்றங்களாலும், மனிதர்களின் தேவையாலும் அழிந்துவிட்டது.

புதுக்கோட்டை நகர நிர்மாணத்திற்கு இக்கோட்டை செங்கற்களையே முழுதும் பயன்படுத்தியுள்ளனர். தற்போது அம்மதிலின் அடித்தளமும், உடைந்த செங்கற் குவியல்களுமே மண்கோட்டை மீது காணப் பெறுகின்றன. இக்கோட்டையின் உள்ளும், புறமும் மண்கோட்டையின் பல இடங்களிலும் இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட கருப்பு, சிகப்பு பானை ஓடுகள் மணிகள் போன்ற தொல்லியல் சான்றுகள் மிகுந்து காணப் பெறுகின்றன. அக்காலம் தொடங்கி சுமார் 500 ஆண்டு காலத்திற்கு முன்பு வரை அக்கோட்டையில் தொடர்ந்து குடியிருப்புகள் இருந்துள்ளதற்கான பல்வேறு தொல்லியல் சான்றுகள் இக்கோட்டைப் பகுதி முழுவதும் கிடைக்கின்றன. கோட்டை மீது காணப்பெறும் செங்கற்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட செங்கற்கள் என்பதோடு அவை பூம்புகார், உறையூர் ஆகிய பகுதிகளில் அகழ்வாய்வில் கிடைத்த செங்கற்களையே முழுதும் ஒத்து காணப் பெறுகின்றன.
பொப்பண்ண கோட்டையின் தென்மேற்குப் பகுதியில் உள்ள கலசக்காடு எனும் ஊர் முற்காலத்தில் கலசமங்கலம் என அழைக்கப் பெற்றது. அங்கு 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட நூற்றுக் கணக்கான ஈமச் சின்னங்கள் காணப் பெறுகின்றன. கற்பதுக்கை எனப் பெறும் கற்குவியலாக அமைந்த ஈமச் சின்னங்கள், சுற்றிலும் இரு வட்டங்களாக கற்பாறைகள் திகழ நடுவே அமைந்த ஈமப் பேழைகள் என கலசக்காடு முழுவதும் பெருங்கற்கால சான்றுகள் நிறைந்துள்ளன. இவை அனைத்தையும் தொகுத்து நோக்கும் போது தமிழகத்தில் இன்று முழுமையாக (முழுவட்ட வடிவில்) காணப்பெறும் ஒரே சங்ககால கோட்டை இதுவேயாகும்.

தமிழ் வளர்த்த காங்கேயர்கள்
சோழர் வரலாற்றில் விக்கிரம சோழன் காலந்தொட்டு காங்கேயர் என்ற பட்டம் புனைந்த குறுநில அரச மரபினரின் செல்வாக்கு தொடர்ந்து நிலைபெற்றது. பின்னர் மாறவர்மன் முதலாம் சுந்தர பாண்டியன் (மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்) காலந்தொட்டு பாண்டியர்களின் பிரதிநிதிகளாக திருமயம், குடுமியான்மலை, ஆலங்குடி உள்ளிட்ட புதுக்கோட்டை பகுதியின் ஆட்சியாளர்களாக விளங்கியவர்கள் காங்கேயர்கள் ஆவர். மூன்று பெரும் சோழப் பேரரசர்களுக்கு அவைக்களப் புலவராய் இருந்த கவிச்சக்கரவர்த்தி ஒட்டக் கூத்தருக்கு காங்கேயன் ஒருவன் புரவலனாக விளங்கியதால் கூத்தர் அக்காங்கேயனைப் புகழ்ந்து “நாலாயிரக் கோவை” எனும் நூலில் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இராஜேந்திர சோழ காங்கேயராயன்
இராஜேந்திர சோழ காங்கேயராயன் என்பான் விக்கிரம சோழனின் ஆட்சியாளனாய் திருக்காளத்திப் பகுதியை ஆட்சி செய்தவனாவான். குடுமியான்மலை சிவாலயத்தில் “காங்கேயராயன் திருமண்டபம்” என்ற பெயரால் அழகிய மண்டபம் ஒன்று திகழ்ந்ததைச் சுந்தர பாண்டியனின் பதிமூன்றாம் ஆட்சியாண்டு கல்வெட்டு கூறுகின்றது. பிள்ளையார்பட்டி சிவாலயத்தில் காங்கேயராயன் சந்தி என்ற பெயரில் சிறப்பு பு+சை நிகழ்த்தப் பெற்றதை சுந்தர பாண்டியனின் மற்றொரு கல்வெட்டு கூறுகின்றது.

கண்டன் உதையஞ்செய்தான் காங்கேயன்,
ஆற்றூருடையான் பொன்னன் காங்கேயன்,
கண்டன் அக்கணி பெருமாள் காங்கேயன்,
காங்கேயராயன்,
கண்டன் அழகுகண்ட பெருமாள் காங்கேயன்,
உடையார் காங்கேயராயர்

எனப் பல காங்கேயர்கள் புதுக்கோட்டைப் பகுதியின் ஆட்சியாளர்களாய் விளங்கியதைக் கல்வெட்டுச் சாசனங்கள் எடுத்துரைக்கின்றன. கி.பி. 13-14 ஆம் நூற்றாண்டுகளில் புதுக்கோட்டைப் பகுதியில் இவர்களது செல்வாக்கு சிறந்து திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பொப்பண்ண காங்கேயன்
சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார்க்கு ஆக்கமளித்து தமிழ் செய்ய உதவியவன் பொப்பண்ண காங்கேயன் என்பான் என்பதை, அந்நூலின் பாயிரத்தில் ,

“காற்றைப் பிடித்துக் கடத்திலடைத்த கடிய பெருங்
காற்றைக் குரம்பை செய்வார் செய்கை போலு மற்காலமெனும்
கூற்றைத் தவிர்த்தருள் பொப்பண்ண காங்கேயர் கோனளித்த
சோற்றுச் செருக்கல்லவோ தமிழ் மூன்றுரை செய்வித்ததே”
எனக் காணப் பெறும் இப்பாடல் எடுத்துக் கூறுகின்றது.

எனவே அடியார்க்கு நல்லார் எனும் அருந்தமிழ்ப்புலவனுக்கு சோறிட்டு தமிழ் செய்த பொப்பண்ண காங்கேயன் வாழ்ந்த கோட்டைதான் புதுக்கோட்டைக் கருகிலுள்ள “பொப்பண்ண கோட்டை” என்பதில் ஐயமில்லை. கி.பி.12-13 ஆம் நூற்றாண்டுகளில் சிலப்பதிகாரத்தைக் காத்தவன் வாழ்ந்த பொப்பண்ண கோட்டை இரண்டாயிரம் ஆண்டு பழைமையுடைய கோட்டை என்பதும் தனிச்சிறப்பாகும்.
வானூர்தியிலிருந்து கீழ்நோக்கிப் பார்க்கும்போது இக்கோட்டையின் மாட்சிமை நமக்குப் புரியும். அங்குள்ள செங்கற்களும், பானை ஓடுகளும், மணிகளும், ஈமச்சின்னங்களும், 2300 ஆண்டு கால தொடர் வரலாற்றை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. புரிசை, கோட்டை, மதிலரண், இஞ்சி எனப் பல பெயர்களால் குறிக்கப் பெறும் இரண்டாயிரம் ஆண்டு வயதுடைய இக்கோட்டையைக் காப்பது தமிழ் மக்களின் தலையாய கடமையாகும்.----------------------பொற்பண்ணக்கொட்டையின் கூகுள் படம்

நன்றி
முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியம்

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்