திருக்கோடிக்காவல் கோடீசுவரர்

திருக்கோடிக்காவல் கோடீசுவரர் கோயில்
இறைவன்:திருக்கோடிஸ்வரர்.        இறைவி:வடிவாம்பிகை.                                    தீர்த்தங்கள் :சிருங்க தீர்த்தம்,காவிரி நதி.      தலவிருட்சம் :பிரம்ம மரம்.  தலப்பெயர்கள்: திருக்கோடிக்கா.                            தலமும் இருப்பிடமும்:கும்பகோணத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது.
இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டு களிலிருந்தும் கோயில் அமைப்பிலிருந்தும் கீழ்க்கண்ட விபரங்கள் அறிய வருகிறது.
சுமார் 1250 வருடங்களுக்கு முன்பு கி.பி. எட்டாம் நூற்றாண்டில் (750) தமிழகத்தில் பல்லவர்களுடைய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம். நந்திவர்மபல்லவன் காலத்தில் இக்கோயிலின் கர்ப்பகிரஹம் மட்டும் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. பின் கி.பி. 950 - 957க்கு இடைப்பட்ட காலத்தில் தஞ்சையை உத்தமசோழ மன்னர் ஆண்ட சமயம்  அவருடைய தாயாரும் கண்டராதித்த சோழரின் மனைவியுமான செம்பியன்மாதேவியாரின் ஆனைப்படி செங்கற்களால் ஆன கோயில் இடிக்கப்பட்டு கருங்கற்களால் திரும்பக்  கட்டப்பட்டது. அதற்குப் பிறகு வழிவழியாக நாட்டை ஆண்ட மன்னர்களால் இக்கோயிலின் மற்றப்பகுதிகள் பல்வேறுகால கட்டத்தில் கட்டப்பட்டன.
ராஜராஜசோழன் காலத்தில் மூன்று நிலைக் கோபுரமும் பின்னர் மூன்றாம் குலோத்துங்கன் காலமான 13ம் நூற்றாண்டில் முன்வாயில் ஐந்து நிலை ராஜகோபுரமும் கட்டப்பட்டு திருப்பணிகள் நடத்திருக்க வேண்டும். அதற்குப் பிறகு 16ம் நூற்றாண்டில் தஞ்சை நாயக்கர் மன்னர் காலத்தில் பாழ்பட்ட பகுதிகள் திருத்தம் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டதோடு முன் கோபுரமும் இக்காலத்தில் புதியதாக மறுபடியும் கட்டப்பட்டிருக்க வேண்டும் எனத்தெரிகிறது.
செம்பியன் மாதேவியார் கருங்கற் கோயிலாக திருப்பணி செய்த சமயம் மற்றொரு சிறந்த சேவையும் செய்தார். கோயிலில் ஆங்காங்கே சிதறுண்டு கிடந்த பழைய கல்வெட்டுகளைத் திரட்டி எடுத்து அதிலுள்ள விபரங்களை புதியதாகக் கட்டிய கருங்கற் சுவற்றில் திரும்பவும் செதுக்கச் செய்தார். இவ்வாறு மொத்தம் 26 கருங்கற் பலகைகளைப் பதித்து வருங்கால சந்ததியினர் இக்கோயிலின் வரலாறு அறிந்து கொள்ள பேருதவி செய்துள்ளார். பல்லவர்கால கல்வெட்டுக்கள் தஞ்சை மாவட்டத்தில் வேறு எங்கும் காணப்படவில்லை என்ற சரித்திர ஆராய்ச்சியாளர்களின் கூற்று இங்கே குறிப்பிடத்தக்கது.
கல்வெட்டுச் செய்திகள் இத்திருக்கோயிலில் மூன்று நிலைக் கோபுர நுழைவாயிலின் தென்புரம் மதிற்சுவற்றிலும் வாகன மண்டபத்தில் காட்சி கொடுத்த அம்பாள் சிலையின் வடபுறத்திலும் ஸ்வாமியின் கருவறை வெளிப்புற சுவற்றிலும் காணலாம்.
செம்பியன் மாதேவியார் அவ்வாறு பாதுகாத்த கல்வெட்டுச் செய்திகளிலிருந்துதான் அவருக்கும் முந்தைய காலமான பல்லவர் ஆட்சியில் இக்கோயிலில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் நமக்குத் தெரிய வருகிறது. கி.பி. 850 ல் காஞ்சியை ஆண்ட நிருபதுங்கவர்ம பல்லவனின் மனைவி வீரமகாதேவியார் ஸ்ரீ திருக்கோடீஸ்வரருக்கு துலாபார நோன்பும் ஹிரண்யகர்ப்ப பூஜையும் செய்து தங்கம் தானமாக அளித்தார் என்றும் மற்றும் ஸ்வாமிக்கு எதிரில் ஒரு தூங்கா விளக்கு ஏற்பாடு செய்து அதற்கு வேண்டிய பொருளுதவியும் செய்தார் என்றும் தெரிகிறது.
கி.பி. 10ம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாண்டிய மன்னன் வரகுணபாண்டியன் இக்கோயிலில் உள்ள லெஷ்மி, சரஸ்வதி, கணபதி சன்னிதியில் மூன்று தீபங்கள் ஏற்றுவதற்காக தங்கக் காசுகள் வழங்கினான் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கி.பி. 1264ம் ஆண்டு கல்வெட்டுகள் இரண்டு உள்ளது. அது பல்லவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வரசன் தஞ்சையை ஆண்ட மன்னன் மூன்றாம் இராசராசனைத் தோற்கடித்துச் சிறை பிடித்தவன். மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தவன். இவ்விருகல்வெட்டுகளில் இவ்வரசன்மாணிக்க வாசக ஸ்வாமிகளின் உலோகச்சிலையொன்றை இக்கோயிலுக்கு அளித்தது குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலே கூறிய செய்திகளைத்தவிர இக்கோயிலில் காணப்படும் மொத்தம் 50 கல்வெட்டுகளிலிருந்தும் மேலும் பல விபரங்களை அறிய முடிகிறது.
கி.பி. 950ல் செம்பியன் மாதேவியால் கட்டப்பட்ட இக்கோயிலை அவர் காலத்திற்குப் பிறகு நாட்டை ஆண்ட சோழ, பாண்டிய, பல்லவ மற்றும் நாயக்கர் அரச பரம்பரையினர் இக்கோயிலுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வழிபாடுகள் செய்து போற்றிப் பாதுகாத்து வந்துள்ளனர். கோயிலைப் பராமரிக்கவும் 6 கால பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் சிறந்த முறையில் நடைபெறும் பொருட்டும் ஏராளமான நிலங்களை இக்கோயிலுக்கு தானமாக வழங்கியுள்ளனர்.
தினமும் 5 குடம் தண்ணீர் காவிரி நதியிலிருந்து எடுத்துவந்து ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யவும் அவ்வப்போது ஸ்வாமிக்கு புனுகு காப்பு செய்யவும் அதற்காக புனுகு பூனைகள் கோயிலில் வளர்த்து வருவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுவந்ததும் மற்றும் பூஜைக்கு வேண்டிய புஷ்பங்கள், மாலைகள் ஆகியவற்றிற்காக தனியாக நந்தவனங்கள் ஏற்படுத்தி பராமரிக்கப்பட்டதும் மேற்கூறிய கல்வெட்டுகளிலிருந்து அறியப்படுகிறது.
பொதுவாக எல்லா சிவன் கோயில்களிலும் காணப்படும் சுதை வேலைபாடுகள் எதுவும் இக்கோயிலில் கோபுரத்திலோ அல்லது மதிற்சுவர்களிலோ காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்பிரகாரத்தின் தளவரிசை சுமார் 1000  வருடங்களுக்கு முன்னால் செங்கற்களால் வேயப்பட்டிருந்தாலும் இன்றும் உபயோகத்திற்கு தகுதியுடையதாய் உள்ளது. மேலும் மழைக்காலத்தில் கோயிலின் உள்ளே தங்கும் நீர் அருகில் உள்ள திருக்குளத்தில் சேரும்படியாக அமைந்துள்ள வடிகால்களைப் பார்க்குமிடத்து பண்டைக்கால நம் முன்னோர்களின் கட்டிடக்கலை அறிவு நம்மை வியக்க  வைக்கிறது.
கோயிலின் உள்ளே அஷ்டாஷ்டக விக்ரகங்கள் எனப்படும் சிவபெருமானின் 64 லீலைகளில் பெரும்பான்மைகளை மிக நுட்பமாக பல்லவகால சிற்ப அமைவில் திருச்சுற்றிலும் ஏனைய பல இடங்களிலும் காணமுடிகிறது. சிற்பங்கள் யாவும் வெகு அற்புதமாய் கண்ணைக்கவரும் விதத்தில் அமைத்திருக்கின்றன. ராஜகோபுர வாயிலில் காமதேனு கற்பக விருட்சம் குதிரை மற்றும் யானை வீரர்களின் போர்க்காட்சிகள் மனுநீதி சோழன், நீதிவரலாறு கண்ணனின் கோகுல லீலைகள் மிக நுணுக்கமாக செதுக்கப்பட்ட 22 விதவிதமான வாத்தியங்களை இசைக்கும் மாந்தர்கள் யாவும் கண்ணிற்கு விருந்தாய் அமைந்துள்ளன.
இதே போன்று திருக்கோடீஸ்வரரின் கருவறை வெளிச்சுவற்றிலும் அழகிய சிற்பகோலங்கள் உள்ளன. தெற்குச் சுவரில் முதலில் கூத்தபிரான் உள்ளார். ஊன்றிய கால் தனியாகவே உள்ளது. இடப்புறம் சிவகாமி நின்ற கோலத்தில் திருபங்க நிலையில் உள்ளாள்.
வலப்பக்கம் காரைக்கால் அம்மையார் பேய் உருவில் தலைவிரி கோலமாய் தாளமிட்டப்படி சிவனது கூற்றினைக் கண்டு ஆனந்திக்கிறாள். திருவடியின் கீழ் இசைபாடுவோர். மத்தளம் அடிப்போர், தாளமிடுவோர் என மூன்று கணங்கள் உள்ளனர். அடுத்து வரிசையாக பிட்சாடனர் விஷ்ணுவின் மோகினி அவதாரம் ஒரு குள்ளபூதம் அமர்ந்த நிலையில் மஹா கணபதி, அகத்திய முனிவர், தட்சிணாமூர்த்தி, அத்ரி முனிவர், பிருகு முனிவர் உள்ளார்கள். விமானத்தில் பிட்சாடனர் உருவம் எட்டு கரங்களுடன் சூலம் ஏந்தி அகோர தாண்டவமூர்த்தியாய் மிக நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது.
ஸ்வாமியின் கருவறை மேற்குச் சுவற்றில் லிங்கோத்பவர் மகாவிஷ்ணு நின்ற கோலம் அவருக்கு இருபுறமும் குத்ச முனிவரும் வசிஷ்டமுனிவரும் உள்ளனர். விமானத்தில் மகாவிஷ்ணு அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார். வடக்குத் கருவறை சுவற்றில் முதலில் கௌதம மகரிஷியும் அடுத்து அக்கமாலை, கரகம், அபயஹஸ்தம், தொடையில் ஊன்றிய கைகளோடு பிரம்மாவும், தொடர்ந்து காஸ்யப ரிஷி அஷ்டபுஷ துர்க்கை அர்த்தநாரீஸ்வரர் உள்ளனர். விமானத்தில் பரமேஸ்வரன் காட்சி அளிக்கிறார்.
கிழக்குபுற விமானத்தில் ஸ்வாமி மற்றும் அம்பாள் சிற்பம் அமைந்துள்ளது.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்