தை_பூசம்

#தை_பூசம்!!!

தமிழ் கடவுளான முருகன் அசுரனை அழிக்க அன்னையிடம் வீரவேலை வாங்கி கையிலேந்திய நாளாக இந்த தைப்பூசம் கருதப்படுகின்றது. இந்நாள் இருபத்தியேழு நட்சத்திர மண்டலத்தில் எட்டாவது நட்சத்திரமான பூச நட்சத்திரம் தை மாதத்தில் வரும்போது சிறப்பாக கொண்டாடபடுகின்றது. அனேகமாக இந்நாள் பௌர்ணமி நாளாகவே இருக்கும். தைமாதம் உத்தராயண காலத்தில் ஆரம்பம். உத்தராயணம் என்பது தேவர்களின் பகல் பொழுது.காலை பொழுதாகும். சிவாம்சமான சூரியன் மகரராசியில் இருக்க, சக்தியின் அம்சமான சந்திரன் கடக ராசியில் பூச நட்சத்திரத்தில் ஆட்சிபெற்றிருக்க சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபக்கமும் நேர்கோட்டில் நிற்க, தை பூச திருநாள் அமைகின்றது.

இச்சிறப்புமிக்க இத்தினம் இவ்வருடம் தை மாதம் பதினெட்டாம் நாள், அதாவது 31ம் திகதி ஜனவரி மாதம் 2018ம் ஆண்டு அமைவதாக ஜோதிடம் கணிக்கின்றது. இந்நாளிலே புண்ணிய நதிகளில் நீராடுதல் சிறப்பாகும். இயலாதவர்கள் புண்ணிய நதிகளை நினைவுறுத்தி, நீராடுதல் வேண்டும். இந்நாளில் பல்வேறு லட்சியங்களை தொடங்குதல் சிறப்பு. இந்நாளில் தொட்டது எல்லாம் துலங்கும் என்பது பழமொழி. பூமியின் சிருஷ்டி ஆரம்பித்த நாள் இதுவே ஆகும். அதனால் தான் இந்நாளில் ஏடு தொடக்கல், புதிரெடுத்தல், புதிதுண்ணல், பெண் குழந்தைகளுக்கு காது, மூக்கு குத்தல், திருமண பேச்சு ஆரம்பித்தல், ஒப்பந்தங்கள் பேசல் போன்ற நற்காரியங்கள் போன்றன நடைபெறுகின்றன. இத்திருநாளில் உழவர்கள் வயலுக்கு சென்று புதிதெடுத்து, இடித்து அரிசியாக்கி புது மண் பானையில் பொங்கல் செய்து முருகனுக்கு படைத்து, எல்லோருக்கும் கொடுத்துண்ணல் மகிழ்வு.

இதில் குறிப்பிட படவேண்டிய ஓன்று, மார்கழி திருவாதிரையில் சிவன்  திருநடனம் புரிந்தார். சிவனுடன் சக்தி சேர்ந்து ஆடிய நாள் தைப்பூச திருநாளாகும். இருவரும் சேர்ந்தது சிவனும் சக்தியுமாக சிவசக்தியாக ஆகியநாளாக இத்திருநாள் அமைகிறது. சிவசக்தியாகி தோன்றியவரே முருகன். ஆகவே சிவனும் சக்தியும் சேர்ந்து உருவாகிய முருகனுக்கும் சிறப்பாகும். இது தமிழர்களுக்குரிய முக்கிய நாளாக கருதப்படுகின்றது.தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி. தை மாதத்தில் வரும் திருநாளில் நல்லதே நடக்கும் என்பதால் தான் தமிழர்கள் இதனை வெகுவிமர்சையாக கொண்டாடுகிறார்கள். தமிழ் கடவுளான முருகனுக்கு இந்த விழா எடுத்து ஆதி தமிழர்கள் மகிழ்வுற்றிருந்தனர்.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

நாரையூர்