திருவாரூர் தியாகராஜர் கோயில்



திருவாரூர் தியாகராஜர் கோயில்
திருவாரூர் தியாகராஜர் கோயில் மிகப் பழமையானதும், பிரம்மாண்டமானதும் ஆன பெரிய கோயில் ஆகும். இக்கோயில் பெரிய கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. இக்கோயில் நாயன்மார்களால் பாடற்பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது.ஆசியாவிலேயே மிகபெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 87ஆவது சிவத்தலமாகும். திருவாரூர் சப்தவிடங்க ஸ்தலங்களில் தலைமை இடமாகும்.
.
இத்தலத்தில் சாயரட்சை வழிபாட்டின்போது தேவேந்திரனே வந்து பெருமானைப் பூசிப்பதாக ஐதீகம்.
கமலை என்னும் பராசத்தி தவம் செய்த பதி.
எல்லாச் சிவாலயங்களின் சாந்நித்யமும் சாயரக்ஷை எனப்படும் திருவந்திக்காப்பு நேரத்தில் இத்தலத்தில் விளங்குவதாக ஐதீகம்.
தல சிறப்புக்கள்
பஞ்சபூத ஸ்தலங்களில் பூமிக்கான திருத்தலம் திருவாரூர்.
திருவாரூர் கோவில் சிதம்பரம் கோவிலைவிட பழமையானது என்பதை குறிக்கும் வகையில் இங்கு பாடப்படும் தேவாரத்தில் திருச்சிற்றம்பலம் என்ற வார்த்தை குறிப்பிடப்படுவது இல்லை.
தியாகராஜரின் தலவரலாறு இன்றும் அறியப்படவில்லை. இதற்கு சான்று ஞானசம்பந்தர் திருவாரூரில் கோவில் கொண்டது எந்நாளில் என 10 பாடல்களை பாடியுள்ளார்.
நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நின்று தரிசனம் தரும் திருத்தலம்.
எமனே சண்டிகேஸ்வரரை ஆட்கொண்டு எமபயம் போக்கும் திருத்தலம் .
சுந்தரருக்காக (நால்வரில் ஒருவர் ) சிவனே வீதியில் நடந்துசென்று பெண் கேட்ட திருத்தலம்.
நட்பின் முக்கியத்தை உணர்த்த சுந்தரருக்கு தனி இடம் தந்த திருத்தலம்.
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் தோன்றிய திருத்தலம்.
நமி நந்தி அடிகள் நீரினால் விளக்கு ஏற்றிய திருத்தலம் .
பசுவிற்கு நீதிவழங்க தன் மகனை தேரின் சக்கரத்தில் இட்டு கொன்ற நீதிவழுவா மனுநீதி சோழன் வாழ்ந்த திருத்தலம்.
திருவாரூர் கோவில் அளவும் , தெப்பக்குளமும் ஒரே அளவுகொண்டதாகும்.
இக்கோவில் 9 இராஜகோபுரம், 80 விமானம், 12 உயர மதில்கள் , 13 மண்டபங்கள், 15 தீர்த்த கிணறுகள், 3 தோட்டம், 3 பிரகாரம் என பிரமாண்டமான கட்டட அமைப்பாகும்.
24 உட்கோவில்களையும், 365 சிவலிங்ககளையும், 86 விநாயக சிலைகளையும் கொண்ட திருத்தலம் திருவாரூர் ஆகும்.
இக்கோயிலில் சிவபெருமானுக்கு இரண்டு சன்னிதிகள் உள்ளன. ஒன்றில் வான்மீகிநாதர் என்றும் மற்றொன்றில் தியாகராஜர் என்றும் சிவபெருமானுக்கு திருநாமங்கள். இவற்றில் வான்மீகி நாதர் சந்நிதி மிகவும் பழமையானது. இதில் அமைந்திருக்கும் லிங்கம் புற்றிலிருந்து சுயம்புவாக தோன்றியதாக வழங்கப்படுகிறது. அப்பர் சுவாமிகள் இதனால் சிவபெருமானைப் புற்றிடங்கொண்டார் என்ற பெயரால் அழைக்கிறார். இத்தலத்தின் தொன்மையை வியக்கும் அப்பர் சுவாமிகள், சிவபெருமானின் திருவிளையாடல்கள் ஒவ்வொன்றையுமாய் சொல்லி, அந்த திருவிளையாடல் நடப்பதற்கு முன்பாகவா, அல்லது பின்பாகவா, திருவாரூரில் எழுந்தருளிய நாள் என வினவுகிறார்.
இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் தியாகராஜர் முதலில் திருமாலால் திருப்பாற்கடலில் வழிபடப்பெற்றவர். பிறகு அவரால் இந்திரனுக்கும், பிறகு இந்திரனால் முசுகுந்த சக்கரவர்த்திக்கும் அளிக்கப்பெற்று, அந்த முசுகுந்த சக்கரவர்த்தியால் இவ்வூரில் பிரதிட்டை செய்யப்பெற்றவர்.
உமையோடும் முருகனோடும் இணைந்து காட்சி தரும் சிவனுக்கு சோமஸ்கந்தர் எனப் பெயர். அவரே இங்கு எழுந்தருளி இருக்கும் தியாகராசர் ஆவார். அவரோடு இணைந்து காட்சிதரும் உமைக்கு கொண்டி எனப் பெயர். தியாகராஜரின் பாதங்கள் ஆண்டுக்கு இரண்டு தினங்களில் தவிர, மற்ற நாட்களில் மலர்களால் மூடப்பட்டு இருக்கும். பங்குனி உத்திரம் திருவிழா நடைபெறும் சமயம் இடது பாதத்தையும், திருவாதிரை திருவிழா சமயம் வலது பாதத்தையும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
சமயக்குரவர்களாலும் இதர நாயன்மார்களாலும் பாடற்பெற்ற தலம். அரநெறி நமிநந்தியடிகள் நாயனார் தண்ணீரால் திருவிளக்கேற்றி வைத்து வழிபட்ட திருக்கோயிலாகும். சுந்தரமூர்த்தி நாயனார் பொருட்டுப் பரவை நாச்சியாரிடம் சிவபெருமான் இருமுறை நள்ளிரவில் தூது நடந்து சென்ற திருவீதியை உடையது. இச்செய்தியை "அடியேற்கு எளிவந்த தூதனை" என்னும் அவரது தேவாரப் பகுதி உறுதிப்படுத்தும். காஞ்சிபுரத்தில் ஒருகண் பெற்ற அவர் ``மீளா அடிமை`` என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி மற்றொரு கண்பார்வையும் பெற்றது, இத்தலத்தில்தான்.
இத்தலம் "பிறக்க முத்தி திருவாரூர்" என்று புகழப்படும் சிறப்பினது.
தண்டியடிகள், கழற்சிங்கர், செருத்துணையார், விறன் மிண்டர், நமிநந்தியடிகள் முதலிய நாயன்மார்களின் திருத்தொண்டுகள் பரிமளித்த பதி இதுவே. கமலை ஞானப்பிரகாசரும் இங்கிருந்தவரே.
இத்தலத்தின் தேர், திருவிழா, திருக்கோவில், திருக்குளம் ஆகியன மிகப் பெருமை வாய்ந்தது. திருவாரூர்த் தேர் அழகு.
ஏழு கோபுரங்களைக் கொண்டது இத்திருக்கோயில். கீழ்க்கோபுரம் 118 அடி உயரம் கொண்டது; இத்தலம் வீதிப் பிராகாரங்களையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களைக் கொண்டுள்ளது.
கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி (கோயில் ஐந்துவேலி, குளம் ஐந்துவேலி, ஓடை ஐந்துவேலி என்பது இங்கு வழங்கப்படும் பழமொழி) என்று போற்றப்படும் மிகப் பெரிய சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடையத் தலம்.
.
பஞ்ச பூத தலங்களுள் பிருதிவித் தலம்.
"இம்மணிமுத்தாற்றில் இப்பொன்னை இட்டு, ஆரூர் கமலாலயத் திருக்குளத்தில் எடுத்துக் கொள்" என்று முதுகுன்றத்தீசரால் சுந்தரரைப் பணிக்கப்பட்டு, அதன்படி கமலாலயத் திருக்குளத்தில் பொன் எடுக்கப்பட்டத் தலம்.
சுந்தரர் வேண்டிக் கேட்டுக் கொண்டதன் பேரில், அவருக்காக இத்தல தியாகேசப் பெருமானார் நள்ளிரவில் பரவை நாச்சியாரிடம் தூது செல்ல இவ்வூர்த் தெருக்களில் நடந்து சென்ற பெருமையுடையத் திருத்தலம்.
பரவை நாச்சியார் வாழ்ந்த பதி.
சுந்தரர் இழந்த இரண்டாவது கண்ணை பெற்ற பதி.
சுந்தரர், "திருத்தொண்டத் தொகை"யைப் பாடுவதற்கு, அடியார்களின் பெருமைகளை விளக்கிய பெருமை இப்பதிக்கேயுரியது.
இது முசுகுந்த சோழன், மனு நீதிச் சோழன் ஆகியோர் ஆட்சி (வாழ்ந்த) செய்த சீர்மையுடைய பதி.
தண்டியடிகள் அவதரித்த மற்றும் முத்தியடைந்தத் திருத்தலம். இத்திருக்கோயில் வளாக மூன்றாவது சுற்றில் மூலாதார கணபதிக்கு அருகில் தண்டியடிகள் நாயனாரின் திருவுருவச் சிலை உள்ளது.
அறுபத்து மூவருள் நமிநந்தி அடிகள், செருத்துணை நாயனார், கழற்சிங்கர், விறன்மிண்டர் ஆகியோரின் முக்தித் தலம்.
சுந்தரமூர்த்தி நாயனாரின் தாயாரான இசைஞானியார் அவதரித்தத் (கமலாபுரம்) தலம்; இஃது திருவாரூரிலிருந்து மன்னார்குடி பாதையில் 7-கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலத்தில் சிவன் கோயில் ஏதுமில்லை (2005). திருவாரூர் தெற்குக் கோபுரத்திற்கு வெளியே, பரவையார் வாழ்ந்த கிழக்கு நோக்கிய மாளிகை வளாகத்தில் இசைஞானியாருக்குத் திருவுருவச் சிலை உள்ளது.
திருவாரூர் - கோயில், குளம், வீதி, தேர்த்திருவிழா ஆகியவற்றைப் பற்றிய தேவாரத் திருப்பாடல்களைக் கொண்டத் திருத்தலம்.
திருவாரூர்க் கோயில் - தியாகராஜர் திருக்கோயில், திருமூலட்டானம், பூங்கோயில் என்றெல்லாம் சிறப்பிக்கப்படுகிறது.
கிழக்குக் கோபுர வாயிலின் கோயிலுள் நுழைந்தால் வீதிவிடங்க விநாயகருக்குப் பின்னால் "பிரமநந்தி" எழுந்தருளியுள்ளார்; மழைவேண்டின் இப்பெருமானுக்கு நீர் கட்டுவதும், பால் கறக்க அடம்பிடிக்கும் பசுக்கள் நன்றாகப் பால் கறக்க, இப்பிரமநந்திக்கு அறுகுச் சாத்தி அதை பசுக்களுக்குக் கொடுக்கப்படும் வழக்கமும், நம்பிக்கையும் மக்களிடையே காணப்படுகின்றது.
சோழர்கள், பாண்டியர்கள், விசயநகர வேந்தர்கள் ஆகியோரின் கல்வெட்டுகள் மொத்தம் 65 உள்ளன.
கோயில் அமைப்பு[தொகு]
33 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள, மிகவும் பிரம்மாண்டமான இக்கோயிலில், 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயிலை சுற்றிப் பார்க்கவே, முழுமையாக ஒருநாள் ஆகும்.
கோயில் இடைக்காலச் சோழர்கள் காலத்தில் கற்கோயிலாக கட்டப்பெற்றதாகும். அதற்கு முன்பு மகேந்திரப் பல்லவன் காலத்தில் செங்கல் கோயிலாக இருந்திருக்க வேண்டும். சோழப் பேரரசர் கண்டராதித்த சோழரது மனைவியாராகிய செம்பியன் மாதேவியாரால் கட்டப்பெற்ற கற்றளியை உடையது. சோழர்கள் மட்டுமல்லாமல், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர், தஞ்சை நாயக்கர் மற்றும் மராத்திய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இக்கோயிலுக்கு ஆதரவளித்துள்ளார்கள்.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்