வேதங்களும் தண்டாயுதபாணியின் பெருமையும்

வேதங்களும் தண்டாயுதபாணியின் பெருமையும்

பரமேச்வரனிடமிருந்து முதலாவதாகத் தோன்றியது சுப்ரமண்யமே. 'யாதே ருத்ர சிவா தனூ :' என்கிறது ருத்ர மந்திரம்.

ஆறெழுத்து சுப்ரமண்ய மந்திரத்தை கண்டுபிடித்த காரணத்தினால் ஸனத் குமரர் அம் மந்திரத்தின் ரிஷியாகக் கூறப்படுகிறார்.

முருகன் பிரும்மமானதினால்தான் வேத மாதாவே அவனைப் பற்றி எதுவும் கூறாமல் 'சுப்பிரமண்யோம்' என்று மும்முறை
கூறுவதுடன் நிறுத்தி விடுகிறாள்.

      'நமோ ஹிரண்ய பாஹவே ஸேனான்யே'

... என்று ருத்திரத்தில் வருகிறது. 'உள்ளும் புறமுள்ள பகைவர்களை அடியோடு அழிக்கும் சேனாபதிக்கு வணக்கம்' என்று இதன்
பொருள். இது முருகனையே குறிக்கும் என்று கொள்ளலாம்.

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா தன் கீதையில் 'படைத்தலைவர்களில் கந்தனாக விளங்குகிறேன்' என்கிறார். ராமாயணத்தில் வால்மீகி
பால காண்டத்தில் விசுவாமித்திரர் வாயிலாக கந்தனின் அவதாரப் பெருமையை வெளியிடுகிறார்.

      குமார சம்பவஸ் சைவ
         தன்ய: புண்யஸ்த தைலச
      பக்தஸ்சய: கார்த்திகேயே
         காகுஸ்த புவிமானவ:
      ஆயுஷ்மான் புத்ர பெளத்ரஸ் ச
         ஸ்கந்த ஸாலோக்யதாம் விரஜேத்||

குமரக் கடவுளின் பிறப்பை படிக்கிறவர்களுக்கு செல்வம் கொழிக்கும். பாவம் அகன்று புண்ணியம் வந்தடையும்.

பாரதத்தில் பல இடங்களில் வீரர்களைப் பற்றிப் பேசும் இடங்களில் எல்லாம் வியாசர் முருகனையே குறிப்பிட்டிருக்கிறார்.

பீஷ்மர் படைத்தலைமையை ஏற்கு முன் முருகனை வேண்டிக்கொள்கிறார்.

      நமஸ்க்ருத்ய குமாராய
         ஸேனான்யே சக்திபாணயே
      அஹம் ஸேனாபதிஸ் தேத்ய
         பவிஷ்யாமி நஸம் சய:||

      அவனே பிரணவப்பொருள்

வேதத்தின் வித்தான ஓம் என்ற பிரணவத்தின் பொருளே சுப்பிரமண்யம்தான்.

      'அ' காரோ விஷ்ணு ருத்ரிஷ்ட
      'உ' காராஸ்து மகேச்வர:
      'ம' காராஸ்து ஸ்ம்ருதோ பிரும்மா
      பிரணவஸ்தி த்ரியாத்மக:

அகார உகார மகாரம் இணைந்த பிரணவ ஸ்வரூபம் அவரே. அவரே பிரும்மா விஷ்ணு ருத்ர ஸ்வரூபி. இவரே வேதத்தின் பொருள்.

      வேதத்தில் 'ஓம்'

      யச் சந்தஸாம் ருஷபோ விஸ்வரூப:
      சந்தோப் யோத் யம்ருதாத் ஸம்பூவ|
      ஸமேந்த்ரோ மேதயாஸ்ப்ருணோது|
      அம்ருதஸ்ய தேவ தாரணோ பூயாஸம்|

      சரீரம் மே விசர்ஷணம்|
      ஜிஹ்வா மே மதுமத்தமா|
      கர்ணாப்யாம் பூரி விச்ருவம்|
      பிரஹ்மண: தோஸோஸி மேதயா பஹித:|
      ச்ருதம் மே கோபாய||

... தைத்ரீய உபநிஷத்.

எது வேதங்களுள் சிறந்ததோ ஸர்வ ரூபமாக இருக்கிறதோ வேதமாகிய அமிருதத்திலிருந்து உண்டாயிற்றோ அந்த 'ஓம்' எனக்கு
பிரக்ஞையைக் கொடுக்கட்டும்.

அமிருதத்துவத்திற்கு ஹேதுவான பிரஹ்ம ஞானத்தை நான் தரிசிக்கச் செய்ய வேண்டும். அந்த ஞானத்தைப் பெறத் தகுதியுள்ளதாக
பலமுள்ளதாக சரீரம் ஆகட்டும். என் வாக்கு இனிதாகட்டும். மதுரமான வார்த்தைகளை எப்போதும் உச்சரிக்கட்டும். என் செவி நல்ல
விஷயங்களைக் கேட்கட்டும். ஓம்காரமே! நீ பிரஹ்மத்தின் உறைபோல விளங்குகிறாய். பிரஹ்ம ஞானத்தைப் பற்றிய என் அறிவைக்
காத்தருள்வாய். நான் கேட்டதை மறவாமலிருக்கச் செய்வாய்.

'ஓம்' என்ற பதமே மந்திரங்களில் இல்லை. இந்திரன் என்ற பதம் இருக்கிறது. பசுக்கூட்டத்தின் மத்தியில் ரிஷபம் போல
மந்திரங்களிடையே சிறந்து விளங்குகிறான். இந்திரன் என்றால் ஓம் காரம் என்பதுதான் அர்த்தம். விசுவரூபம், வேதமாகிய
அமிருதத்திலிருந்து எழுந்தது எல்லாம் ஓம் காரத்தையே குறிப்பிடுகிறது.

      ப்ரஹ்மத்தின் உறை

பளபளப்பான வாளுக்கு உறை (கவசம்) இருப்பது போல பிரஹ்மத்திற்கு உறையாக இருக்கிறது ஓம்காரம்.

ஓம்காரத்தை தியானிப்பதும், பிரஹ்மத்தை தியானிப்பதும் ஒன்றே. கமண்டலத்தில் ஜலம் இருக்கிறது. ஜலம் வேண்டும் போது
ஜலத்தை எடுத்து வா என்று சொல்வதில்லை. கமண்டலத்தை எடுத்து வா என்கிறோம். இங்கே ஜலம் பிரும்மம்; கமண்டலம் ஓம்காரம்.
ஓம் காரத்தினுள் பிரும்மம் அடங்கி இருக்கிறது.

முருகக் கடவுள் பற்பல வடிவாய் விளங்கும் நிலையை ஸ்ரீ குமர குருபரர் தன் கந்தர் கலிவெண்பாவில் பின் வருமாறு குறிப்பிடுகிறார்.

      ஓங்காரக்துள் ஒளிக்கும் உள்ளொளியாய்
      ஐந்தொழிற்கும் நீங்காத
      பேருருவாய் நின்றானே - தாங்கரிட
      மந்திரமே சோரியா வான்பதமே மாமுடியாத்
      தொந்தமுறும் வன்னமே தொக்காகப் - பந்தனையால்
      ஒத்தபுவனத்துருவே உரோமமாத்
      தத்துவங்களே சத்த தாதுவா - வைத்த
      கலையே அவயமாக் காட்டு மத்துவாவின்
      நிநயே வடிவமாய் நின்றோய் - பலகோடி
      அண்டம் உருவாகி அங்கம் சராசரமாய்க்
      கண்டசக்தி மூன்றுட் காரணமாய்த் - தொண்டுபடும்
      ஆவிப்புலனுக்கு அறிவு அளிப்ப ஐந்தொழிலும்
      ஏவித்தனி நடத்தும் என் கோவே - மேவ
      வரும் அட்டமூர்த்தமாம் வாழ்வே மெய்ஞ்ஞானம்
      தரும் அட்ட யோகத் தவமே.

'ஓம்' காரத்தின் உள்ளொளியாய் விளங்குபவன் முருகன்.

'ஓங்காரத் துள்ளொளிக் குள்ளே முருகனுருவம் கண்டு' என்கிறார், அருணகிரியார் தன் கந்தரலங்காரத்தில்.

'வேத ஓம் எல்லாம் விளங்க உணர்த்தி' - சிவனுக்கே பிரணவ தத்துவத்தை உபதேசித்தவர் முருகப்பெருமான்.

'அறிவு ஆற்றல் எனும் அயில்வேல் ஏந்தி' - வேல் ஞானத்தின் சின்னம் - இரு மனை தம்மை எமக்கென புணர்ந்த - இச்சா சக்தி,
கிரியா சக்தி இருவரையும் தன் மனைவிகளாகக் கொண்டு.

இப்படி விளங்கும் சுப்பிரமண்யம் சச்சிதானந்த பூரணப் பரப் பிரம்மமே. இப் பரப்பிரும்மத்திடம் சரணடைவது மூலம் நாமே
பிரும்மமாகி விடலாம். இப்படி பிரும்ம ஸ்வரூபமாவதே கைவல்ய முக்தி. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்
ஆகிய ஐந்தொழில்களையும் செய்பவன் முருகன்.

இறைவன் அத்துவாக்கள் வடிவமுடையவன் என்பதை.

      'அத்துவா மூர்த்தியாக அறைகுவ தென்னை யெனின் ... மறைகளெல்லாம்'

... என்கிறது சிவ ஞான ஸித்தியார்.

      அத்துவாக்கள் மார்க்கம்

மந்திராத்துவாவே ரத்தமாகவும், பதாத்துவாவே முடியாகவும், வர்ணாத்துவாவே தோலாகவும், புவனாத்துவாவே ரோமமாகவும், மற்ற
தத்துவங்களே ஏனைய தாதுக்களாகவும், கலாத்துவாவே உறுப்புகளாகவும், பல கோடி அண்டங்கள் உடலாகவும், இச்சா, ஞான, கிரியா
சக்திகளே அந்தக் கரணமுமாய் முருகன் விளங்குகிறான். சுருங்கக் கூறின் முருகன் எங்கும் எதிலும் விஸ்வரூபியாக விளங்குகிறான்
என்கிறார் குமரகுருபரர்.

      'ஆறெனும் சமயம் அனைத்தினும் உள்ளார்க்கு
         ஆறிரு கரங்களால் அளித்தருள் செய்தும்'

இறைவனை அடைவதற்காக வழிகாட்டும் சமயங்கள் ஆறு வகை என்று சொல்லப்படும். இது காணாபத்யம், சைவம், வைஷ்ணவம்,
கெளமாரம், செளரம், சாக்தம் என்பதைக் குறிக்கும்.

நையாயிகம், வைசேஷிகம், சாங்கியம், யோகம், பூர்வ மீமாம்ஸை, உத்திர மீமாம்ஸை என்று ஆறு தர்சனங்களையும் குறிக்கும். எல்லா
சமயங்களைச் சேர்ந்தவர்களையும் முருகன் ஐந்த ொழில் புரிந்து காத்து ரக்ஷிக்கிறார்.

      குக மாயை

முருகன் ஞான வடிவானவன். அவனுக்கு 'சித்' என்ற பெயரும் உண்டு. சித் என்னும் குகப் பெருமானின் சக்தியே பிரக்ருதி மாயை
யாதலின், மாயைக்கு 'சித் சக்தி' 'சித் பிரக்ருதி' 'குக மாயை' என்றெல்லாம் பெயர்கள் உண்டு.

மயில் ஆடும்போது நம் கவனத்தை கவருகிறது. அது போல மாயையும் கோடிக் கணக்கான அழகிய பொருள்களோடு கூடிய பிரபஞ்சம்
என்னும் தன் தோகையை விரித்து (சிருஷ்டித்து) நர்த்தனம் செய்கிறது. மயில் தோகையை ஒடுக்கிக் கொள்வதே சம்ஹாரம்.
எல்லோரையும் போல முருகன் மாயைக்குக் கட்டுப்படாமல், அதன் மேல் ஏறி அதனை அடக்கி ஆள்கிறார். முருகன் மயிலை
வாகனமாகக் கொண்டுள்ள தத்துவம் இதுவே.

(செறிவு உறு சித் மாயையாம் மயில் ஏறி)

பிரும்மா முதல் பிரகிருதி வரையுள்ள எல்லாப் பொருள்களும் மாயையினால் உண்டானவையே.

பிரபஞ்ச சிருஷ்டியில் முதலில் மாயையிலிருந்து தோன்றியது நாத தத்துவம். இது ஒலி வடிவானது. இது தோன்றிய பின்பே விந்து
முதல் பிருத்வி ஈறாக உள்ள பிரபஞ்சப் பொருள்கள் எல்லாம் தோன்றின.

இந்த நாத தத்துவத்தையே முருகன் சேவல் கொடியாகக் கொண்டிருக்கிறார். விடியற்காலையில் முதலில் விழித்துக் குரல் கொடுப்பது
சேவல்.

நாத தத்துவம் மாயையிலிருந்து பிரிந்து வந்ததாகும்.

      இச்சை, ஞான, கிரியா சக்திகள் விளக்கம்

இச்சை (வள்ளி) கிரியா (தேவ யானை) சக்திகளுடன் ஞானத்தை (வேலை) ஏந்தி முருகன் விளங்குகிறான்.

      ஆக வரும் இச்சை அறிவு இயற்றலால்
      போக அதிகாரப் பொருளாகி

... கந்தர் கலிவெண்பா

லயம் - ஒன்றுபடுதல்
போகம் - துய்த்தல்
அதிகாரம் - தொழில் புரிதல்

இச்சா சக்தி மட்டும் எங்கும் ஒரு தன்மையாக விளங்கும், ஞான சக்தி தனித்து நின்றும் இச்சா சக்தி தனித்து நின்றும் வியாபிப்பதே
லயம். ஞான கிரியா சக்திகள் ஒத்து நின்று வியாபிப்பதே யோகம். ஞான சக்தி மிகுதியாயும் கிரியா சக்தி குறைந்தும் அல்லது கிரியா
சக்தி மிகுதியாயும் ஞான சக்தி குறைந்துமிருப்பது அதிகாரம்.

இறைவன் ஞான சக்தியால் அறிந்து இச்சா சக்தியால் பிரபஞ்சத்தை இயக்குபவன். இவ்விரண்டு சக்திகளும் இறைவனை விட்டு
நில்லாது. இறைவனும் அச்சக்திகளை விட்டு நில்லான்.

உரு - வடிவுடையது, சகளத் திருமேனி
அரு - வடிவில்லாதது, நிஷ்களத் திருமேனி

இவை முறையே லய, போக, அதிகாரம் என்ற ஸ்தானத்தைப் பெற்று விளங்கும்.

உரு நான்கும் அரு நான்கும் அரு உரு ஒன்றுமாக ஒன்பது வகை. இவற்றை 'நவத்திரு பேதம்' என்பர். இத்திருவுருவங்கள்
ஆன்மாவின் பிறப்பை ஒழிப்பதற்கு இறைவன் கொள்ளும் கருணை வடிவங்கள். இவை போக வடிவம், வேக வடிவம், யோக வடிவம்,
என்பதாகும்.

தைப்பிங் லாரூட் (மலேசியா), அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டு
பெருவிழா (சுக்கில தை 19ம் நாள், 1-2-1990) சிறப்பு மலரிலிருந்து தொகுக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்