ஐந்து சென்ட் நிலத்தில் நெல்லும், மீனும், கோழியும் வளர்ப்பது சாத்தியம்

""ஐந்து சென்ட் நிலத்தில் நெல்லும், மீனும், கோழியும் வளர்ப்பது சாத்தியம்,'' என்கிறார் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை உழவியல் துறை பேராசிரியர் ஆர்.எம்.கதிரேசன்.
இந்திய வேளாண் ஆய்வுக்கழகம், உலகவங்கி நிதியுதவியுடன் சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான ஆய்வுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாகை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் 600 விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி அளிக்கப்பட்டு, சிறப்பாக செயல்படுகின்றனர். எங்களது மாதிரி திட்டம் ஐந்து சென்ட் அளவு தான். ஐந்து சென்ட்டில், அதாவது 200 சதுர மீட்டரில் நடுவில் 20 சதுரஅடியில் ஒருமீட்டர் ஆழத்திற்கு பள்ளமாக்க வேண்டும்.
பள்ளத்தில் நீர் நிரம்பும் போது, நிலத்தின் மட்டமும், நீர் மட்டமும் ஒன்றாக இருக்க வேண்டும். வழக்கமாக நெல்வயலில் 10செ.மீ., ஆழத்திற்கு நீர்கட்டுவதுண்டு. பள்ளத்தில் கட்லா, மிர்கால், ரோகு, புல்கெண்டை என, 200 மீன்குஞ்சுகளை விடவேண்டும். நெற்பயிர் வளரும் போது கூடவே களையும் வளரும். புல்கெண்டை ரகம், களைச்செடிகளை உண்ணும். பகலில் பள்ளத்திலும், வெயில் குறையும் போது வயலில் நீந்திச் சென்று புழு, பூச்சிகளை உணவாக கொள்ளும்.
பள்ளத்தையொட்டி 20 இறைச்சிக் கோழிகள் வளர்க்கும் ஒரு கூண்டு அமைக்க வேண்டும். இந்த கூண்டை நாங்களே இலவசமாக அமைத்துத் தந்தோம். ஒருநாள் குஞ்சின் விலை ரூ.25 முதல் ரூ.35க்குள் இருக்கும். இவற்றை முதல் பத்து நாட்கள் வீட்டில் வளர்த்து, 11வது நாளில் கூண்டில் வளர்க்க வேண்டும். கடைகளில் கிடைக்கும் கறிக்கோழி தீவனம் கொடுத்து வளர்த்தால், 45 நாட்களில் இரண்டு கிலோ எடை அதிகரிக்கும். ஒரு கோழிக்கு தீவனத்திற்கு ரூ.60 கணக்கிட்டால், செலவு போக கோழிக்கு ரூ.200 லாபம் கிடைக்கும்.
150 நாட்கள் நெற்பயிரில் ஐந்து முறை கோழி வளர்த்து, லாபம் பார்க்கலாம். கோழி எச்சம் நீரில் கரைந்து பயிர்களுக்கும், மீனுக்கும் உரமாகும். 150 நாட்களில் 30 முதல் 45 கிலோ எடையுள்ள மீன்கள் மொத்தமாக கிடைக்கும். மழை, வெள்ளத்தால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் கோழி, மீன்கள் கைகொடுக்கும். இதையே ஒரு ஏக்கர் அளவுக்கு விரிவுபடுத்தினால், 20 கோழிக் கூண்டுகள் வைக்கலாம். நெல் சாகுபடி செய்வதற்கு முன் அடியுரம் இடலாம். கோழி, மீன்கள் வளர்ப்பதால், யூரியா போன்ற மேல் உரம், பூச்சிகொல்லி மருந்து எதையும் பயன்படுத்தக்கூடாது, என்றார். இவரிடம் பேச: 96551 88233.
எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை.------Dinamalar news

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்