நாமக்கல் ஸ்ரீநரசிம்மர்,ஸ்ரீஆஞ்சனேயர் கோயில்






"நாமகிரி" என்று அழைக்கப்படும் 65 மீ உயர மிகப் பெரிய ஒற்றைப் பாறை நகரின் நடுவில் உள்ளது. நாமகிரி என்ற பெயரிலிருந்து நாமக்கல் என்ற பெயர் உருவானது. இவ்வூரின் பழைய பெயர் 'ஆரைக்கல்' என்பதாகும். இப்பெயர் பல கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாறையின் மீது கோட்டைஒன்று உள்ளது இதை ராமச்சந்திர நாயக்கர் கட்டியது என கருதப்படுகிறது, இதை மைசூர் அரசின் அதிகாரி லட்சுமி நரசய்யா அமைத்தார் என்ற கருத்தும் நிலவுகிறது. பின்னாளில் திப்பு சுல்தான் இப்பாறைக் கோட்டையிலிருந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து சண்டையிட்டார் என்றும் நம்பப்படுகிறது. மகாத்மா காந்தி அவர்களின் பொதுக்கூட்டம் இப்பாறை அருகே நடைபெற்றது. அரிசனம் இயக்கத்திற்கு ஆதரவு வேண்டி 1934 பிப்ரவரி 14 அன்று நாமக்கலில் மகாத்மா காந்தி பேசிய கூட்டத்திற்கு 15,000 மக்கள் வந்திருந்தனர்
இப்பாறையின் ஓரு புறம் அரங்கநாத பெருமாள் குகைக்கோயில் உள்ளது, மறுபுறம் நரசிம்ம பெருமாள் குகைக்கோயில் உள்ளது. இக்கோயில்கள் கிபி 784ல் அதியமான் மரபைச்சேர்ந்த குணசீலன் கட்டியதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

நாமகிரி என்பதே தமிழில் நாமக்கல் எனப்படுகிறது. ஸ்ரீவிஷ்ணுவின் நரசிம்ம அவதாரம். பக்த பிரகலாதனின் விருப்பத்தை ஏற்று தூணில் இருந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்ட நரசிம்மர், இரண்யகசிபுவை வதம் செய்கிறார். அவன
நாமகிரி என்பதே தமிழில் நாமக்கல் எனப்படுகிறது.
ஸ்ரீவிஷ்ணுவின் நரசிம்ம அவதாரம். பக்த பிரகலாதனின் விருப்பத்தை ஏற்று தூணில் இருந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்ட நரசிம்மர், இரண்யகசிபுவை வதம் செய்கிறார். அவனுடன் உக்கிரமாகப் போரிட்டு, ஒரு கொடூரனை கொடூரமாக வதம் செய்ததால், அந்த உக்கிரம் தணியாமல் கர்ஜித்தார். சாந்த ஸ்வரூபியான ஸ்ரீமந் நாராயண அவதாரம் என்றாலும், பகவானின் உக்கிர ஸ்வரூபத்தை எப்படித் தாங்குவது? எனவே, அவருடைய சாந்தமான குணத்தை மீண்டும் அவருக்கு நினைவூட்ட, கருணையே வடிவான மகாலட்சுமியை வேண்டினர் தேவர்கள். ஆனால், அவர்கள் சொல்வதைக் கேட்ட அன்னையோ உக்ர ரூபத்தில் இருந்த அவருக்கு அருகில் செல்லவே பயந்தாள். எனவே இறுதியில் பக்த பிரகலாதன் ஸ்ரீநரசிம்ம மூர்த்தியை சாந்தமடையச் செய்தான்.
இதன் பின்னர் பெருமாளைப் பிரிந்து தவித்த அன்னை மகாலட்சுமி, ஸ்ரீநரசிம்மப் பெருமானின் அருளைப் பெற ஒரு நீர்நிலை அருகே பர்ணசாலை அமைத்து தவம் செய்து வந்தாள்.
ராமாவதாரத்தின் போது, போரில் மயக்கமுற்று வீழ்ந்த ராம லட்சுமணர்களை மீட்க, ஸ்ரீஆஞ்சநேயர் சஞ்சீவி மூலிகை கொண்ட மூலிகை மலையைப் பெயர்த்து வந்தார். அந்தப் பணி செவ்வனே நிறைவேறிய பிறகு, மீண்டும் அந்த மலையை அதன் இடத்திலேயே வைத்துவிட்டுத் திரும்பினார். அப்படித் திரும்பும் வழியில் இமயமலையில் கண்டகி நதியில் ஒரு பெரிய சாளக்கிராமக் கல்லைப் பார்த்தார். சாளக்கிராமக் கல், பகவான் விஷ்ணுவின் வடிவம் என்பர்.
அப்படி ஒரு கல்லில் ஸ்ரீநரசிம்மர் எழுந்தருளியிருப்பதைக் கண்ட அனுமன், அந்தப் பெருங்கல்லை வழிபாட்டுக்காகப் பெயர்த்தெடுத்து வான் வழியே பறந்து வந்தார். சற்று தொலைவு வந்த பின்னர், அவர் நித்ய அனுஷ்டானம் செய்வதற்கான நேரம் நெருங்கியதை உணர்ந்தார்.
அந்த நேரம், இந்தத் தலத்தின் அருகே உள்ள கமல தீர்த்தம் அவருக்கு தென்பட்டது. சாளக்கிராமத்தினை கீழே வைக்க முடியாது என்பதால், மேற்கொண்டு என்ன செய்வது என்று யோசித்தார். அப்போது, அந்த தீர்த்தக் கரையில் மகாலட்சுமித் தாயார், தவமியற்றி வருவதைக் கண்டார்.
அருகே சென்று தாயாரை வணங்கிய ஆஞ்சநேயர், தாயாரின் தவத்துக்கான காரணத்தைக் கேட்டார். ஸ்ரீ விஷ்ணுவின் நரசிம்ம வடிவை தரிசிக்க விரும்புவதாகவும், அதனால் ஸ்ரீநரசிம்மப் பெருமாளை நோக்கி தவம் இருப்பதாகவும் கூறினார். ஆஞ்சநேயர், அவரது கையில் ஸ்ரீநரசிம்மர் ஆவிர்பவித்திருந்த அந்த சாளக்கிராமத்தைக் கொடுத்தார். தான் நீராடிவிட்டு, திரும்ப வந்து வாங்கிக் கொள்வதாகக் கூறிச் சென்றார்.
ஆனால், அனுமன் திரும்ப வர காலதாமதம் ஆகிவிட்டது. எனவே, மகாலட்சுமித் தாயாரும் தன் கையில் வைத்திருந்த அந்த சாளக்கிராமப் பெருங்கல்லைத் தரையில் வைத்துவிட்டார். சற்றே தாமதமாக வந்த ஆஞ்சநேயர், அந்த சாளக்கிராமத்தை எடுக்க முயன்றார்.
ஆனால் முடியவில்லை. அது பெரிய மலையாக வளர்ந்தது. அம்மலையில் நரசிம்மர் தோன்றினார். தன்னை நோக்கி தவமியற்றிய தாயாருக்கு தரிசனமும் அளித்து அருள் புரிந்தார். இதன் பின்னர், அவர் அருள் பெற்ற அனுமனும் இங்கேயே தங்கினார்.

ஸ்ரீ ஆஞ்சனேயர்
க்ஷராப்திநாதர் திருக்கோலத்தில் சேவை சாதிப்பதால் இந்த நகரம் ஸ்ரீசைல úக்ஷத்ரம் என்றும், ஸ்ரீ சைலகிரி என்றும், கார்கோடகன் நற்கதி அடைந்ததால் நாகவனம் என்றும் நாமகிரி என்றும் போற்றப் படுகிறது. ஸ்ரீமஹாலட்சுமி நரசிம்ம மூலமந்திரம் ஜபித்து தவமிருக்க, ஸ்ரீநரசிம்மரும் அகமகிழ்ந்து காவேரிக்கும் மஹாலட்சுமிக்கும் அருள்பாலித்தார். அப்போது, இந்தத் தலத்துக்கு வந்து, கமலாலயத்தில் குளித்து மனம் முழுக்க பக்தியுடன் வழிபடுபவர்களுக்கு, ஏவல், பில்லி, சூன்யம் போன்றவற்றில் இருந்து விடுதலை கிட்டும், சகல் நலன்களும் அடையப் பெறுவர் என ஸ்ரீநரசிம்மர் அவர்களுக்கு வரம் அருளியதாக தல புராணம் கூறுகிறது.
தந்தை காச்யப முனிவரிடம் குறும்பு செய்த கார்கோடகனை, காட்டுத்தீயில் சிக்கி அவதிப்படுமாறு சபித்தார் முனிவர். அவ்வாறு ஒரு சமயம் கார்கோடகன் காட்டுத் தீயில் சிக்க, நள சக்கரவர்த்தி அவனை அதிலிருந்து காப்பாற்றினார். தீயில் இருந்து காப்பாற்றப்பட்ட கார்கோடகன், ஸ்ரீமந் நாராயணனை நோக்கி தவமிருந்தான். நாராயணரும் அவன் முன் தோன்றி, விருப்பம் யாதெனக் கேட்டார். ஆதிசேஷன் மீது பகவான் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பது போல், அடியேன் மீதும் பள்ளிகொண்டு அருள்பாலிக்க வேண்டும் என வேண்டினான் கார்கோடகன். அவன் விருப்பத்தின்படி, ஸ்ரீ ரங்கநாதனாக, மலையின் பின்புறம் கார்கோடகசாயியாக காட்சியளிக்கிறார் பகவான் என தல புராணம் கூறுகிறது. மேலும் கார்கோடகன் தினமும் கமலாலய குளத்திலிருந்து நீர் எடுத்து வந்து நித்ய ஆராதனம் செய்கிறானாம்.
நாமக்கல்லில் சுமார் 18 அடி உயரத்தில் சக்திவாய்ந்த ஸ்ரீஆஞ்சநேயர் திறந்த வெளியில் நின்று தொழுத கரங்களுடன் தனிக் கோயிலில் காட்சி அளிக்கிறார். ஸ்ரீநரசிம்மர் கோயிலில் ஸ்ரீநாமகிரி தாயார் தனி சந்நிதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். ஸ்ரீநாமகிரி தாயார் ஸ்ரீநரசிம்மமூர்த்தியை எண்ணி தவமியற்றி அருள்பெற்றதால் இக்குளம் கமலாலயம் எனும் சிறப்பு பெற்றது. கணிதமேதை ராமானுஜத்துக்கு கடினமான கணிதப் புதிர்களுக்கான விடைகளை கனவில் தோன்றி புலப்படுத்தினார் நாமகிரி தாயார் என்பர். இதை கணிதமேதை ராமானுஜமே வெளிப்படுத்தியிருக்கிறார். பக்தர்களுக்கு கண்கண்ட தெய்வமாக நாமகிரி தாயார் விளங்குவது இப்பகுதி மக்களின் உணர்வுபூர்வமான பக்தியில் இருந்து புலனாகும்.
இந்த ஆலயத்தில் உள்ள ஸ்ரீ நரசிம்ம தீர்த்தத்தில் பக்தர்கள் காலை, மாலை வேளைகளில் நீராடி, பக்தியுடன் ஸ்ரீநாமகிரி தாயார், ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீஆஞ்சநேயர் முதலிய சந்நிதிகளை பன்னிரு முறை வலம் வருகிறார்கள். அப்படி நியம நிஷ்டையுடன் ஸ்ரீ நாமகிரி தாயாரை தரிசிக்கும் பக்தர்கள் பேய், பிசாசு, பில்லிசூன்யம், ஏவல், தீராத நோய்கள், சந்ததியின்மை முதலிய குறைகள் நீங்கப் பெறுகிறார்கள்.
இந்தத் தலத்தில், நாமகிரி தாயாருக்கே முதலிடம். ஆதலால் இங்கு வரும் பக்தர்கள் தாமரையில் ஸ்ரீநாமகிரி தாயாரை முதலில் தரிசித்து பிறகே நரசிம்மப் பெருமாளை வழிபடுகிறார்கள். பக்தர்கள் புடவை, ஆபரணங்கள், குழந்தைகளுக்கு முடி எடுத்தல் முதலிய காணிக்கைகளை செலுத்தி திருமஞ்சனம் முதலிய ஆராதனைகளால் ஸ்ரீநாமகிரி தாயாரை வழிபடுகிறார்கள்.
ஸ்ரீநாமகிரி என்ற தாயாரின் பெயராலேயே இந்தத் தலம் நாமக்கல் என்று வழங்கப்படுகிறது. அடியார்கள் தம் குழந்தைகளுக்கு நரசிம்மன், நாமகிரி என்று பெயர் சூட்டி மகிழ்கிறார்கள். ஸ்ரீ நாமகிரி தாயாரின் திருநட்சத்திரமான பங்குனி உத்திரத்தில், ஸ்ரீநரசிம்மர் தாயார் சந்நிதிக்கு எழுந்தருளி, திருமஞ்சனம் உள்ளிட்ட ஆராதனைகள் கண்டருளி திருக்கல்யாண திருக்கோலத்துடன் சேவை சாதிக்கிறார்.
ஸ்ரீநரசிம்மர் கோயில் கொண்டுள்ள இந்தத் தலம், மலையின் மேற்புற குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளது. இங்கு வலது காலை தரையில் ஊன்றியும் இடது காலை மடி மீது வைத்தும் ஸ்ரீநரசிம்மர் வீற்றிருக்கிறார். அருகில் சனகாதி முனிவர்கள். சூர்ய சந்திரர்கள் கவரி வீச, வலப்புறம் ஈசனும், இடப்புறம் பிரம்மாவும் பகவானின் உக்கிரம் தீரவேண்டி வழிபடுகிறார்கள். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் ஒரே இடத்தில் அருள்பாலிப்பதால் இது மும்மூர்த்தி தலம் என அழைக்கப்படுகிறது. இரணியனை வதைத்த பின், ரத்தக் கறையுடனும் கூரிய நகங்களுடனும் ஸ்ரீநரசிம்மர் காட்சி தருகிறார்.
இந்த மலையைச் சுற்றிலும் கோட்டை ஒன்று உள்ளது. மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கோயிலும் கோட்டையும் பாதுகாக்கப்படுகிறது. மலையைச் சுற்றி நரசிம்ம புஷ்கரணி தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், க்ஷீராப்தி தீர்த்தம், கமலாலயம் சக்ரதீர்த்தம், தேவ தீர்த்தம், சத்ய புஷ்கரணீ முதலிய புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன.
நாமக்கல்லுக்கு வரும் பக்தர்கள், தனிக்கோயில் கொண்டுள்ள ஸ்ரீஆஞ்சனேயர் முன் தமது குறைகளை வைத்து, காரியங்களை சாதித்துக் கொள்கிறார்கள். சனி, ராகு பிரீதிக்காக விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெயில் செய்த உளுந்த வடைகளால் மாலைகள் சாற்றியும் வாசனை சந்தனத்தால் அலங்காரம் செய்து மகிழ்ந்தும் தங்கள் பிரார்த்தனைகளை செலுத்துகிறார்கள்.
இந்த ஆஞ்சநேயரை வழிபட்டால் நற்புத்தி, சரீரபலம், கீர்த்தி, அஞ்சாமை, பயமின்மை, நோயின்மை, தளர்ச்சி இன்மை, வாக்கு சாதுர்யம் முதலிய நன்மைகள் ஏற்படுகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Comments

  1. Wow amazing article dear, I found what I was looking for, thanks for sharing this information

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்