கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி

கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி
ஆன்மிகரீதியாக வெள்ளிக்கிழமை சிறப்பு மிகுந்த தினமாக கருதப்படுகிறது. கிழமைகளில் சுக்ர வாரம் என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமை தான். அள்ளிக் கொடுக்கும் சுக்ரனுக்குரிய வெள்ளிக்கிழமை அன்று, துள்ளித் திரியும் சிங்கத்தின் மேல் ஏறி பவனி வரும் தூயவளாம் அம்பிகையை வழிபட்டால், நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும்.
சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதமான ஆடி மாதம், இறைவியை நாடிச் சென்றவர்களுக்கு எல்லாம் கோடி கோடியாய் நற்பலன்கள் பெருகும் மாதமாகும். தமிழ் வருடத்தில் நான்காவது மாதமான ஆடி, தட்சிணாயன புண்ணிய காலமாகும். இது தேவர்களின் இரவு நேரம் என்று புராணங்கள் சொல்கின்றன.
எனவே ஆடி வெள்ளியன்று, மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை அலங்கரித்துப் பார்த்து வழிபாடு செய்தால் வளங்கள் அனைத்தும் வந்து சேரும். ஆடி மாதச் செவ்வாய் அன்று செட்டி நாட்டு பகுதிகளில் பெண்கள் மட்டும் ஒரு சந்தி கொழுக்கட்டை பிடித்து வழிபாடு செய்வர்.
இதன்மூலம் குடும்ப முன்னேற்றமும், மாங்கல்ய பாக்கியமும், கணவருக்கு தொழில் மேன்மையும் ஏற்படும். ஆடி வெள்ளியன்று குத்து விளக்கு பூஜை செய்து, சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத் துணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்துக் கொடுத்தால் நல்ல பலன்கள் வந்து சேரும்.
ஆடி அமாவாசை அன்று கடல் அல்லது நதியில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தால், அவர்களது ஆசி கிடைக்கும். அதன் மூலம் இல்லத்திலுள்ள தடைகள் அகன்று சுபகாரியங்கள் முடிவடையும். ஆடி வெள்ளியன்று இலக்குமியை வழிபட்டால், நாம் பண மழையில் நனையலாம்.
அங்ஙனம் வரம் கொடுக்கும் லட்சுமியை வரலட்சுமி என்றழைத்து விரதம் இருந்து வழிபட ஏற்ற நாள் ஆடி மாதம் கடைசி வெள்ளிக் கிழமையாகும். அன்றைய தினம் பூஜை அறையில் வரலட்சுமி படத்தை பல கையின் மேல் நடுவில் வைக்க வேண்டும்.
அதன் அருகில் ஐந்து முக விளக்கில் பஞ்ச எண்ணை ஊற்றி, பஞ்ச முகத் தீபம் ஏற்ற வேண்டும். அருகில் நெல் பரப்பி, அதன் மேல் ஒரு தட்டில் அரிசி பரப்பி வைக்க வேண்டும். பூச்சூட்டிய குடம், மாவிலை, தேங்காய் போன்றவற்றை சேர்த்து இலக்குமி படத்தின் முன்னால் வைக்க வேண்டும்.
சந்தனம், குங்குமம் பொட்டு குடத்திற்கு வைத்து, தேங்காய், பழம் வெற்றிலை பாக்கு, இனிப்பு பொருள் நைவேத்தியத்தோடு லட்சுமி கவசம், லட்சுமி வருகை பதிகம் பாடி வழிபாடு செய்தால், பணத் தேவைகள் பூர்த்தி அன்றாட வாழ்க்கையில் அனுபவிக்கும் துன்பமெல்லாம் இன்றோடு விலக வேண்டும் என்று சொன்னால் இலக்குமியின் அருள் உங்களுக்கு கிடைக்கும்.

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்