மூகாம்பிகை
கர்நாடக மாநிலத்தில் குண்டப்பூர் தாலுக்காவில் அமைந்துள்ள இந்த சிறு நகரம், நாடு முழுவதிலுமுள்ள பக்தி யாத்ரீகர்களால் விரும்பப்படும் நகரமாகும். அழகிய மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர் பின்னணியில் வீற்றிருக்க, வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும் சௌபர்ணிகா ஆற்றின் கரையில் சாந்தம் தவழும் சூழலில் இந்த புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலம் அமைந்துள்ளது. பரசுராமரால் உருவாக்கப்பட்டதாக கருதப்படும் புகழ்பெற்ற மூகாம்பிகை தேவியின் கோயில் இந்த ஸ்தலத்தில் பிரசித்தமாக அறியப்படுகிறது.
வரலாற்றிலிருந்து சிறு சிறு தகவல்கள்
சக்தி வழிபாட்டிற்கு பிரபலமாக அறியப்படும் ஆன்மீக திருத்தலங்களில் முக்கியமாக இந்த மூகாம்பிகை தேவி ஆலயமும் ஒன்றாகும். பார்வதி தேவி மூகாசுரன் எனும் அசுரனை வதம் செய்த ஸ்தலம் என்பதால் மூகாம்பிகை என்ற பெயரில் வணங்கப்படுகிறார்.
ஆதியில் இந்த ஆலயத்தின் மூலசன்னதியில் ஒரு ஜோதிலிங்கம் மட்டுமே இருந்துள்ளது. இந்த ஜோதிலிங்கத்தில் குறுக்காக ஓடும் ஸ்வர்ணரேகை எனப்படும் தங்கக்கோடு இந்த லிங்கத்தை சமமற்ற இரண்டு பிரிவாக பிரித்துள்ளது.
அதன் சிறிய பாகம் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளைக்குறிப்பிடுவதாகவும் பெரிய பாகமானது பெண் சக்திகளான சரஸ்வதி, பார்வதி மற்றும் லட்சுமி என்ற தேவியரை குறிப்பிடுவதாகவும் ஐதீகம்.
சிவலிங்கத்துக்கு பின்னால் உலோகத்தால் ஆன அழகிய மூகாம்பிகை சிலை ஷீ ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அவரது கனவில் தேவி தோன்றியபோது அவர் தேவியை தன்னை கேரளாவுக்கு பின் தொடருமாறும், தேவி எங்கு உறையவேண்டும் என்று அவர் விரும்புகின்றாரோ அங்கு தேவி எழுந்தருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டதாகவும், இதற்கு சம்மதித்த தேவி ஒரு நிபந்தனையும் விதித்ததாக சொல்லப்படுகிறது. அதாவது, தான் தொடர்ந்து வருவதை அவர் திரும்பிப்பார்க்கக்கூடாது என்று தேவி ஆதி சங்கரரை கேட்டுக்கொண்டார்.
இப்படி கேரளாவை நோக்கி நடந்த ஆதிசங்கரர் இந்த கோயில் இருக்கும் இடத்துக்கு வந்தபோது அவருக்கு பின்னால் கேட்டுக்கொண்டிருந்த தேவியின் கொலுசு ஓசை நின்றுவிட்டதை உணர்ந்து சங்கரர் திரும்பி பார்த்துள்ளார். உடனே தேவி தன் நிபந்தனையை கூறி தன்னால் அந்த இடத்துக்கு மேல் வர முடியாது என்று கூறி விட்டதாக கூறப்படுகிறது. ஆகவே இந்த இடத்திலேயே ஆதி சங்கரர் தேவியின் திருவுருவச்சிலையை ஜோதிலிங்கத்துக்கு பின்னால் பிரதிஷ்டை செய்துள்ளார்.
மேலும் சில சிறப்பம்சங்கள்
இந்த ஸ்தலத்துக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் அமைந்துள்ள அரிஷ்ணா குந்தி நீர்வீழ்ச்சி மற்றொரு முக்கியமான சுற்றுலா ஸ்தலமாகும். இந்த நீர்வீழ்ச்சியில் சூரிய ஒளி படும்போது நீர்வீழ்ச்சி மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் ஜொலிப்பது ஒரு அதிசயமாகும். இதனாலேயே இது அரிஷ்ணா (மஞ்சள்) எனும் பெயரைப்பெற்றுள்ளது.
மேலும் இங்குள்ள கொடசத்ரி மலைத்தொடர்கள் மற்றுமொரு சுற்றுலா அம்சமாகும். இங்கு ஆதிசங்கரர் முதன் முதலாக தேவியை தரிசித்ததாக சொல்லப்படுகிறது.
இங்கு மலை ஏற்றப்பிரியர்கள் அதிக அளவில் விஜயம் செய்கின்றனர். இந்த கோயில் நகருக்கு பயணம் மேற்கொள்ள சரியான காலம் நவராத்திரி மற்றும் தசரா விழாக்காலங்களாகும். முத்தேவியர்களுக்காக ஒன்பது ராத்திரிகளுக்கு இந்த திருவிழா பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படுகிறது.
இது தவிர கொல்லூர் பிரதேசம் ஒரு காட்டுயுரி பாதுகாப்பு வனப்பகுதியாகவும் அறியப்படுகிறது.
Comments
Post a Comment