ஆடிப்பெருக்கு


ஆடிப்பெருக்கு------பயிர்கள் நன்றாக வளர்வதற்காக நீர்வளம் அருளும் காவிரித்தாயை முதன்மையாக கொண்ட ஆறுகள்
அனைத்தையும் போற்றி வழிபடுவது `ஆடிப்பெருக்கு' என்று கூறப்படுகிறது.
ஆறுகள் ஓடுகின்ற எல்லா ஊர்களிலும், நகரங்களிலும் ஆடிப்பெருக்கு விழா நடை பெறுகிறது. ஆனால், காவிரி
ஆடிப்பெருக்கு சற்றுக் கூடுதலான சிறப்பு டையது.
திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு பெண்களால் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
ஆடிப்பெருக்கின் போது பராசக்தியை வழிபடுவதைப் போலவே காவிரித்தாயை வழிபடுகின்றனர்.
தமிழர்கள் 18 என்ற எண்ணை மிகவும் புனிதமானதாகப் போற்றுகின்றனர்.
ஆன்மீகத்திலும் 18 என்ற எண் புனிதமானது. காவிரி படித் துறைகளில் 18 படிகளை அமைத்திருக்கின்றனர்.
ஆடி பதினெட்டாம் நாள், வெள்ளப்பெருக்கு அந்தப் பதினெட்டாம் படியைத் தழுவிச் செல்கிறபோது `ஆடி
பதினெட்டு' என்ற திருவிழாவைக் கொண்டாடுகின்றனர்.
ஆடி பதினெட்டாம் நாள் திருவிழா பெண்களுக்கே சிறப்பாக உரியது. அன்று பெண்கள் காலைப் பொழுதில்
கரைகளில் வந்து கூடிக் காவிரித்தாயை வழிபடுவார்கள். இதற்கென்றே படித்துறைகள் பல உள்ளன.
அம்மன் வழிபாட்டுக்கு உகந்த காதோலை, கருகமணி முதலியவற்றை வைத்து வழிபட்டு அவற்றை ஆற்றோடு
செலுத்துவார்கள்.
மாலை நேரம் தயிரன்னம்,புளிசாதம், சர்க்கரை பொங்கல் வகைகளை சமைத்து காவிரித் தாய்க்குப்
படைப்பார்கள். பின்னர் உறவினர்களுடனும், நண்பர்களுடனும் சாப்பிட்டு மகிழ்ச்சியாக பொழுதை
போக்குவார்கள்.
சிறுவர்கள் சப்பரங்களையும், தேர்களையும் உருவாக்கி அவற்றில் அம்மன் படத்தை வைத்து வழிபடுவார்கள்.
கன்னிப்பெண்கள், தமக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று நேர்ந்துகொண்டு காவிரித்தாயை
வழிபடுவார்கள்.
இதற்காக அம்மன் முன்படைத்த மஞ்சள் கயிறுகளை ஒருவரது கழுத்தில் மற்றொருவர் சூட்டுவது வழக்கம்.
மஞ்சள் கயிற்றைச் சகோதரர் கையில் கட்டுவார்கள். இது காப்புக் கயிறு.
பிரார்த்தனை பலித்து, திருமணம் முடிந்த பின் நல்ல திருமண வாழ்வுக்கு புதுமணத் தம்பதிகள் காவிரித்தாயை
நன்றியுடன் போற்றுவதுண்டு.
ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழ மொழிக்கேற்ப பழைய காலத்தில் மழை இருந்தது. சித்திரை, வைகாசி,
ஆணி இந்த மூன்று மாதங்களில் இருக்கக் கூடிய காய்ச்சல் முடிந்து ஆடி மாதத்தில் நன்றாக மழை பொழிந்து
எல்லா விளை நிலங்களும் விதைக்கப்படக் கூடிய அளவிற்கு புது வெள்ளம்- வரும்.
இந்த புது வெள்ளத்துடன் வரக் கூடியதுதான் ஆடிப் பெருக்கு. சங்க நூல்களில் பெண்கள் ஆற்றிற்கு விழா
எடுத்தார்கள். ஆற்றை ஒரு கன்னிப் பெண்ணாக நினைத்து வணங்கினார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இதில் சப்த கன்னிகளுக்கான வழிபாடு என்பது அன்றைக்கு விசேடமானது. பெருக் கெடுத்து ஓடி வரும் அந்த
புது வெள்ளம், புது நீர் வரும் போது தாலியை மாற்றிக் கொள்வார்கள்.
சிலர் தாலி மஞ்சள் கயிறுகளை மாற்றிப்புது மஞ்சள் கயிறுகளை அணிவார்கள். பழைய மஞ்சள் கயிறுகளை
அருகிலுள்ள மரங்களில் கட்டுவார்கள்.
கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றைச் சுற்றிக் கொள்வார்கள். நல்ல வரன் வரவேண்டும் என்று வேண்டிக்
கொள்வார்கள். அவர்களுக்கு இந்த வழிபாட்டால் கண் நிறைந்த கணவர் கிடைப்பார் என்பது ஐதீகமாகும்.
சுமங்கலிகள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள்.
ஆடி 18-ம் பெருக்கிற்கு தனி சக்தி உண்டு. ஆடி மாதம் என்பது கடக மாதம். இந்த கடக ராசியில் புனர்பூசம்,
ஆயில்யம் என்ற 3 நட் சத்திரங்கள் இருக்கிறது. இந்த ஆடி 18 அன்று பூசம் நட்சத்திரத்தை விட்டு விட்டு
ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சூரியன் மாறுவார். அந்த சனி நட்சத்திரத்தை விட்டு விட்டு புதன் நட் சத்திரத்திற்கு
சூரியன் வரும் போது அது ஒருவித சக்தியைக் கொடுக்கும்.
இதனால்தான் இந்த நாட்களில் இது போன்றெல்லாம் செய்ய வேண்டிய பழக்கத்தை நம் மூதாதையர்கள்
ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்