தொண்டைமான்

தொண்டைமான்
அறந்தாங்கி தொண்டைமான் மரபு புதுக்கோட்டை மரபுக்கு 300 ஆண்டுகள் முந்தையது. அறந்தாங்கி தொண்டைமான் பெயர் பொறித்த 50 கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அறந்தாங்கியில் அரசு செலுத்திய தொண்டைமான்களுக்கும், 17ம் நூற்றாண்டில் புதுக்கோட்டையில் இருந்த தொண்டைமான்களுக்கும் தொடர்பு புலப்படவில்லை. அறந்தாங்கி தொண்டைமான்களைப்பற்றி கி.பி.1426ல் தான் முதலில் தெரிகிறது. பொன்னம்பல நாத தொண்டைமான் (கி.பி.1514—1567) மிகவும் வலியும். செல்வாக்கும் முள்ளவனென்று தெரிகிறது. இவன் இலங்கையை ஏழுநாளில் வென்றதாகச் சொல்லப்படுகிறது. பாளையக்காரர் என்போர் வேறு வேறு தகுதியுடைய படைத்தலைவராவர். இவர்களிற் சிலர் பழைய அரசர்களின் வழியினர் அல்லது அமைச்சர் முதலானோரின் வழியினர் என்று சொல்கின்றனர். இவர்களின் முன்னோர் அரசர்களிடமிருந்து, அவர்களது மதிப்பைக் காப்பாற்றியதற்கோ, தாம் புரிந்த நன்றிக்கு மாறாகவோ, பட்டாளத்தை வைத்துக்கொள்ளவோ பெரு நிலங்களை இனாமாகப் பெற்றிருக்கின்றனர். .
புதுக்கோட்டை தொண்டைமான்
அம்புகோவிலில் தங்கி ஆண்டுகொண்டிருந்த தொண்டைமான் வழியினர் 17-ஆம் நூற்றாண்டிருந்த புதுக்கோட்டை அரசராயினர். இவர்கள் ஆட்சிபுரியலான நாடுகள் இவையென்பதனை. ‘ஆலங் குடிநா டமரா பதிநாடு கோலங் கடுவன் குடிநாடு - மேலான செங்காட்டு நாடு திருப்பேரை யூர்நாடு மங்காத வல்ல வளநாடு - கொங்காரும் மெய்யமலை நாடு மேவுசந்த்ர ரேகை நா டையன் கொடுங்குன்ன றணீநாடு - செய்ய சீருக் கோளக் குடிகாடு கோனா டெனப் புரந்தே ஆளப் பிறந்த வரசர்கோன். என்பது விளக்கும்.
ஆவடை ரகுநாத தொண்டைமான்
ஸ்ரீரங்கராயலு என்ற விஜயநகர அரசன் இப்பக்கமாக இராமேச்சுரத்திற்கு யாத்திரை சென்ற பொழுது அவ்வரசனுடைய யானை மதங்கொண்டு பல சேதங்களை யுண்டுபண்ண, அதனை யறிந்த ஆவடைரகுநாத தொண்டைமான் அந்த யானையைப் பிடித்து அடக்கி ராயலுவிடம் கொண்டு வந்தனன் என்றும், அப்பொழுது தொண்டைமானுக்கு 'ராயராகுத்த ராயவஜ்ரீடு ராயமன்னீடு ராய' என்னம் பட்டமும், பல நிலங்களும், யானையும் சிங்கமுகப் பல்லக்கும், பிறவும் வரிசையாக அளிக்கப்பட்டன. தொண்டைமானுடைய புதல்வர் இருவரில் மூத்தவர் இரகுநாதராய தொண்டைமான். இளையவர் நமன தொண்டைமான்
இரகுநாத தொண்டைமான் - 1686 - 1730
புதுக்கோட்டை மன்னர்களில் முதல்வர் இவரே. இவர் சிங்கமங்கலம், கலசமங்கலம் என்னும் நகரங்கள் அழிந்த பின்னர் அவைகள் இருந்த விடத்தில் ஓர் புதிய நகரையுண்டாக்கி, அதற்குப் புதுக்கோட்டை யென்று பெயர் கொடுத்தார். இவரது தங்கை காதலி நாச்சியார், மாவீரன் ரெகுநாத சேதுபதி காத்த தேவரின் மனைவி ஆவார்.கலசமங்கலம், திருமயம், பகுதிகளை சேதுபதி இவருக்கு வழங்கியதாகவும் சொல்லப்படுகின்றது
விஜயரகுநாதராய தொண்டைமான் 1730-1769
இவருக்குச் சிவஞானபுர துரைத் தொண்டைமான் என்றும் பெயருண்டு. இவர் பட்டத்துக்கு வந்தவுடன் தமது சகோதரர்களாகிய இராஜகோபால தொண்டைமான், திருமலைத்தொண்டைமான் என்னும் இருவர்க்கும் இரண்டுபாளையப்பட்டுகளை அளித்து, தமக்கு உதவியாக வைத்தக் கொண்டனர்.
இராயரகுநாத தொண்டைமான்(1769 – 1789)
ராஜா விஜயரகுநாத தொண்டைமான் பகதூர்(1789 – 1807)
இராஜா விஜய ரகுநாதராய தொண்டைமான் பகதூர் 6 (1807 – 1825)
ஹிஸ் எக்சலென்சி இராஜா ரகுநாத தொண்டைமான் பகதூர் 7 (1825 – 1839)
இவர் மிகச் சிறந்த நீதிமன்னர். பற்பல அறங்களை நடத்தினவர். 1830-ல் ஆங்கில அரசாங்கத்தாரால் ‘ஹிஸ் எக்சலென்சி’ என்னும் பட்டம் அளிக்கப் பெற்றனர். இவர் 1839 ஜுலை 13-ல் இம் மண்ணுலக வாழ்வை வெறுத்தேகினர்.
ஹிஸ் ஹைனெஸ் ஸ்ரீ பிரகதம்பாதாஸ் இராஜா ராமச்சந்திர தொண்டைமான் பகதூர் 8 (1839 – 1886)
இவர் 1876-ல் தம் மூத்த புதல்வியின் மூன்றுவது குமாரரைத் தத்து எடுத்துக்கோண்டார். 1884-ல் இந்திய சக்கரவர்த்தினியாகிய விக்டோரியா மகாராணியார் இம்மன்னர்க்கும், இவருடைய சந்ததியார்க்கும் பதினொரு மரியாதை வேடுகள் போடும் நிரந்தர உரிமையை அளித்தார். இவ்வரசர் காலத்திலேயே தந்தி, தபால் ஆபீசுகள் ஏற்பட்டன. 2-வது வகுப்புக் காலேஜும் ஏற்படுத்தப்பெற்றது. இவர் 1886-ல் தமது ஐம்பத்தேழாவது வயதில் விண்ணுலகடைந்தார்
ஸ்ரீ பிரகதாம்பதாஸ் ராஜகோபாலத் தொண்டைமான்.
புதுக்கோட்டை சமஸ்த்தானத்தின் கடைசி மன்னராகவும் புதுக்கோட்டை தொண்டைமான் பரம்பரையின் 9 ஆவது மன்னராகவும் விளங்கியவர் ஸ்ரீ பிரகதாம்பதாஸ் ராஜகோபாலத் தொண்டைமான். இம்மன்னரின் காலத்தில் தான் திருச்சிராப்பள்ளியிலிருந்து புதுக்கோட்டை வழியாக மானாமதுரை செல்லும் புதிய புகை வண்டித்தடம் 1929 இல் தொடங்கப்பட்டது. 1928 இல் நகரில் முழுமையாக மின்சார வசதியும் செய்யப்பட்டது. மன்னரின் உபயோகத்திற்காக புதிய அரண்மனை கட்டப்பட்டு. 1929 இல் முடிவுற்றது. மன்னர் 1930 ஆம் ஆண்டு இங்கு குடியேறினார். இந்திய வைஸ்ராய் மார்க்கியூஸ் வெல்லிங்கடனும், அவரது துணைவியாரும் இவரது ஆட்சியின் போது 1933ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் நாள் புதுக்கோட்டைக்கு வருகை தந்தனர். 17.01.1944 இல் ராஜகோபாலத் தொண்டைமான் தனது 22-வயதில் சமஸ்தானத்தின் முழு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 1947 இல் டெல்லி சென்ற மன்னர் மகாத்மா காந்தியை சந்தித்து உரையாடினார். 1948 இல் மகாத்மா சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அவரது ஈமக்கிரியை நாளில் புதுக்கோட்டை சமஸ்தான எல்லைக்குட்பட்ட கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் சரிசமமாக அனுமதிக்கப்பட வேண்டும் என்று மன்னர் ஆணையிட்டார். 1948 மார்ச் மாதத்தில் இந்தியாவின் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின் அழைப்பினை ஏற்று 1948 மார்சு 3ஆம் நாள் புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைத்தார். அப்போது புதுக்கோட்டை கஜானாவில் இருந்த பல லட்சக்கணக்கான ரூபாய் ரொக்கங்களையும், தங்கம் போன்ற ஆபரணங்களையும் அப்படியே மத்திய அரசிடம் ஒப்படைத்தார். மேலும் அவருக்குச் சொந்தமான விலைவமதிப்பற்ற பல கட்டிடங்களையும் . மன்னர் நிர்வாகத்தில் இருந்த அரசர் கல்லூரியையும் அரசிடம் ஒப்படைத்தார். 1972இல் புதுக்கோட்டை தனி மாவட்டமாக உறுவானபோது தமிழ் நாடு அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க புதுக்கோட்டை அரண்மனையையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வழங்கினார். ராஜகோபாலத் தொண்டைமான் திருச்சிராப்பள்ளியில் உள்ள புதுக்கோட்டை அரண்மனை வளாகத்திலேயே மிக எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்தார் . இவர்1997இல் மறைந்தார். ராஜகோபாலத் தொண்டைமானின் மருமகளாகிய திருமதி சாருபாலா தொண்டைமான், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநகர மேயராக வெற்றி பெற்று உள்ளார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டமும், எம்.பில் பட்டமும் பெற்ற இவரும் மக்கள் தொண்டில் பெரிதும் ஆர்வம் கொண்டு செயல்பட்டு வருகிறார்

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்