Skip to main content

பெண் குல திலகம் செம்பியன் மாதேவி


பெண் குல திலகம் செம்பியன் மாதேவி

10ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டின் அரசகுலத்திலே தோன்றியவர் கண்டராதித்தர். அவருடைய தந்தை, பராந்தக சோழர். கண்டராதித்தர் மிகச் சிறந்த சிவபக்தராக விளக்கினார். நற்குணங்கள் மிக்க மழபாடி நாட்டின் இளவரசியை மணந்தார். கண்டராதித்தரின் மனைவியாக பட்டத்து மகிஷியாக இருந்தவளே செம்பியன் மாதேவி.

கண்டராதித்தர், நடராஜப் பெருமான் மீது பத்து பதிகங்கள் பாடினார். அவை ஒன்பதாம் திருமுறையில் உள்ளன. சிவபக்தியில் தோய்ந்த இத்தம்பதிக்குக் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சிறிதுகாலமே ஆனபோது கண்டராதித்தர் சிவபதம் எய்தினார். செம்பியன் மாதேவி, குழந்தையை சிவபக்தி மிக்கவனாக வளர்த்து வந்தார்.

கணவர் கண்டராதித்தருக்குப் பிறகு சோழ அரியணையில் அமர அவருடைய பிள்ளைக்கு உரிமை இருந்தாலும் மிகச் சிறிய பாலகனானதால், தாய் அனைவருக்கும் வழிகாட்டினாள்.

சோழ நாட்டின் அரியணையை, கண்டராதித்தரின் சகோதரர் அரிஞ்சய சோழர் அலங்கரிக்க வேண்டும் என்று செம்பியன் மாதேவி வேண்டிக் கொண்டாள். கண்டராதித்தரின் புதல்வன் உத்தமசோழன் இளம் பாலகனாக இருப்பதாலும், நாடு அரசனின்றி இயங்காது என்பதாலும் ராஜ மாதாவான செம்பியன் மாதேவியின் வேண்டுகோளை அரிஞ்சயர் ஏற்றார். நாட்டின் அரசரானார். இவ்வாறு செம்பியன் மாதேவியின் வழிகாட்டுதலால் நாட்டின் அரசுரிமைப் பிரச்னை சுமுகமாகத் தீர்ந்தது.

சிவபக்தியில் தோய்ந்த கணவரிடம் அன்பும் மதிப்பும் கொண்டிருந்த செம்பியன் மாதேவி, சோழ நாட்டுச் சிவாலயங்களைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டாள். தியாகமும் பக்தியும் அன்பும் மிகுந்த மாதேவியை அரச குடும்பத்தவரும் அந்நாட்டு மக்களும் மிகுந்த மதிப்புடன் போற்றினார்கள். செம்பியன் மாதேவி, தம் கணவர் தமக்கிட்ட சைவப் பணிகளைச் செய்ய விழைந்தார். அவர் விழைந்தவற்றுக்கு ஆகும் செலவை, அரிஞ்சய சோழர் அள்ளி வழங்கினார்.

ஓர் இயக்கமாகவே, சைவப்பணியைச் செய்து வந்த மாதேவி சிவாலயங்களுக்குச் சென்று பார்வையிட்டார். 7ஆம், 8ஆம் நூற்றாண்டுகளில் சோழவள நாட்டில் பல கோவில்கள் கட்டப்பட்டன. ஆனால் அவையெல்லாம் மண்ணாலும் செங்கல்களாலும் கட்டப்பட்டிருந்தன. அதனால் அவை காலப்போக்கினாலும் பருவ மாற்றங்களாலும் சிதிலமடைந்து கிடந்தன.

இவ்வாறு நூற்றுக்கணக்கான கோவில்கள் இருப்பதைப் பார்த்து செம்பியன் மாதேவி கண்ணீர் வடித்தாள். இறைவனின் ஆலயங்களைப் புதுப்பிக்கும் பணி இனி தம் பணி என்று உறுதி செய்து கொண்டார். அதுவே சிவபக்தராம் தம் கணவரின் உள்ளத்துக்கும் உகப்பான பணி என்று எண்ணி மகிழ்ந்தார்.

முதன் முதலில் செம்பியன் மாதேவி சீரமைத்த திருக்கோவில் நல்லம் ஆகும். சிதிலமடைந்த அக்கோவிலுக்கு கருங்கல் திருப்பணி செய்ய விழைந்தார். மலைகளோ குன்றுகளோ இல்லாதது சோழநாடு. ஆகவே கருங்கற்கள் பல நூறு மைல்கள் பயணம் செய்து ஆயிரக்கணக்கான எடை கொண்ட கற்கள் வரவழைக்கப்பட்டன. கல் தச்சர்கள் இடைவிடாமல் பணிபுரிந்து கோவிலை கருங்கல் திருப்பணியாகச் செய்தார்கள். ராஜமாதா செம்பியன் மாதேவி நாள்தோறும் இறைப்பணி செவ்வனே நடைபெறுகிறதா என்று கவனித்துக் கொண்டார்கள்.

நல்லம் கோவில் பணி முடியும் தறுவாயில், கருவறைக்கு வெளிச் சுவரில், கண்டராதித்தர் சிவபூஜை செய்வது போன்று செதுக்கச் செய்தார். அதைக்கண்டு,மாதேவியின் கண்கள், கணவரை நேரிலே காண்பது போன்ற ஆனந்தத்தை அடைந்தன. இதுபோன்றே மேலும் பத்து கோவில்களிலும் கணவரின் சிவபூஜைக் காட்சியைச் சித்திரிக்கச் செய்தார். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் அக்காட்சியை நாம் கண்டு களிக்கலாம்.

சிவத்தொண்டில் ஈடுபட்டு கோவில் பணிகளைச் செய்தது போன்றே, மாதேவி, சோழநாட்டு இளவரசர்கள், இளவரசிகளையும் பக்தியும் நற்குணங்களும் நிரம்பியவர்களாக வளர்த்து வந்தார்.

அரிஞ்சய சோழரின் மைந்தர்களும் மகள் குந்தவியும் மாதேவியிடம் வளர்ந்து நற்குண நற்செயல்களை அறிந்தார்கள். எல்லாருடைய நெஞ்சங்களிலும் இளமை முதலே சிவபக்தியை வளர்த்தார். ஆகையால் அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனபிறகும் சிவபக்தியுடனே வாழ்ந்து சிவப்பணிகளில் ஈடுபட்டார்கள்.

செம்பியன் மாதேவியிடம் இளம் பருவம் முதலே வளர்ந்த ராஜராஜன், அரியணை ஏறியதும் தஞ்சைத் தரணியில் வானுயர்ந்த கோபுரத்துடன் பெரிய கோவிலைக் கட்டினான். அதுமட்டுமல்ல, நியாயம், தர்மம் ஆகியவற்றை நன்கு உள்ளத்திலே பதிய வைத்தவர் பெரியன்னை செம்பியன் மாதேவியல்லவா?

அரிஞ்சயரின் ஆட்சிக் காலத்திற்குப் பிறகு, ராஜராஜன் அரியணையை ஏற்க முன்வரவில்லை. கண்டராதித்தரின் புதல்வரான உத்தம சோழர்தான் அரியணையில் அமரத் தகுந்தவர் என்று வாதாடினார். இத்தகைய தியாக புத்தியும் நேர்மை குணமும் அவருக்கு ஊட்டியவர் செம்பியன் மாதேவி தானே! தேவியின் பெயரால் கோவில்களில் பல மான்யங்கள் அளிக்கப்பட்டன. பல ஏரிகள் குளங்கள் வெட்டப்பட்டன.

செம்பியன் மாதேவி, சிவபக்தியில் தோய்ந்தவராக இருந்து, தாம் புகுந்த சோழநாட்டில் சைவம் தழைக்கச் செய்தார். அரச பரம்பரையினர் சைவப் பற்று மிகுந்தவராகச் செய்து நாட்டிற்கும் குடும்பத்தாருக்கும் நல்லன செய்து அனைவராலும் போற்றப்பட்ட மூதாட்டியாக விளங்கி, 85ஆவது அகவையில் இறைவனடி சேர்ந்தார்.

திருநல்லம் என்னும் கோனேரிராஜபுரம்

இத்திருக்கோவில் சிவஞான செல்வரான கண்டராதித்த சோழனின் துனைவியும் சிவசேகரன் இராஜராஜ சோழனின் பாட்டி செம்பியன் மாதேவி அவர்களால் கற்றளியாக திருப்பணிச் செய்யப்பட்டது. இத்தலத்தில் அம்மை மங்கள நாயகி , தேக சுந்தரி என்னும் அங்கவளை நாயகி சன்னதி கிழக்கு நோக்கியும், ஐயன் சன்னதி மேற்கு நோக்கியும் ஒன்றையொன்று எதிர்நோக்கியவாறு கல்யாணக் கோலத்தில் அமைந்துள்ளன. ஐயனும் அம்மையும் மாலை மாற்றும் விதமாக அமைந்துள்ளதாக ஐதீகம். எனவே இத்தலத்தில் வழிபடுபவர்களுக்கு திருமணப்பேற்றை அருளுகின்றார் நல்லம் நகரார்.

இங்குள்ள கல்வெட்டுக்கள் இராசராசன், இராசேந்திரன், முதலாம் இராசாதிராசன், இரண்டாம் இராசேந்திரன், முதலாம் குலோத்துங்கன் காலத்தியவை. கல்வெட்டில் இறைவன் 'திருநல்லம் உடையார் ' என்று குறிக்கப்படுகிறார்.வேங்கிபுரம் முதலிப்பிள்ளை என்பவன் நன்கொடையால் கோயில் கட்டப்பட்டதாகவும், 'நக்கன் நல்லத் தடிகள்' என்பவனால் சண்டேசுவரர் உற்சவத் திருமேனி செய்து தரப்பட்டது என்றும், குந்தவை பல நன்கொடைகளைக் கோயிலுக்குத் தந்துள்ளாள் என்றும் பல செய்திகள் கல்வெட்டு வாயிலாக தெரிய வருகின்றன.

Comments

Popular posts from this blog

வாணர் குல அரசர்கள்

வாணர் குல அரசர்கள். தென்னிந்திய வரலாற்றில் பல்லவர், சோழர், சேர, பாண்டியர் வரிசையில் போர்க்குடியாகவும்,புகழ் பெற்ற மன்னர்களாகவும் ஆட்சி செய்த குடிகளில் மிகவும் முக்கியமான குடிகள் வாணர் எனவும் அழைக்கப்படும் மகாபலியின் வம்ச குடியினரே ஆவார்கள். வாணர் என்றால் மலையர் என்ற மலையாளும் மன்னர் குடியாக கொள்ளப்படுகின்றது.. சேரனை சங்க இலக்கியத்தில் மலையன் என்றும் வானவன்(மலையர்) என்றும்.வானவரம்பன்(சேரன்) மலைகளை எல்லையாக கொண்டவன் என்று கூறுகின்றது.ஆக தென்னாடு முழுவதும் விந்திய மலை முதல் தென் மலையான பொதிகை,மேற்கு தொடர்ச்சி மலை பகுதி வரை மகாபலி வம்சத்தவர்களான வாணர்(மலையர்) என்ற மன்னர்களே ஆண்டுள்ளனர். இதற்கு ஆதாரமாக. "தென்புல மருங்கின் விண்டு நிறைய வாணன் வைத்த விழுநிதி பெறினும் பழிநமக் கெழு வெண்ணாய் விழுநிதி" (அடி 202 - 204 மதுரைகாஞ்சி) - எனக் குறிப்பிடுகிறது. இவ்வரிகளில் குறிக்கும் தென்புலம் என்பது இந்தியத் திருநாட்டிற்கு தென்புறம் தடுப்புச்சுவர் போல் உள்ள விந்திய மலையாகும். இது தக்காணம், தஷ¤ணபாதம், தக்கண பாதம் எனவும் வட மொழியில் அழைக்கப்படுகின்றன.இதில் இருந்து விந்திய மலையிலிருந்து கு

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்; நிலவு லாவிய நீர்மலி வேணியன், அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்; மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.------சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

பறவை நாச்சியார்

அவள் பெயர் பரவை, சுந்தரரின் மனைவி பெயரையே கொண்டவள். திருவாரூர் தியாக விடங்கர் (தியாகராஜர்) கோயிலில் தொண்டு புரிந்து வந்தவள். இவளின் பேரழகும், சைவத் தொண்டுகளும் மாமன்னன் கங்கை கொண்ட ராஜேந்திர சோழனை மிகவும் கவர்ந்தன. எத்தனை போரில் ஈடுபட்டு, எத்தனை உயிர்களை பரித்தவனாக இருந்தாலும் அவனும் ஆண் தானே? உடனே அவளை காதலிக்கத் துவங்கினான் ராஜேந்திரன். பல நூறு வருடங்களாக செங்கல் கட்டுமானமாகவே இருக்கும் திருவாரூர் கோயிலை கற்றளியாக மாற்ற வேண்டும் என்பது பரவையின் ஆசை, இதை ராஜேந்திரனிடன் கூறுகிறார் பரவை.  அவளை மிகவும் நேசித்த ராஜேந்திர சோழன் அவளின் வேண்டு கோளுக்காகத் தியாகராஜரின் திருக்கோயிலைக் கருங்கல் கொண்டு எடுத்து கற்றளியாகப் புதுப்பிக்கிறான். அவனின் 16-18ம் ஆண்டுகளில் வீதிவிடங்கனின் கோயில் கற்கோயிலாக மாற்றப்பெற்றது. கற்றளி மட்டும் போதாது, இந்த கோயிலை பொற் கோயிலாகவே மாற்ற வேண்டும் என்று பரவை ராஜேந்திரனிடம் கேட்டாள். காதலி பேச்சுக்கு மறு பேச்சு ஏது? உடனே ராஜேந்திரன் கோயிலை உள்ளும் புறமும் தங்கத்தகடுகள் போர்த்தி அழகு செய்தான். முகமண்டபம், தூண்கள் ஆகியவற்றை செம்புத் தகடுகளால் அலங்கரித்தான். 18ம் ஆ