மீனாட்சியம்மன் கோயில் திருவிழாக்கள்





மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா, முடிசூட்டுவிழா, திக்விஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம், புட்டுத் திருவிழா ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்தக் கோயிலில் தமிழ் மாதம் ஒவ்வொன்றிலும் சிறப்பு விழாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
சித்திரை
 சித்திரைத் திருவிழா

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சித்ரா பௌர்ணமி விழா கொண்டாடப்பட்டாலும், மதுரையில் தான் சித்ரா பௌர்ணமி விழா சிறப்பாக கருதப்படுகிறது. ஒருமுறை விருத்திராசூரன், விஸ்வரூபன் என்ற இருவரை இந்திரன் கொன்றான். அவர்கள் பிறப்பால் அந்தணர்கள் ஆனதால் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. அதிலிருந்து விடுபட தன் குருவை நாடி உபாயம் கேட்டான். குருபகவான் அவனிடம் பூலோகம் சென்று பல்வேறு சிவஸ்தலங்களில் வழிபட்டால் ஓரிடத்தில் உன் கெடுதல் நீங்கும் என்று கூறினார். அதன்படி இந்திரன் காசி முதலிய பல ஸ்தலங்களில் வழிபட்டு தெற்கு நோக்கி வந்தான். ஓரிடத்தில் கடம்ப மரத்தின் கீழ் சென்றவுடன் தன்னைப் பற்றியிருந்த தோஷம் விலகக் கண்டான். இந்திரன் மகிழ்ச்சியடைய அவன் முன் கடம்ப மரத்தடியில் சிவபெருமான் திருஆலவாய் சோமசுந்தரர் அவனுக்கு காட்சி கொடுத்தார். இந்திரன் சிவபெருமானுக்கு கோவில் கட்ட நினைத்து தேவலோகத்தில் இருந்து ஒரு விமானம் வரவழைத்தான். இத்தலத்து இறைவனுக்கு இந்திரன் விமானம் அமைத்ததால் அதற்கு இந்திர விமானம் என்றும், விண்ணில் இருந்து வந்ததால் விண்ணிழி விமானம் என்றும் சொல்லப்படுகிறது. ஆலயம் எடுத்த இந்திரனிடம் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் என்னை இங்கு வந்து வழிபடுக என்று கட்டளையிட்டார். அதன்படி ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் இந்திரன் இங்கு வந்து வழிபடுகிறான் என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது. அதனால் தான் சித்ராபௌர்ணமி மதுரையில் சிறப்பாகக் கருதப்படுகிறது.
வைகாசி

வைகாசி மாதம் கோடை வசந்தத் திருவிழா. திருவாதிரை நட்சத்திரத்திலே இருந்து பத்து நாட்கள் எண்ணெய்க்காப்பு நடக்கிறது.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெற்கு கோபுரம்
ஆனி

ஆனி மாதம் மகம் நட்சத்திரத்திலிருந்து ஊஞ்சல் உற்சவம். தினமும் மாலை ஆறு மணியிலே இருந்து இரவு ஒன்பது மணி வரைக்கும் நூறு கால் மண்டபத்திலே ஒரே ஊஞ்சலில் சுந்தரேசுவரரோடு மீனாட்சி அமர்ந்து ஊஞ்சலாட, கோயிலின் ஓதுவார்கள், மாணிக்கவாசகரின் பொன்னூஞ்சல் பாடல்களைப் பாட ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.
ஆடி

ஆடி மாதத்தில் ஆயில்ய நட்சத்திரம் துவங்கி பத்து நாளைக்கு முளைக்கொட்டு உற்சவம் நடைபெறுகிறது. கொடியேற்றம் மீனாட்சிக்கு மட்டுமே நடைபெறும்.
ஆவணி

ஆவணி மாதம் மூலத் திருநாள், ஆவணி மூலஉற்சவம் என்றே பெயர் பெற்றது. நான்கு ஆவணி வீதிகளிலும் அம்பாளும், சுந்தரேசுவரரும் வீதி உலா வருவார்கள். கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம், வளையல் விற்ற திருவிளையாடல், பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல், நரியைப் பரியாக்கியது, விறகு விற்றல் போன்ற திருவிளையாடல்கள் நடைபெறும். மூல நட்சத்திரத்தன்று சுந்தரேசுவரருக்குப் பட்டாபிசேகம் நடைபெறுகிறது.
புரட்டாசி

புரட்டாசி மாதத்தில் நவராத்திரி கொலு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் மீனாட்சி அலங்கரிக்கப்படுகிறார்.
ஐப்பசி

ஐப்பசி மாதப் பிரதமையிலிருந்து (அமாவாசை நாளிற்கு அடுத்த நாள்) (சஷ்டி) (அமாவாசை நாளிலிருந்து ஆறாவது நாள்) வரையிலும் கோலாட்ட உற்சவம். புது மண்டபத்திலே அம்மன் கொலுவிருந்து, மதுரை இளம்பெண்கள் கூடியிருந்து கோலாட்டமாட, உற்சவம் நடக்கிறது.
கார்த்திகை
அந்தணர்கள் நிரம்பிய பொற்றாமரைக்குளம்
ஆண்டு: 1920

கார்த்திகை மாதம் பத்து நாட்கள் தீப உற்சவம். கார்த்திகை தீபதினத்தில் அம்மன் சந்நதியிலும், சுந்தரேசுவரர் சந்நதியிலும் சொக்கப் பனை கொளுத்தப்படுகிறது.
மார்கழி

மார்கழி, தனுர் மாத வழக்கப் படி காலையில் சீக்கிரமே நடை திறந்து இரவு ஒன்பது மணிக்கு நடுநிசி முடிந்து விடுகின்றது. தினமும் வெள்ளியம்பல நடராசர் சந்நதியில் மாணிக்கவாசகர் முன்பாக கோயிலின் ஆஸ்தான ஓதுவார்கள் திருவெம்பாவைப் பாடல்களைப் பாடிப்போற்றுவார்கள். அதிகாலை ஐந்தரை மணியில் இருந்தே இது நடக்கும். இதில் பத்து நாட்கள் எண்ணெய்க் காப்பு நடக்கும். இந்தப் பத்து நாட்களும் சுவாமியும், அம்பாளும் புறப்பாடு கிடையாது. மாணிக்கவாசகர் புறப்பாடு மட்டுமே நடைபெறும். பதினோராம் நாள் ரிஷபாரூடராய் அம்பாளோடு சுவாமி ஆடி வீதியில் வலம் வருகிறார்.
தை

தை மாதம். தெப்பத் திருநாள் நடக்கும். திருமலை நாயக்கரால் தோண்டப்பட்ட வண்டியூர் தெப்பக் குளத்தில் தெப்பம் கட்டி சுவாமியையும், அம்பாளையும் அதில் எழுந்தருளச் செய்து தெப்போற்சவம் நடைபெறுகிறது.
மாசி

மாசி, பங்குனி இந்த இரண்டு மாசத்துக்கும் சேர்த்து மண்டல உற்சவம் நடக்கிறது. நாற்பத்து எட்டு நாட்கள் நடக்கும் இந்த உற்சவம் கொஞ்சம் பெரியது.
பங்குனி

பங்குனி உத்திரம், சாரதா நவராத்திரி இரண்டும் சேர்ந்து வரும் திருவிழா. பங்குனி மாதக் கார்த்திகை நட்சத்திரத்திலிருந்து உத்திரம் நட்சத்திரம் வரை அம்பாளும், சுவாமியும் வெள்ளியம்பலத்திலே அமர்ந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுப்பார்கள். சுவாதி நட்சத்திரத்தன்று இருவரும் மகனின் திருமணக் கோலம் காண திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறார்கள்.

மேலும், இங்கு தினசரி பூசைகள் செய்யப்படுவதுடன் சிவபெருமானுக்கு உகந்த நாட்களாகக் கருதப்படும் அனைத்து நாட்களிலும் சிறப்புப் பூசைகள் செய்யப்படுகின்றன
சிறப்புகள்

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்