சங்கரன் கோயிலின் உள்ளே
சங்கரன் கோவிலின் உள்ளே சங்கரலிங்கப்பெருமான் சந்நிதியைச் சுற்றி அமைந்துள்ள பிரகாரத்தில் பாம்புப் புற்று அமைந்துள்ளதாக வரலாறு கூறுகிறது. அங்குள்ள சுவாமியின் பெயர் வன்மீக நாதர் என்று அழைக்கப்படுகிறது. ( அருள்மிகு சங்கரநாராயண சுவாமி தல வரலாறு - 2002 ) மேலும் இவ்விடத்தில் சுரங்கப்பாதை உள்ளதாகவும் அதுகுறித்த ஆய்வில் யாரும் இன்றுவரை ஈடுபடவில்லை என்றும் 90 வயதுக்கு மேல் உள்ளோர் கூறுகின்றனர்.
புற்றுமண் கோமதி அம்மன் சுற்றுப் பிரகாரத்தில், அம்மன் அபிஷேகத் தீர்த்தத் தொட்டிக்கு எதிரில் உள்ள கிணறு போன்ற தொட்டியில்தான் சேமிக்கப்பட்டுள்ளது. இறையன்பர்கள் நேர்த்திக்கடனாக வெள்ளி-செவ்வாய்க் கிழமைகளிலோ அல்லது திருவிழாக்காலங்களிலோ, சங்கரன்கோவிலுக்கு தெற்கே அமைந்துள்ள தெற்குப்புதூர் என்னுமிடத்திலிருந்து புதுமண் - புற்றுமண் என்று பனைஓலையிலான பெட்டிகளில் சுமந்து கொண்டுவந்து மேற்படித் தொட்டியில் கொட்டிச் சேமிப்பர். புற்றுமண் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். இதுதான் உண்மையான வரலாறு. புற்றுமண் சர்வரோக நிவாரணி என்பது ஆத்திகர்களின் நம்பிக்கை.
எச்.ஆர்.பேட்.ஐ.சி.எஸ். திருநெல்வேலி கெசட்டியரில் எழுதியுள்ளது ( தல வரலாறு பக்கம் 20 )
திருநெல்வேலி மாவ்ட்டத்தில் அமைந்துள்ள சங்கரன்கோயில் என்னும் ஊரானது சங்கரநயினார்கோயில் என்றே பலகாலம் அழைக்கப்பட்டு வந்தது. சங்கரன்கோவிலாக மாற்றப்பட்டத்திற்கான ஆதாரங்களைத் தேடும் முயற்சி துவக்கப்பட்டுள்ளது. ஆதியில் இக்கோயில், ஸ்ரீசங்கரலிங்கசுவாமி உடனுறையும் ஸ்ரீகோமதி அம்பிகை என்ற ஆவுடையம்மன் ஆகிய இரு சந்நிதிகளை மட்டுமே உடைத்தாயிருந்தது. இதனைப்பற்றிய குறிப்பு திருநெல்வேலி கெசட்டியர் ( Tinnevally Gazetter Vol ! என்ற நூலில், எச்.ஆர். பேட் ஐ..சி.எஸ் எழுதி அரசாங்கத்தார் வெளியிட்டது. பக்கம் 413 - 414 -ல் காணப்படுகிறது.
உக்கிரபாண்டியர் காப்பறையனோடு வந்து புற்றையும் பாம்பையும் சிவலிங்கத்தையும் கண்டு கோயில் கட்டினார். ஊரை உருவாக்கினார் இதுதான் சங்கரநயினார் கோவிலின் தொடக்கம். கதை மேலும் போகிறது. இங்கேதான் சிவபெருமான் தமது மனைவியார் கோமதியம்மைக்கும், சிவன்தான் பெரியவன், திருமால்தான் பெரியவன் என்று போரிட்ட சங்கனுக்கும் பதுமனுக்கும் தமது சங்கரநாராயணத் திருக்கோலத்தைக் காட்சி தந்தருளினார். இதுவரை சிவனாரைப் பற்றி மட்டுமே குறித்து வந்த கதை பன்னிரண்டாவது நூற்றாண்டில் பெரியார் இராமானுசாச்சாரியாரால் தொடங்கப்பெற்ற தத்துவக் கொள்கையை விளக்கும் வரலாற்றைத் திடீரெனப் புகுத்துகிறது. இந்தக் கோயிலோடு திருமாலுக்குத் தொடர்பினை உண்டாக்கி அதற்கு ஆதரவு தேடும் பொருட்டுச் சங்கரலிங்கத்தின் பெயராகிய சங்கரநயினார் என்பதற்குப் பதிலாகச் சங்கரநாராயணர் ( சிவனும் திருமாலும் ) என்ற பெயரை முதன்மையாக்கும் இக்கதையின் பகுதி பிற்காலத்தில் நுழைக்கப்பட்டதென்பது சிறிதும் சந்தேகமில்லாதது.
கோயிலின் அமைப்பு அதன்கண் திருமாலுக்கு ( சங்கரநாராயணருக்கு ) ஆரம்பத்தில் கோயில் இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது. கோயில் இரண்டு பெரும் பகுதிகளை உடையது. அவற்றில் பெரியதில் சிவபெருமானின் அடையாளமாகிய சிவலிங்கம் ( சங்கரலிங்கம் ) இருக்கிறது. சின்னதில் கோமதி அம்பிகை இருக்கின்றாள். மூன்றாவதாக இரண்டுக்கும் இடையிலே நாராயணருக்கு ஒரு சிறு கோயில் நுழைக்கப் பெற்றது. ஆனால், இந்தக் கோயில் இந்த மூன்றாவது பகுதியில் புகுத்துதலுக்குப் பொருந்தியதாக இல்லை. எப்படியெனில் வழிப்போக்கனாகிய ஓர் ஏழை அடியேனும் கூடத் தெருவிலிருந்தபடியாகவே கண்டு வழிபாடு செய்வதற்கு ஏதுவாகச் சிவலிங்கம், அம்மை ஆகிய இறைவன், இறைவி சன்னிதிகள் தலைவாயிலிலிருந்து பல தொடர்க் கதவுகளினால் திறந்திருப்பதுபோல, சங்கரநாராயணர் சந்நிதிக்குச் சிறிதும் வசதி இல்லை. அதனால் சங்கரநாராயணர் கோயில் தலைவாசல் இல்லாததாய்ப் பெரிய கோயிலின் உள்ளேயே அடங்கிப் போய்விட்டது. அதாவது தெருவிலிருந்தபடியே இறைவன் அல்லது இறைவியை வழிபடும் வசதி சங்கரநாராயணர் சன்னதியில் இல்லை என்று குறிப்பிடுகின்றார்.
சிவ வழிபாட்டிலிருந்து திருமால் வழிபாட்டிற்கு மாற்றப் பெற்றுள்ளனவாக நாம் கேள்விப்படுகிற கோவில்கள் பல இருக்கின்றன. வட ஆர்க்காட்டில் உள்ள திருப்பதிப் பெரிய கோவிலும், இராமநாதபுரம் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள பெருமாள் கோவிலும் இங்கே குறிப்பிடத்தக்கன. இந்த முயற்சி வீர வைணவர்களாக இருந்த விஜயநகர மன்னர் காலத்தியது. ஆனால், இம்முயற்சிக்குச் சங்கரநயினார் கோயிலில் முன்னாலேயே இரண்டு தெய்வங்களும் இருக்கின்றன என்ற தந்திரமான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக்காலத்தில் தருமகர்த்தாக்கள் இந்தக் கோயிலில் இரண்டு தெய்வங்களும் இருப்பதை மிகைப்படுத்தி வருவதோடு நிலங்களுக்குப் பட்டாவைச் சங்கரநாராயணர் என்ற பெயருக்கே ஆக்கி வருகிறார்கல். என்றாலும், கோவிலின் பூஜை முறைகளில் இப்புதுத் தெய்வம் ( சங்கரநாராயணர் ) மிகச் சிறு பகுதிக்கே உரியதாக இருக்கிறது. சங்கரலிங்கப் பெருமானின் மனைவியாகிய கோமதியம்மையின் அருள் விளக்கமே இக்கோயிலின் மேன்மைக்கெல்லாம் காரணம் என்பதுதான் உண்மை.
இன்றும் சங்கரன்கோவிலில் தீவிர சிவபக்தர்கள் சங்கரநாராயணர் சன்னிக்குள் செல்ல மாட்டார்கள். மேலும் சிலர் உள்லே சென்று இடப்பகுதிப் பிரகாரத்தை மட்டும் சுற்றிவிட்டுத் திரும்பிவிடுவார்கள். இது கண்ணால் கண்டுவரும் உண்மை.
தக்கணை தவமிருந்து முக்தி பெற்றது, வீர்சேனை பிணி தீர்ந்தது, சயந்தன் வினை தீர்ந்தது, கானவன் வீடுபேறடந்தது, கன்மாடன் நற்பேறடைந்தது போன்ற தகவல்களும் தலபுராணத்தில் காணக்கிடக்கின்றன. பத்திரகார முனிவன், இந்திரன், அகத்தியர், பைரவர், சூரியன், அக்கினி ஆகியவர்களும் சங்கரனாரையும் கோமதியம்மையாரையும் வழிபட்டுத் திருவருள் பெற்றுள்ளதாகவும் தல புராணம் கூறும்.
அருகில் உள்ள கரிவலம்வந்தநல்லூரை ஆட்சி செய்த பிரகத்துவச பாண்டியன் சங்க்கரனாரை வழிபட்டு விசய குஞ்சரபாண்டியன் என்ற வாரிசைப் பெற்றதாகவும் வரலாறு உண்டு.
Comments
Post a Comment