பழையாறை

பழையாறை
சோழ சாம்ராஜ்ஜியத்தின் மறைந்த மாநகரம். தமிழக பொற்காலத்தின் தலைமைமையம். இன்றும் நாம் அந்தப் பகுதிகளில் செல்லும் பொழுது ஒரு மாபெறும் வரலாற்றுணர்வுக்குள் செல்லாம். சோழர்கள் பல்லவர்கட்கு அடங்கி சிற்றரசாக இருந்த காலத்தால் வாழ்ந்த இடம் தான் பழையாறை. பிற்காலச் சோழர் வரலாற்றில் இந்நகரம் இரண்டாவது தலை நகரமாயிற்று.
இவ்வூருக்கு தெற்கே முடிகொண்ட சோழன் ஆறும் வடக்கில் திருமலைராயன் ஆறும் ஒடுகின்றன. முடிகொண்ட சோழன் ஆறு அந்தக்காலத்தில் பழையாறை (பழைய ஆறு) வழங்கப்பட்டிருக்கிறது.
பழையாறை என்பது இன்றிருப்பது போல் ஒரு சாதாரண சிற்றூர் அல்ல. சோழர் ஆட்சியில் ஒரு மாபெரும் நகரம். இன்றிருக்கும் பல தனி ஊர்கள் சோழர் காலத்தில் பழையாறையின் பகுதிகளே. சோழர்களின் அரண்மனை இருந்த இடம் இன்று சோழர்மாளிகை என்ற பெயரில் ஒரு தனி ஊராக உள்ளது. சோழப்படைவீரர்கள் பழையாறையின் நாற்புரத்திலும் காவற்படி போல் குடியிருந்தனர். அவை ஒவ்வொன்றும் தனிச்சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்டன.
1. ஆரியப்படைவீடு - வடக்கே சென்று ஆரியரை வெற்றி கொண்ட வீரர்கள்
2. பம்பபைப்படைவீடு - போருக்குச் செல்லும் முன் பம்பை என்ற வாத்தியம் இசைத்து வீரவுணர்வை ஏற்படுத்துவோர்
3. புதுப்படைவீடு - புதிதாக சேர்க்கப்பட்ட படைப்பிரிவு
4. மணப்படைவீடு - இந்நான்கும் இன்று தனித்தனி ஊர்களாக விளங்குகின்றன.
மேலும் இன்றைய கும்பகோணம் சோழர்காலத்தில் சந்தையாக இருந்த சிற்றூரே. வாணிபம் நடைபெறும் ஒரு பகுதியே நெல்லுக்கடைத்தெரு, நாணயம் அச்சடித்த இடம்தான் இன்றை கம்பட்ட விசுவநாதர் ஆலயம் உள்ள இடம். (கம்பட்டம் -நாணயசாலை)
திருப்பழையாறை வடதனி
தளி-கோயில். பழையாற்றின் வடகரையில் அமைந்த திருபழையாறை வடதளி எனவும் பெயர் கொண்டது. முழையூர் கோயில் வட தளி என்றும் பழையாறையைத் தனித்தலமென்றும் இவ்விரண்டையும் இணைத்து திருப்பதிகம் அருளிச் செய்யப்பெற்றுள்ளது என்றும் சிலர் கூறுவர்.
சோமநாதஸ்வாமி திருக்கோயில்------கோயில் அமைப்பு
கிழக்கு நோக்கியமைந்த இக்கோயில் இராஜைராஜ சோழனால் திருப்பணிச் செய்யப்பட்டு அவரது இயற்பெயரான அருண்மொழித் தேவேச்சுரம் என்று அழைக்கப்பட்டது.------------- மேலும் இக்கோயிலில் அமைந்துள்ள தட்ணாமூர்த்தி,அர்த்தநாரீஸ்வரர், பிர்மர் திருவுருவங்களும் சிற்ப்பக்கலையின் உச்சங்களாகும். (மகா மண்டபத்தில் உள்ள துர்க்கை) கோயிலுக்கு எதிரே உள்ள சோம தீர்த்தத்தில் தைச்சங்கராந்தியில் நீராடினால் சித்தப்பிரமை முதலிய நோய்கள் நீங்கும்.
இலிங்கம் தோற்றம்
ஸ்ரீகருட பகவான் தன்தாயின் அடிமைத்தனத்தைக் களைய தேவேந்திரனிடமிருந்து அமிர்தகலசம் பெற்று வரும் பொழுது காவிரியின் தென்கறையில் அசுரருடன் ஏற்பட்ட சண்டையில் மூன்று துளிகள் அமிர்தம் நெல்லிவனமாக இருந்த இவ்விடத்தில் விழுந்தன. அவைமுறையே இலிங்கம், அம்பாள், தீர்த்தமாகத் தோன்றின. இவ்வாறு இத்தலத்தில் முதலில் இலிங்கம் உண்டாகிறது. ஸ்ரீகருடன் உண்டாக்கி வழிபட்ட தீர்த்தம் சாடயு தீர்த்தம்.
சோமநாதர்
சோமன்-சந்திரன்
ஸ்ரீ சந்திரன் தக்கனின் பெண்கள் 27 பேரை மணந்து அதில் கார்த்திகை, உரோகிணியிடம் மட்டும் அன்புடன் இருக்க கோபடைந்த தக்கன் சாபமிட்டுவிட்டான். இதனால் சந்திரனின் கலைகள் ஒவ்வொன்றாகக் குறைய தொடங்கின. சுயரோகமடைந்த சந்திரன் இத்தலத்தில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி நீராடி இறைவனையும் இறைவியையும் வழிபட கலைகள் வளர்ந்து சுயரோகமும் நீங்கப்பெற்றான். சோமன் என்றால் சந்திரன். எனவே சந்திரனுக்கு அருள் புரிந்தால் இறைவன் சோமகலாநாதர். இறைவி சோமகாலாநாயகி. சோமன் உண்டாக்கிய தீர்த்தம் சோம தீர்த்தம்.
திருநாவுக்கரசர்
அப்பர் பெருமான் இத்தலம் வந்து உழவாரப் பணி செய்யும் பொழுது சமணர்களால் சிவபெருமான் மறைக்கப்பட்டிருந்தார். உடனே அப்பர் பெருமான் கோயிலேயே உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். இதனையறிந்த மன்னன் ஓடோடி வந்து சமணர்களின் வஞ்சையை அழித்து சிவலிங்க மறைப்பை நீக்கி வெளிப்படச் செய்தான்.
இதனை அப்பர் பெருமான்
தலையெலாம் பறிக்குச் சமண்கையருள்
நிலையினான் மறைத்தால் மறைக்கொண்ணுமோ
கலையினார் பொழில் ஆறை வடதளி
நிலையினானடியே நினைந்துய்ம்மினே
என்று பாடுகிறார்.
கோயிலழகும் சிற்ப செல்வங்களும் இன்றும் நம்மை உள்ளம் குளிரச் செய்வன. வரலாற்று ஏடுகளில் மிக முக்கிய இடம் பழையாறைக்கு உண்டு. அந்நகரம் இன்று சிற்றூராக இருந்தாளும் அதன் வீரசிறப்பும் அந்த மண்ணின் பெருமையும் நம்மை சிலிர்க்கவைப்பதாகும். மேலும் உலகமே வியக்கும் தஞ்சைபெருவுடையார் கோயிலைக் கட்டிய அருண்மொழி தேவன் என்ற இயற்பெயர் கொண்ட இராஜராஜ சோழனின் சமாதி பழையாறை அருகே உடையாளூரில் உள்ளது.
இராஜராஜசோழனின் சமாதி
ஒரு வாழைக் கொல்லையில் சிவலிங்க பாணத்தின் மேற்பகுதி மட்டும் வெளியில் தெரிய அடிப்பகுதிகள் மண்ணில் புதைந்துள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு மண்ணை வெட்டி லிங்கத்தை வெளியில் எடுக்க முயன்றுள்ளனர். ஆனால் 13 அடிவரை தோண்டியும் பாணம் நீண்டுகொண்டே செல்ல அப்படியே விட்டுவிட்டனர். அந்தப் பகுதியில் மண்ணால் செய்யப்பட்ட சிறுசிறு விளையாட்டுப் பொம்மைகள் மண்ணில் புதைந்தும் உடைந்தும் கிடக்கும்மென்றும் அப்பகுதி சிறுவர்கள் அப்பொம்மைகளை வைத்து விளையாடுவர் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இராஜராஜசோழனின் சமாதி என்பதற்கு ஆதாரமாக உடையாளூர் கைலாசநாதர் கோயிலிருந்து எடுத்துச்சென்று தற்போது கைலாசநாதர் கோயிலில் எதிரேயுள்ள குளத்தின் மறுகரையில் கட்டப்பட்டுள்ள பால்குளத்தி அம்மன் கோயிலில் கதவு மாட்டியுள்ள உருளைத் தூணி உள்ள கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளதாக கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் பல்வேறு கேல்விகளும் எழுகின்றன. தன் தந்தையான இராஜராஜ சோழனின் சமாதியை இராஜேந்திர சோழன் இப்படி சாதாரணமாகத் தான் விட்டு வைத்திருப்பானா?
இராஜராஜ சோழனின் மற்றொரு மனைவியும் தன் வளர்ப்புத்தாயுமான பஞ்சவன் மாதெவிக்கு பள்ளிப்படையாக ஒரு கோயிலையே பட்டீசுரம் அருகே அமைந்து அதற்கு பஞ்சவன் மாதேவீச்சுரம் (இராமநாதன் கோயில் என தற்போது என்று அழைக்கப்படுகிறது) எனப்பெயரிட்ட இராஜேந்திர சோழன் தம் தந்தையின் சமாதியை எப்படி சாதாரணமாக விட்டுவைத்தான்?
தற்போது இராஜராஜ சோழன் சமாதியைச் சுற்றிலும் மூன்றடி அகலமுடைய சங்கல் சுவர் பூமியில் புதைந்துள்ளதாகவும் இப்பகுதி மக்கள் பூமியைத் தோண்டும் போது செங்கற்கற்கள் வரிசையாகக் கிடைப்பதாகவும் கூறுகின்றனர். சோழர்களின் கட்டிட முறையே கருங்கல் வேலைப்பாடுதான். அப்படி இருக்க செங்கல்லால் இச்சமாதி கட்டப்பட்டிருக்குமா?
இப்படி பல்வேறு கேள்விகள் எழுந்தாலும் அது இராஜராஜனின் சமாதி தான் என்று உடையாளூர் மக்களும் நம்புகின்றனர். நமது கும்பகோணத்திற்கு அருகே ஒரு மாபெரும் வரலாற்று நாயகனின் சமாதி அமைந்திருந்தால் அது நமக்கும் பெருமையானது தான்.
கும்பகோணத்திலிருந்து ஆவூர் செல்லும் பேருந்து வழியில் முழையூரிலிருந்து
கிழக்கே 1.கி.மீ சென்றால் பழையாறை.
இத்தலம்: திருதயுகம்-வேப்பவனம் துவாபரயுகம்-அடம்பவனம்
திரேதாயுகம்-வாழைவனம் கவியுகம்- நெல்லிவனம் என வழங்கப்பெறுகிறது.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்