Skip to main content

அசோகா செய்முறை ரகசியம்

ருசி ரகசியம் விஜி ராம்

பெயர் சொன்னாலே அதன் மகத்துவம் புரியும்படியான ஊர்களில் முக்கியமானது திருவையாறு. உலகமே கொண்டாடும் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ ஸ்வாமிகளின் தலம்... திரு+ஐந்து+ஆறு... காவிரியும் அதன் கிளை ஆறுகளான குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகியவையுமாக 5 ஆறுகளாக பிரிந்து செல்வதால் திருவையாறு என இவ்வூர் பெயர் பெற்றது. சுவையான காவேரி தண்ணீரும், எப்போதும் இசையோடு வீசும் காற்றும் திருவையாறின் இன்னொரு சிறப்பு.

தியாகராஜ ஆராதனை விழா எவ்வளவு பிரபலமோ, அதே அளவு இன்னொரு பிரபலமான விஷயமும் இங்கு உண்டு. அதுதான் திருவையாற்றில் மட்டுமே கிடைக்கும் அசோகா. அல்வா போன்ற இனிப்பு சுவை கொண்ட ஒரு உணவுக்கு இப்படி ஒரு பேரை யோசித்து வைத்ததிலிருந்தே திருவையாற்றின் ரசனை தெரிகிறதே!

அது என்ன அசோகா? தஞ்சை மாவட்ட திருமணங்களில் அவசியம் இடம்பெறும் கண்ணைப் பறிக்கும் சிவப்பு வண்ண இனிப்பு! பச்சை வாழை இலையில் சுடச்சுட ஆவி பறக்கும் அசோகாவை காணும்போதே சுவை சுரப்பிகள் சுறுசுறுப்பாகும். உடலுக்கு மிகவும் உகந்த பாசிப்பருப்பே இதில் முக்கிய சேர்ப்பு. அசோகா விற்பதே பிரதான தொழிலோ என்னும்படி ஊரெங்கும் அல்வா கடைகள் இருந்தாலும், காத்திருந்து உண்டும் வாங்கியும் செல்லும் ரசிகர்களை கொண்ட கடை ஆண்டவர் அசோகா கடைதான்.

காலை 10 மணிக்கு கடை திறக்கும் முன்பே கூட்டம் காத்திருக்கிறது. சுடச்சுட அல்வாவையும் கொசுறாக கொஞ்சம் காரத்தையும் காலை டிபனாக கொண்டு மதிய சாப்பாடாகவும் பார்சல் பறக்கிறது. தியாகராஜ ஆராதனைக்கு வரும் கலைஞர்கள் ஊர் திரும்ப பெட்டி கட்டும்போது மறக்காமல் அசோகா பொட்டலமும் இருக்கும்படி பார்த்துக் கொள்வார்கள். திருவையாறு சென்று வருபவர்கள் மட்டும் அன்றி, பேருந்துகளிலும், தூது அஞ்சல்களிலும் அசோகா பயணிக்கிறது. இத்தனை புகழுக்குப் பின்னே என்ன இருக்கிறது? ஆண்டவர் அசோகா கடை உரிமையாளர் கணேசமூர்த்தியிடமே கேட்டு அறிந்தோம்.

ராமைய்யர் என்பவரால் 50 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக தயாரிக்கப்பட்டது இந்த அசோகா. அவர் வாழ்நாள் முழுக்க அசோகாவும் தூள் பக்கோடாவும் சுவையாட்சி செய்து கொண்டிருந்தது. அவர் காலத்துக்குப் பிறகு, அசோகா சிறிது துவண்ட பொழுதில், ஆண்டவர் கடை கணேசமூர்த்தி மறுவாழ்வு கொடுத்திருக்கிறார். ராமைய்யர் வைத்திருந்த அதே இடத்திலேயே இப்போது செயல்படுகிற ஆண்டவர் கடையில், அதே பாரம்பரியத்தோடு அசோகா தயாரிக்கப்பட்டு பரிமாறப்படுகிறது. பாசிப்பருப்பு, கோதுமை மாவு, சர்க்கரை, நெய் ஆகியவற்றின் கலவைக்கு, இத்தனை சுவை வரக் காரணம் காவேரி தண்ணீரும் விறகு அடுப்பும்தானாம்!

இந்த இதழ் ருசி ரகசியத்தில் நம் ஆராய்ச்சி அசோகாவேதான். வழக்கமாக அல்வா எப்படியெல்லாம் இருக்கும்? கேரளாவில் செங்கல் செங்கலாக ஏராளமான வண்ணங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். நெல்லையிலோ காபிப்பொடி நிறத்தில் வாழை இலை கருகும் அளவு சூடாக இருக்கும். எதைக் கொண்டு  செய்யப்பட்டது என்று சாப்பிட்டும் கண்டுபிடிக்க முடியாதபடி புதிராகவும் சில இனிப்புக் கடைகளில் வைக்கப்பட்டிருக்கும். பாம்பே அல்வா மற்றும் இன்ன பிற அல்வாக்கள் கண்ணாடி போன்ற பளபளப்புடன் துண்டங்களாக இருக்கும். நம் அசோகாவோ வழுவழுப்பாக, திடமாக என்று எது மாதிரியும் இல்லாத புது மாதிரி. செங்கல் போன்று பல்லை பதம் பார்க்காது... வாழை இலை கருகும் வாசனையும் வராது... கண்ணாடித் தன்மையும் இருக்காது.

வாயில் போட்டால் நேராக வயிற்றிலேயே விழும் அளவு மிருது... மிக லேசான ரவை போன்ற ஒரு பருப்புச் சுவை நாவில் இடறும்... கையிலே ஒட்டாது... வாயில் இட்ட உடனே பாசிப்பருப்பு வாசனை காட்டிக் கொடுக்கும்! சாதாரணமாகவே அல்வா செய்வது கூடுதல் கவனம் தேவைப்படும் வேலை. கை ஒட்டாமல் கிளறுவதும், பதம் தப்பாமல் பிடித்து இறக்குவதும் ஆரம்ப அவஸ்தைகள். எத்தனையோ அல்வா வகைகள் செய்த பயிற்சி இருந்தாலும், அசோகா செய்வது கொஞ்சம் வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது. அந்தக்கால சமையல் குறிப்பு புத்தகங்களை படித்தவர்களுக்கு தெரியும்... அந்தப் புத்தகங்களில் உள்ள அளவுகளை புரிந்து கொள்ளவே தனி அகராதி தேவைப்படும் என்று. நம் செய்முறை அப்படி அல்லவே... யார் எப்போது வேண்டுமானாலும் எளிமையாகச் சுவையாக செய்யும் படியான குறிப்பை தரவேண்டுமே...

அசோகாவின் பிரகாசமான ஆரஞ்சு சிவப்பு வண்ணம்தான் அதன் முதல் கவர்ச்சி. அடுத்து வாசனை, சுவை, பதம்... இவை எல்லாமே ஒரு முறையில் வருமா? கண்டிப்பாக வராதுதான். முதன்முறையில் பாசிப்பருப்பை வேக வைத்துக் கிளறியதும், பருப்பு கரைந்து, சரியான பதம் வராமல் போனது. அடுத்த முறை கோதுமை மாவை சரியாக வறுக்காததால், கோந்து போன்ற பதத்தில் வந்தது. முயற்சியில் சற்றும் மனம் தளராமல், மீண்டும் மீண்டும் முயற்சி செய்ததில் கிடைத்தே விட்டது, இதோ... தோழிகளுக்காக எளிமையான அசோகா செய்முறை!

அசோகா செய்முறை ரகசியம்

என்னென்ன தேவை?

பாசிப்பருப்பு (பயற்றம் பருப்பு) -      ஒரு கோப்பை
கோதுமை மாவு -  ஒரு கோப்பைக்கு 2 மேஜைக்கரண்டி குறைவாக...
மைதா மாவு - 2 மேஜைக்கரண்டி
சர்க்கரை - 3 கோப்பை
நெய் - ஒன்றரை கோப்பை
ஏலக்காய் தூள் - கால் மேஜைக்கரண்டி
முந்திரி - 50 கிராம்
திராட்சை - 20  கிராம்
ஆரஞ்சு கேசரி தூள் - ஒரு சிட்டிகை

எப்படிச் செய்வது?

கோதுமை மாவுடன் மைதா மாவை சேர்த்து சலித்து வைக்கவும். பாசிப்பருப்பை வாசனை வரும் வரை வெறும் வறு சட்டியில் வறுத்துக் கழுவி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பருப்பு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு நிதானமான தீயில் வேக விடவும். அடி கனமான இன்னொரு பாத்திரத்தில் ஒரு கோப்பை நெய் விட்டு, அதில் முந்திரி திராட்சையை வறுத்து எடுத்து வைக்கவும். அந்த நெய்யில் கோதுமை - மைதா மாவு கலவையை சேர்த்து வறுக்கவும். நிதானமான தீயில் கைவிடாமல் கிளறி வறுக்க வேண்டும். ஒரு கட்டத்தில் மாவு பொன்னிறமாகி நன்கு வாசனை வரும். இந்தப் பதத்தில் வேக வைத்த பருப்புச் சேர்த்து கிளறவும். பருப்பு நன்கு மசிந்து மாவுடன் கலக்கும்போது சர்க்கரையையும் கேசரி பொடியையும் சேர்த்து கைவிடாமல் கிளறவும். பாத்திரத்தின் ஓரம் ஒட்டாமல் சுருண்டு, அல்வா பதம் வந்ததும் வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சையும், ஏலக்காய் பொடியும், மீதமுள்ள நெய்யும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.  சுவையான அசோகா சிரமமின்றி தயார்!

உங்கள் கவனத்துக்கு...

பமைதாவுக்கு பதில் சர்க்கரை சேர்க்காத கோவா சேர்க்கலாம்.

பகைவிடாமல் கிளற வேண்டும் என்பது எல்லா வகை அல்வாக்களுக்குமே பொதுவானது. கட்டி தட்டாமல் இருக்கவே கிளறிவிட வேண்டும்.

பஆரஞ்சு கேசரி தூள் உங்கள் விருப்பத்துக்கு உட்பட்டது. அதைத் தவிர்த்தாலும் சுவையில் குறையில்லை!


(ரசிப்போம்... ருசிப்போம்!)

நன்றி குங்குமம் தோழி

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்; நிலவு லாவிய நீர்மலி வேணியன், அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்; மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.------சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

வாணர் குல அரசர்கள்

வாணர் குல அரசர்கள். தென்னிந்திய வரலாற்றில் பல்லவர், சோழர், சேர, பாண்டியர் வரிசையில் போர்க்குடியாகவும்,புகழ் பெற்ற மன்னர்களாகவும் ஆட்சி செய்த குடிகளில் மிகவும் முக்கியமான குடிகள் வாணர் எனவும் அழைக்கப்படும் மகாபலியின் வம்ச குடியினரே ஆவார்கள். வாணர் என்றால் மலையர் என்ற மலையாளும் மன்னர் குடியாக கொள்ளப்படுகின்றது.. சேரனை சங்க இலக்கியத்தில் மலையன் என்றும் வானவன்(மலையர்) என்றும்.வானவரம்பன்(சேரன்) மலைகளை எல்லையாக கொண்டவன் என்று கூறுகின்றது.ஆக தென்னாடு முழுவதும் விந்திய மலை முதல் தென் மலையான பொதிகை,மேற்கு தொடர்ச்சி மலை பகுதி வரை மகாபலி வம்சத்தவர்களான வாணர்(மலையர்) என்ற மன்னர்களே ஆண்டுள்ளனர். இதற்கு ஆதாரமாக. "தென்புல மருங்கின் விண்டு நிறைய வாணன் வைத்த விழுநிதி பெறினும் பழிநமக் கெழு வெண்ணாய் விழுநிதி" (அடி 202 - 204 மதுரைகாஞ்சி) - எனக் குறிப்பிடுகிறது. இவ்வரிகளில் குறிக்கும் தென்புலம் என்பது இந்தியத் திருநாட்டிற்கு தென்புறம் தடுப்புச்சுவர் போல் உள்ள விந்திய மலையாகும். இது தக்காணம், தஷ¤ணபாதம், தக்கண பாதம் எனவும் வட மொழியில் அழைக்கப்படுகின்றன.இதில் இருந்து விந்திய மலையிலிருந்து கு

பறவை நாச்சியார்

அவள் பெயர் பரவை, சுந்தரரின் மனைவி பெயரையே கொண்டவள். திருவாரூர் தியாக விடங்கர் (தியாகராஜர்) கோயிலில் தொண்டு புரிந்து வந்தவள். இவளின் பேரழகும், சைவத் தொண்டுகளும் மாமன்னன் கங்கை கொண்ட ராஜேந்திர சோழனை மிகவும் கவர்ந்தன. எத்தனை போரில் ஈடுபட்டு, எத்தனை உயிர்களை பரித்தவனாக இருந்தாலும் அவனும் ஆண் தானே? உடனே அவளை காதலிக்கத் துவங்கினான் ராஜேந்திரன். பல நூறு வருடங்களாக செங்கல் கட்டுமானமாகவே இருக்கும் திருவாரூர் கோயிலை கற்றளியாக மாற்ற வேண்டும் என்பது பரவையின் ஆசை, இதை ராஜேந்திரனிடன் கூறுகிறார் பரவை.  அவளை மிகவும் நேசித்த ராஜேந்திர சோழன் அவளின் வேண்டு கோளுக்காகத் தியாகராஜரின் திருக்கோயிலைக் கருங்கல் கொண்டு எடுத்து கற்றளியாகப் புதுப்பிக்கிறான். அவனின் 16-18ம் ஆண்டுகளில் வீதிவிடங்கனின் கோயில் கற்கோயிலாக மாற்றப்பெற்றது. கற்றளி மட்டும் போதாது, இந்த கோயிலை பொற் கோயிலாகவே மாற்ற வேண்டும் என்று பரவை ராஜேந்திரனிடம் கேட்டாள். காதலி பேச்சுக்கு மறு பேச்சு ஏது? உடனே ராஜேந்திரன் கோயிலை உள்ளும் புறமும் தங்கத்தகடுகள் போர்த்தி அழகு செய்தான். முகமண்டபம், தூண்கள் ஆகியவற்றை செம்புத் தகடுகளால் அலங்கரித்தான். 18ம் ஆ