சித்திரைத் திருவிழா மதுரை

சித்திரைத் திருவிழா
மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோயிலில்
சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் வருடாந்திர பிரம்மோத்ஸவம் மிக முக்கியமான விழாவாகும். மீனாட்சி பட்டாபிஷேகமும், மீனாட்சி திருக்கல்யாணமும் இவ்விழாவில் நடக்கின்றன. மேலும் இந்த விழா திருமாலிஞ்சோலை என்று அழைக்கப்படும் அழகர் கோயிலையும் சம்பந்தப்படுத்துகிறது. இதனால் இவ்விழா நடக்கும் மாதத்தில் மதுரையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் விழாக்கோலம் பூணுவது இயற்கை.
சித்திரைத் திருவிழா, சித்திரையில் வளர்பிறை 5ம் நாளில் ஆரம்பிக்கும். மேற்சொன்ன நிகழ்ச்சிகள் 8, 9 மற்றும் 10ஆம் நாட்களில் நடக்கின்றன. எட்டாவது நாள் அன்னை மீனாட்சி, பட்டாபிஷேகம் நடந்து வெள்ளி அரியணை ஏறுவார். 9ஆம் நாள் மீனாட்சி வெற்றிப் பயணம் (திக்விஜயம்) முடிந்து 10ஆம் நாள் சித்ரா பவுர்ணமி அன்று மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடக்கும். (சித்திரை மாதத்தில் ப்ரம்மோத்ஸவம் நடக்கும் அனைத்து சிவாலயங்களிலும் சித்ராபவுர்ணமி அன்று திருக்கல்யாணம் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.)
அந்த நாளிற்குப் பிறகு, விழா வைகைக்கரைக்கு மாறுகிறது. அந்த நாளில் மீனாட்சி-சுந்தரேசுவரர் தம்பதிகளை இல்லறத்தில் விட்டுவிட்டு நாடு முழுவதும், அழகர் வருகைக்காக அதிகாலையில் வைகை ஆற்றோரம் காத்துக்கிடக்கிறது. அழகர், மதுரைக்கு வடகிழக்கில் 25 கிலோமீட்டரில் அமைந்திருக்கும் அழகர் கோயிலின் பெருமாள் ஆவார். கள்ளழகரான விஷ்ணு தன் தங்கையை சுந்தரேசுவரருக்குக் கொடுத்ததாக புராணச் செய்திகள் உண்டு. இதனை சிரமேற்கொண்டு, கள்ளழகர் திருப்பரங்குன்றத்தில் இருந்து மதுரைக்கு ஊர்வலமாகக் கொண்டு வரப்படுகிறார். திருப்பரங்குன்றத்தின் நாயகர் சுப்பிரமணியர் ஊர்வலத்தை தலைமையேற்று நடத்துகிறார். அந்த வழி முழுவதும் நிரம்பியிருக்கும் கூட்டத்தை நாம் பார்க்கும்போது, நம்மை அறியாமல் பரவசம் நம்மை அள்ளிக் கொண்டு போகிறது.
இந்த அழகர் அழைப்பிற்குப் பின் ஒரு சுவையான கதை உண்டு. அழகர் மீனாட்சியின் சகோதரர் ஆவார். அவர் மீனாட்சியின் திருமணத்தை நடத்திவைக்க அழகர் கோயிலில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு வருகிறார். ஆனால் தான் வருவதற்கு முன்பே திருமணம் முடிந்ததை கேள்விப்படுகிறார். ஆற்றில் கூட கால் படாமல் திரும்பி வருகிறார். தற்போதைக்குக் கூட அந்த சடங்குகள் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு நடக்கின்றன. அழகர் தற்போது ஆற்றில் தன் காலைப் பதித்துவிட்டுச் செல்லும் அந்தக் காட்சி தென்னிந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அந்த நாளில் நடைபெறும் காளைகள்/பசுக்கள் சந்தை மிகவும் புகழ்பெற்றது. மகிழ்வில் உண்டான ஆரவாரமும், உற்சாகத்தில் உண்டான களிப்பும் நிறைந்த அந்த மனநிலை நகர மக்களுக்கு அன்று முழுதும் இருக்கிறது. மக்கள் கூட்டம் பெருமளவில் இங்கு கூடுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கக் கூடும். அன்றைய நாளில் திருவிழாவோடு ஒரு வியாபார சந்தையும் நடப்பது வாடிக்கையாகி விட்டது.
சித்திரைத்தேர்
அழகர் கோயிலுக்கு வருமானம் தரும் திருவிழாக்களுல் இது முதலாவதாகத் திகழ்கிறது. பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை உண்டியல் பணமாகவும், நகைகளாகவும் செலுத்திவிட்டுப் போகின்றனர். அன்றைய நாளின் அழகர் அலங்காரமும், அவர் வரும் ரதத்தின் அழகும் பார்ப்போர் மனதைக் கொள்ளைகொண்டுவிடுகிறது.
சித்திரைத் திருவிழா மாசி மாதத்தில் கொண்டாடப்பட்டதாக வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. அதனால்தான் இன்றும் திருவிழா ஊர்வலங்கள் மாசிவீதிகளையே பயன்படுத்துகின்றன. நாயக்கர் காலத்தில் அழகர்கோயிலும் இவற்றுடன் சம்பத்தப்படுத்தப்பட்டு சித்திரை மாதத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது.
11ஆம் நாள் நடக்கும் தேர்திருவிழா வருடாந்திர திருவிழாவை மங்களகரமாக முடித்து வைக்கிறது.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சித்ரா பௌர்ணமி விழா கொண்டாடப்பட்டாலும், மதுரையில் தான் சித்ரா பௌர்ணமி விழா சிறப்பாக கருதப்படுகிறது. ஒருமுறை விருத்ராசுரன், விஸ்வரூபன் என்ற இருவரை தேவேந்திரன் கொன்றான். அவர்கள் பிறப்பால் அந்தணர்கள் ஆனதால் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. அதிலிருந்து விடுபட தன் குருவை நாடி உபாயம் கேட்டான். குருபகவான் அவனிடம் பூலோகம் சென்று பல்வேறு சிவஸ்தலங்களில் வழிபட்டால் ஓரிடத்தில் உன் கெடுதல் நீங்கும் என்று கூறினார். அதன்படி இந்திரன் காசி முதலிய பல ஸ்தலங்களில் வழிபட்டு தெற்கு நோக்கி வந்தான். ஓரிடத்தில் கடம்ப மரத்தின் கீழ் சென்றவுடன் தன்னைப் பற்றியிருந்த தோஷம் விலகக் கண்டான். இந்திரன் மகிழ்ச்சியடைய அவன் முன் கடம்ப மரத்தடியில் சிவபெருமான் திருஆலவாய் சோமசுந்தரர் அவனுக்கு காட்சி கொடுத்தார். இந்திரன் சிவபெருமானுக்கு கோவில் கட்ட நினைத்து தேவலோகத்தில் இருந்து ஒரு விமானம் வரவழைத்தான். இத்தலத்து இறைவனுக்கு இந்திரன் விமானம் அமைத்ததால் அதற்கு இந்திர விமானம் என்றும், விண்ணில் இருந்து வந்ததால் விண்ணிழி விமானம் என்றும் சொல்லப்படுகிறது. ஆலயம் எடுத்த இந்திரனிடம் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் என்னை இங்கு வந்து வழிபடுக என்று கட்டளையிட்டார். அதன்படி ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் இந்திரன் இங்கு வந்து வழிபடுகிறான் என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது. அதனால் தான் சித்ராபௌர்ணமி மதுரையில் சிறப்பாகக் கருதப்படுகிறது.தங்கக் குதிரை வாகனத்தில் அழகர்
மதுரையில் சித்திரைத் திருவிழா சைவமும் , வைணவமும் இணைந்த்த் திருவிழா ஆகும். இரு சமயங்கள் தொடர்புடைய மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன. சமயங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடனே மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இரு விழாக்களும் இணைக்கப்பட்டு ஒரே விழாவாக ஆக்கினார். இதனால் வைகை ஆற்றின் வட கரையில் அமைந்த ஊரான தேனூரில் ஆற்றில் இறங்கும் விழா, வெகுகாலமாகவே நடைபெற்றுவருகிறது. பின்னாளில் இத்திருவிழா மதுரையில் வைகை ஆற்றில் இறங்கும்படியான விழாவாக மாற்றியமைக்கப்பட்டது. இதற்காக, மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், வருவதற்குள் திருமணம் முடிந்து விடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பி விடுவதாகப் புதிய கதையும் புனையப்பட்டது. உண்மையில் மண்டூக மகரிசிக்கும் நாரைக்கும் சாப விமோசனம் அளிக்க அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்பிருந்த பழைய புராணம்.
துணை சித்திரைத் திருவிழா------
மதுரையில் சித்திரைத் திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா போன்றே வைகைக் கரையில் அமைந்துள்ள மானாமதுரை யிலும், பரமக்குடியிலும் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா நடைபெறுகிறது.
வீரபாண்டி சித்திரைத் திருவிழா
தேனி அருகிலுள்ள வீரபாண்டியிலுள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலிலும் சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதம் கடைசி செவ்வாய்க் கிழமை தொடங்கி மறு செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்து எட்டு நாட்கள் நடைபெறுகிறது.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்