பிள்ளைச் செல்வம் அளிக்கும் பாலன்!



                                             


பிள்ளைச் செல்வம் அளிக்கும் பாலன்!
ஆய்க்குடி ஸ்ரீபாலசுப்ரமணிய சுவாமி கோயில்

தாட்பட கோபவிஷ பாப்பினிற் பாலன்மிசை
சாய்த்தொடுப் பராவுநீள் கழல்தாவிச்
சாற்றுமக் கோரவுரு கூற்றுதைத் தார்மவுலி
தாழ்க்கவஜ் ராயுதனும்இமையோரும்
ஆட்படச் சாமபர மேட்டியைக் காவலிடும்
ஆய்க்குடிக் காவலஉ ததமீதே
ஆர்க்குமத் தானவரை வேற்கரத் தால்வரையை
ஆர்ப்பெழச் சாடவல பெருமாளே
பல நூறு ஆண்டுகளுக்கு முன் பொதிகை மலைச் சாரலில் இருந்த இன்னொரு மலைக்குன்றம். "ஆய்' எனும் அரசன் ஆண்ட மலைப் பகுதி என்பதால் ஆய்க்குடி என அழைக்கப்பெற்றது. அதன் அருகே மல்லிபுரம் என்னுமிடத்தில் ஒரு குளம். அதனைத் தூர் அகற்றிச் செப்பனிட்டபோது, குளத்தின் அடியில் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது அழகான சுப்ரமணியர் சிலை. அதனை எடுத்துக்கொண்ட மல்லன் என்ற பக்தர் ஒருவர், தமது வீட்டின் பின்புறத்தே ஆட்டுத் தொழுவத்தின் அருகில் கொட்டகை அமைத்து பூஜை செய்து வந்தார். ஒரு நாள்... அவரது கனவில் தோன்றிய ஸ்ரீ முருகப் பெருமான், அரசும் வேம்பும் இணைந்திருக்கும் இடத்தில் தம்மைப் பிரதிஷ்டை செய்யுமாறு கூறினார். மேலும், அதற்குரிய வழியைக் கேட்க, ஆட்டுத் தொழுவத்தில் இருக்கும் செம்மறியாடு நடந்து சென்று, அதுவே வழியைக் காட்டும் என்றும் அருளினார். அப்படியே அந்தச் செம்மறியாடும், ஓர் இடத்தில் சென்று நிற்க அங்கே, அரசும் வேம்பும் இணைந்திருந்த காட்சி கண்டார். அங்கேயே ஸ்ரீ முருகப் பெருமானை பிரதிஷ்டை செய்து, ஓலைக் குடிசை எழுப்பி, சிறு கோயிலாக்கினார்.
இங்கே முருகப்பெருமான் ஒரு முகம் கொண்டு, நான்கு கரத்துடன் ஒரு பாலனாகத் திகழ்கிறார். முருகனுக்கு அருகே இருக்கும் மயிலின் முகம் இடது புறம் நோக்கியுள்ளது.
ஓலைக் குடிசையாக இருந்த முருகன் கோயிலுக்கு பின்னர் வந்த சிற்றரசர்கள் திருப்பணிகள் செய்தனர். இருப்பினும் 1941ம் ஆண்டில், தற்போது நாம் காணும் இந்த வகையில் கோயில் சிறப்புற எடுத்துக் கட்டப்பட்டது. மூலவருக்குப் பின்புறம் அரசு, வேம்பு ஆகியவற்றுடன், கறிவேப்பிலை, மாதுளை, மாவிலங்கு ஆகிய மரக்கன்றுகளையும் சேர்த்து ஒன்றாக வளர்த்து இவையே தல விருட்சமாகக் காட்சியளிக்கிறது.
இங்கே உற்ஸவர் முத்துக்குமாரசாமி மயில் வாகனத்தில் நின்றபடி காட்சியளிக்கிறார். அருகே வீரவாகு சிறப்புறத்
திகழ்கிறார்.
ஒருமுறை மதுரையைச் சேர்ந்த பட்டு வணிகர் ஒருவர்... மகப்பேறு வேண்டி பல தலங்களையும் வழிபட்டு, ஆய்க்குடி முருகப் பெருமானை தரிசிக்க வந்தார். தனக்குப் பிள்ளை இல்லாத குறையைப் போக்கி அருள வேண்டும் என்று வேண்டிக்கொண்ட அவர், தனக்குப் பிறக்கும் குழந்தையுடன் வந்து பாலமுருகனுக்கு வைர வேல் அணிவிப்பதாகப் பிரார்த்தனை செய்து கொண்டார்.
நாட்கள் கடந்தன. அவருக்கு குழந்தையும் பிறந்தது. ஆனால் அவர் முருகனுக்குரிய பிரார்த்தனையை மறந்து விட்டார். ஒருநாள் அவர் மனைவியின் கனவில் தோன்றிய பாலமுருகன், கருணை மிகக் கொண்டு, அவர்களின் பிரார்த்தனையை எடுத்துச் சொன்னார். பதறிய அந்தப் பெண்மணி, தன் கணவரிடம் சொல்ல, தான் அவ்வளவு காலம் கடந்தும் மறந்து போனது நினைத்து அவர் வருத்தம் மிகக் கொண்டார். உடனே தன் மைந்தனுடன் ஆய்க்குடி வந்து, வைரவேலை முருகனுக்கு அர்ப்பணித்தார். பின்னர் வருடா வருடம் படிப்பாயசம் வைக்கப் பிரார்த்தனையும் செய்துகொண்டார்.
இந்தத் தலத்தில் குழந்தை இல்லாதவர்கள் விரதம் இருப்பதும், மணமாகாதவர்கள் விரதம் இருப்பதும், படிப்பாயசம் நிவேதனம் செய்வதும் சிறப்பாகத் திகழ்கிறது.
இங்கே குழந்தைகளுடன் முருகனும் சேர்ந்து படிப்பாயசம் சாப்பிடுவதாக தலமான்மியம் கூறுகிறது. ஒரு படி முதல் 12 படி வரையில் அரிசிப் பாயசம் செய்வது இங்கே பிரார்த்தனைகளில் முக்கியமானதாகும். இவர் பால சுப்ரமணியராக இருப்பதால், படிப்பாயசத்தில் சுக்கு, ஜீரகம், பாசிப்பருப்பு முதலியன சேர்க்கப்படுகின்றன. பால்குடம் எடுத்தல், காவடிப் பிரார்த்தனைகளும் செலுத்தப்படுகின்றன. இங்கே அரச இலை விபூதிப் பிரசாதம் சிறப்பு. கோயிலில் வெள்ளி ரதமும் உள்ளது.
இந்தத் தலத்தின் முருகப் பெருமானை "வாழ்படச் சேனைப்பட' என்னும் திருப்புகழால் அருணகிரிநாதர் பாடிப் பரவுகிறார். "பொங்கும் கொடிய சுற்றன்' என்று தொடங்கும் திருப்புகழிலும் ஆய்க்குடி என்ற குறிப்பு உள்ளது. சித்திரை மாதப் பிறப்பு முதல் சில தினங்களுக்கு உதய சூரியனது கிரணங்கள் மூலவர் மீது விழுவது இக்கோயிலின் சிறப்பம்சமாகும்.
இங்கே பாலசுப்பிரமணியராகக் காட்சி தரும் மூலவருக்கு ஹரிராம சுப்பிரமணியர் என்ற பேரும் உண்டு.
தல விருட்சமாக ஐந்து மரங்கள் சேர்ந்த பஞ்சவிருட்சம் விளங்குகிறது. தல தீர்த்தம் வற்றாத நதியாகக் கூறப்படும் அனுமன் நதி.
இருப்பிடம்: திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் இருந்து மதுரை செல்லும் சாலையில் சுமார் 5 கி.மீ. 4 முனைச் சாலை வரும். அதில் வலப்புறம் திரும்பி 6 கி.மீ. தொலைவு சென்றால் ஆய்க்குடி கிராமம் வரும். செங்கோட்டையில் இருந்து கிழக்கில் சுமார் 13 கி.மீ. தொலைவு.
இந்தத் தலத்துக்கு அருகே அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற இலஞ்சி குமாரசாமி கோவில், திருமலை முருகன் கோவில் ஆகியவை உள்ளன.
திருவிழாக்கள்: கந்தசஷ்டியின் போது 6 நாட்கள், சித்திரை வருடப் பிறப்பு, வைகாசி விசாகம், தை மாத பாரிவேட்டை, தைப்பூசம், திருக்கார்த்திகை ஆகியவை முக்கியமான விழாக்கள்.
                                                                                                                                                          

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்