இராஜராஜேஸ்வரம்

இராஜராஜ சோழன் சிவபெருமான் மீது கொண்ட அதிகப் பற்றுதலின் காரணமாக தஞ்சாவூரில் மிகப்பெரிய கோயில் ஒன்றைக் கட்ட விரும்பினான். மேலும் இக்கோயில் தமிழர்களின் கட்டிடக் கலைக்கும் மிகப்பெரும் சாதனையாக இருக்க வேண்டுமென்றும் விரும்பினான். அவனது விருப்பப்படி இந்தக் கோயில் கட்டுவதற்குத் தேவையான கற்கள் பெரும்பான்மையாக அவன் ஆளுகைக்குட்பட்ட இடங்களுக்கு வெளியில் இருந்துதான் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இந்த கற்கள் அனைத்தும் முழுமையாகச் செதுக்கப்பட்டு கோயிலாக வடிவமைக்க சுமார் 34 வருடங்கள் வரை ஆகியது. இக்கோயில் கோபுரம் தரைத்தளத்திலிருந்து 216 அடி உயரம் உடையது. இக்கோயில் கோபுரம் கர்ப்பக்கிரகத்திலிருந்து எகிப்திய பிரமிடுகளைப் போல் 190 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோயில் கோபுரத்தின் உச்சியில் உள்ள பிரம்ம மந்திரக்கல் எனும் ஒரே கல்லிலான வட்ட வடிவமான கல் சுமார் 80 டன் அளவுடையது. இக்கோயிலின் மூலவரான பிருகதீசுவரர் (பெருவுடையார்) லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார். இந்த லிங்கத்தின் உயரம் 13 அடி. ஆவுடை எனும் லிங்கத்தின் கீழ்ப்பகுதியான வட்டவடிவமான பகுதியின் சுற்றளவு 54 அடியாக இருக்கிறது. இந்த லிங்கம் மத்தியப்பிரதேச மாநிலம் நர்மதை ஆற்றங்கரையிலிருந்த ஒரு மலையில் இருந்து கல் எடுத்து வந்து செய்யப்பட்டது என்கிறார்கள். இவ்வளவு பெரிய லிங்கம் வேறு எங்கும் இல்லை. இங்கு கோயிலின் முன்புறமுள்ள நந்தியும் மிகப்பெரிய அளவுடையது. இது 9 அடி நீளமும், 6 அடி அகலமும், 12 அடி உயரமும் கொண்டது. இது போன்ற நந்தி உருவம் வேறு எங்கும் இல்லை. கருவூரார் எனும் சித்தரின் அறிவுரையின்படி 10 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இந்தக் கோயில் முதலில் இராஜராஜ சோழன் பெயராலேயே இராஜராஜேஸ்வரம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் நாயக்க மன்னர் காலத்தில் பெருவுடையார் கோயில் என்று அழைக்கப்பட்டது. அதன் பின்னர் 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களின் ஆளுமைக்குள் வந்த போது பிருகதீசுவரம் என்று பெயர் மாற்றமடைந்தது.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்