பூலித்தேவரின் மறைவு

பூலித்தேவரின் மறைவு பற்றி இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. மன்னர் தப்பிச் சென்றாலும் அவர் உயிரை குறியாகக் கொண்ட ஆங்கிலேயர்கள் அவரைத் தீவிரமாகத் தேடினர். ஒரு சாரார் கருத்துப்படி ஆரணிக் கோட்டையின் தலைவன் அனந்த நாராயணன் என்பவனின் மாளிகைக்கு பூலித்தேவரை வரச் செய்து அங்கு கைது செய்யப்பட்டார் என்றும், பாளையங்கோட்டைக்குக் கொண்டு செல்லும் வழியில், சங்கரன் கோயிலின் இறைவனை வழிபட வேண்டும் என்று பூலித்தேவர்விரும்பியதாகவும், அதன்படி கும்பினியப் போர் வீரர்கள் புடைசூழச் சென்று இறைவனை வழிபட்டதாகவும் , அப்போது பெரிய புகை மண்டலமும் சோதியும் கைவிலங்குகள் அறுந்து விழ சோதியில் கலந்தார் என்றும், பூலித்தேவன் சிவஞானத்துடன் ஐக்கியமானதால் "பூலிசிவஞானம்" ஆனார் என்றும் நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன. இன்றைக்கும் சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயணன் கோவிலில் பூலித்தேவர் மறைந்த இடம் என்று ஒரு இடம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

மற்றொரு கருத்து பூலித்தேவர் ஆங்கிலேயரால் கைதுசெய்யப்பட்டு தூக்கிலிட்ட செய்தியை மக்கள் அறிந்தால் அவர்கள் கிளர்ச்சி செய்யக்கூடும் என்பதால் ஆங்கிலேயர் இதனை ரகசியமாகச் செய்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் தமிழக அரசால் புதுப்பிக்கப்பட்டு அவரது நினைவு மாளிகையாக அமைக்கப்பட்டுள்ளது.

நினைவு மாளிகை
தமிழ்நாடு அரசு திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி வட்டம் பகுதியிலுள்ள நெல்கட்டும்செவல் எனும் ஊரில் பூலித்தேவன் நினைவைப் போற்றும் வகையில் பூலித்தேவன் நினைவு மாளிகை, திருமண மண்டபம் ஆகியவைகளை அமைத்துள்ளது. இந்த நினைவு மாளிகையின் முகப்பில் பூலித்தேவன் முழு அளவு திருஉருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு ஆயிரம் பேர் அமரக்கூடிய அளவில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. பூலித்தேவன் காலத்து நினைவுச் சின்னங்கள் மற்றும் ஆயுதங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்