காந்தளூர் போர்
காந்தளூர் போர்:..........ராஜ ராஜன் ஆட்சியில் நடந்த எண்ணற்ற போர்களின் வெற்றிகளில் அவன் காலக் கல்வெட்டுக்களில் புகழ்ந்து பேசப்படுவது காந்தளூர்ச்சாலைக் களமறுத்த செய்தியேயாகும்.இன்றைய திருவனந்த புரத்தின் ஒரு பகுதியே காந்தளூர்ச்சாலை.நகரின் பழம்பெரும் பகுதியும் அதுவே.இன்றும் அதன் நடு வீதி "பழஞ்சாலை" அல்லது "நெடுஞ்சாலை" என வழங்கப்படுகிறது.பெரிய கடை வீதியாகவும் வாணிகஸ்தலமாகவும் உள்ளது.தமிழருமதிக அளவில் வாழும் பகுதியும் இது தான்.சேர நாட்டுத்தமிழ்ப்புலவர்கள் வாழ்ந்த அரண்மனையும் ஆய் மன்னன் மரபில் வந்த திருவாங்கூர் மன்னன் அரண்மனையும் இங்கு உள்ளது.அக்காலத்தில் இது சேர மன்னர்களின் தலை சிறந்த துறைமுகமாகவும் பெரிய வாணிகஸ்தலமாகவும் இருந்தது.மேலும் அவர்களது கடற்படையின் மைய தளமாகவும் செயல் பட்டது..ஆட்சித்தொடக்கத்திலேயே ராஜராஜனின் தென் திசைப்படையெடுப்பு காந்தளூர்ச்சாலையை நோக்கியே இருந்தது.இப்போருக்குக்காரணம் சேரனிடம் ராஜ ராஜன் அனுப்பியிருந்த அரசு நெறிக்கு மாறு பட்டு தூதனை அவன் உதகையில் சிறை வைத்ததேயாகும்.இச்செய்தி கேட்ட பேரரசனின் பெரும் படை தென் திசை காணாத அளவு சுழன்று அடித்தது.சோழர் பெரும்படை பாண்டியனை தாக்கி அதன் பின்னரே சேர நாடு விரைந்தது. சேரரை வெல்ல தரைப்படை மட்டும் போதாது கடற்படையும் வேண்டும்.ராஜ ராஜன் கடற்படை குமரி முனை சுற்றி வந்து சேர நாட்டின் பெரிய கப்பற்படைக்கலமான காந்தளூரை முற்றுகையிட்டது,அப்போதைய சேர மன்னன் பாஸ்கர ரவி வர்மன் .காந்தளூரில் நடந்தது பெரிய அளவில் கடல் நிலப் போர் ஆகும்.அப்போது சேர மன்னனின் கப்பற்படைகள் முழுவதுமாக அழிந்து போயின.அப்போரில் நாடிழந்த பாண்டிய மன்னன் அமர புயங்கனும் சேரனுடன் சேர்ந்து போர் புரிந்தான்.போர் முடிவில் அவ்விரு மன்னர்களின் முடிகளும் கைப்பற்றப்பட்டன.அதனால் ராஜ ராஜனுக்கு "மும்முடிச்சோழன்" எனப் பட்டம் சூட்டப்பட்டது.காந்தளூரையும் அதன் சுற்றுப்புறங்களையும் அழித்த சோழர் படை உதகை நோக்கி விரைந்தது.மாளிகைகள். குளிகைகள் நிறைந்த உதகை சுக்கு நூறாக ஆக்கப்பட்டு பின் தீக்கிரையாக்கப்பட்டது.சிறையை உடைத்து மன்னன் ராஜ ராஜன் தானே சென்று தூதுவனை விடுவித்தான்............."ஏறிப் பகல் ஒன்றில் எச்சரமும் போய் உதகை..........நூறித் தன் தூதனை நோக்கினோன்"..........குலோத்துங்க சோழன் உலா 46-48
Comments
Post a Comment