ஆண்டாள்
ஆண்டாள் தனது 15ஆம் வயதில் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு நூல்களை இயற்றியுள்ளார்.இவ்விரு நூல்களும் அதன் இலக்கிய செழுமைக்கும், தத்துவம்,பக்தி ஆகியவற்றிக்காக மிகுந்து போற்றப்படுகின்றது.
இவரது முதல் படைப்பான திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டுள்ளது. இத் திருப்பாவையில் ஆண்டாள் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக் கொண்டு பாடப்பெற்ற பாட்டுகளின் தொகுப்பாகும்.
இவரது இரண்டாவது படைப்பான நாச்சியார் திருமொழி 143 பாடல்களைக் கொண்டுள்ளது.இறைவனை நினைத்துருகிப்பாடும் காதல்ரசம் மிகு பாடல்களின் தொகுப்பாக காணப்படுகின்றது.இது வடமொழியில் எழுதப்பட்ட ஜெயதேவரின் கீத கோவிந்தம் எனும் நூலினை ஒத்ததன்மை உடையதாக காணப்படுகின்றது.கண்ணனை மணமுடிப்பதாக ஆண்டாள் பாடியுள்ள நாச்சியார் திருமொழியில் உள்ள ’வாரணமாயிரம்’ புகழ் பெற்றது
ஆண்டாளின் இவ்விரு படைப்புகளும் குறிப்பாக திருப்பாவை நாட்டின் (தென்கலை மற்றும் வடகலை பின்பற்றும்) அனைத்து வைணவதலங்களிலும் வைணவர்களின் இல்லங்களிலும் தினந்தோறும் ஓதப்பட்டுவருகின்றது. மேலும் வைணவதலங்களில் நடைபெறும் முக்கிய விழாக்களிலாயினும் வைணவர்களின் இல்லவிழாவாயினும் வடமொழி மறைகளுக்கு நிகராக தவறாமல் ஓதப்படுகின்றது.
திருப்பாவைச் சிறப்பு
வைணவ சமய வழிபாட்டில் ஒன்றறக் கலந்து விட்ட ஒன்று திருப்பாவையாகும். மாதவனாகிய எம்பெருமானுக்கு உகந்த மார்கழி மாதக் காலைகளில் அனைத்து வைணவக் கோயில்களிலும் இசைக்கப்படுவதே இதன் பெரும் சிறப்பு. தமிழில் புனையப்பெற்ற பாடல்களே ஆயினும், தமிழறியா அடியார்கள் கொண்ட வைணவத் தலங்களிலும், மார்கழி மாதக் காலைகளில் திருப்பாவை இசைக்கப்படுவதும், இந்தியாவில் எங்கெல்லாம் பெருமானின் திருக்கோயில்கள் உள்ளனவோ அங்கெல்லாம், கோதை தனக்கும் ஒரு தனிச் சந்நதி கொண்டுள்ளதும் வேறு எந்த ஒரு அடியவருக்கும் காணப் பெறாத தனிச் சிறப்பாகும். மொழி வேறுபாடின்றி, வைகுந்த நாதனின் வழிபாட்டில் இந்தியக் கண்டம் முழுவதும் விரவிக் காணப்படுவது திருப்பாவைத் தொழுகை.
திருப்பாவையின் சிறப்பு முதன்மையாக அதன் பக்திப் பெருக்கு மட்டுமல்ல. பாற்கோவை முழுதும் விரவிக் கிடக்கும் கோதை மாதவன் பாற்கொண்ட தூய காதலமுதம் மற்றும் அதன் விளைவாய் அடியவருக்கும் அனைவருக்கும் அரும்பெரும் வரமாகக் கிடைத்த தமிழ் மணம்.
திருப்பாவையின் இந்த முச்சுவையும் தித்திக்கும் பாக்களில் இரண்டொன்றைக் கீழே காணலாம்:
கோதை நமக்கு அளிக்கும் பக்திச் சுவையைக் காணலாம். ஓரே அடிகொண்டு உலகையே அளந்த பரந்தாமனின் புகழைப் பாடுவதனாலேயே புவியோர் தமது துன்பம் நீங்கி இன்புற்றிருக்க இயலும் என இப்பாடலின் மூலம் இயம்புகிறாள் கோதை:
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்கு சாற்றுநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்குபெரும் செந்நெல் ஊடு கயலுளக
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்
வைணவத் தத்துவ இயல்பின்படி, எம்பெருமானைச் சென்றடைய வழி அவனுடைய திருவடிகளில் சரணாகதியாவதேயாகும். இதனைப் பக்தியாலும் மேற்கொள்ளலாம்; அன்றி கிருஷ்ணப் பிரேமை என்னும் காதலாலும் அடையலாம் என்று சான்றளித்தவள் கோதை. குன்றெடுத்த கோபாலன் ஒருவனே ஆண்மகன்; அவனது அடியார் அனைவரும் அவனது காதலில் கட்டுண்ட பெண்டிரே என்பதே கிருஷ்ணப் பிரேமை. இதனை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்துகிறது பின்வரும் திருப்பாவை:
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டிலின்மேல்
மெத்த பஞ்சசயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா...."
வைணவத்தாரோ வேற்று மதத்தினரோ, அன்றி இறை நம்பிக்கை அற்றவரே ஆயினும், கோதையின் தீஞ்சுவைத் தமிழுக்கு அடிமையாகாது இருத்தல் அரிது. திருப்பாவைப் பாடல்கள் அவற்றைப் படிக்கையிலேயே சித்திரப் பண்பு (picturesque quality) பெறுகின்ற பேரானந்தம் அளிப்பவை. இதற்கு எடுத்துக் காட்டாக, மழையைப் பற்றிய இப்பாடலைப் படிக்கையில், வானின்றும் மண்ணில் வீழும் மழையை நேராகவே காண்பது போன்ற ஒரு அனுபவம் பெறலாம்:
ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழிய்அம் தோளுடைப் பத்பநாபன் கையில்
ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்றுஅதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
Comments
Post a Comment