ஆண்டாளால் பெருமை பெற்ற ஆடி பூரம்...

ஆண்டாளால் பெருமை பெற்ற ஆடி பூரம்!!!

வைணவ ஆசார்யர் ஸ்ரீமணவாள மாமுனிகள் தமது உபதேசரத்ன மாலையில் ஆடிப்பூரத்தின் சிறப்பை இவ்வாறு விவரிக்கிறார். "பெரியாழ்வாருடைய மகளாகிய ஆண்டாள் பிறந்த ஆடி மாதம், பூர நட்சத்திரத்தின் சிறப்பு வேறொரு தினத்துக்கு உண்டோ? ஏ மனமே உணர்ந்துபார். ஆண்டாளுக்கு ஒப்பு ஆண்டாளேதான். பூரத்துக்கு ஒப்பு பூர நாள்தான்' என்று ஒப்புமை காண முடியாத சிறப்பு நாள் என்கிறார்.

பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த

திருவாடிப் பூரத்தின் சீர்மை - ஒருநாளைக்கு

உண்டோ மனமே உணர்ந்துபார் ஆண்டாளுக்கு

உண்டாகில் ஒப்புஇதற்கும் உண்டு (23)

- வைணவ ஆசார்யர் ஸ்ரீமணவாள மாமுனிகள் தமது உபதேசரத்ன மாலையில் ஆடிப்பூரத்தின் சிறப்பை இவ்வாறு விவரிக்கிறார். "பெரியாழ்வாருடைய மகளாகிய ஆண்டாள் பிறந்த ஆடி மாதம், பூர நட்சத்திரத்தின் சிறப்பு வேறொரு தினத்துக்கு உண்டோ? ஏ மனமே உணர்ந்துபார். ஆண்டாளுக்கு ஒப்பு ஆண்டாளேதான். பூரத்துக்கு ஒப்பு பூர நாள்தான்' என்று ஒப்புமை காண முடியாத சிறப்பு நாள் என்கிறார்.

சுவாமி தேசிகனும்,

வேயர்புகழ் வில்லிபுத்தூர் ஆடிப்பூரம்

மேன்மேலும் மிகவிளங்க விட்டுசித்தன்

தூயதிரு மகளாய் வந்த ரங்கனார்க்குத்

துழாய்மாலை முடிசூடிக் கொடுத்த மாதே

- என்று சிறப்பிக்கிறார்.

"இன்றோ திருவாடிப்பூரம். எமக்காக அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள். குறையாத வாழ்வு உண்டாகும்படியாக ஸ்ரீவைகுண்டத்திலுள்ள உயர்ந்த அனுபவத்தை அளித்து பெரியாழ்வார்க்கு திருமகளாக இவ்வுலகத்தில் ஆண்டாள் அவதரித்தாள்'' என்று, வைகுந்த லட்சணத்தை பூவுலகு பெறும்படியாக ஆண்டாள் அவதரித்த வைபவத்தை மாமுனிகள் விளக்குகிறார்.

"பொங்கும் பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான் பெரியாழ்வார் என்னும் பெயர்'' என்பது, பெரியாழ்வாருக்கே உரிய சிறப்பு. அந்த அளவுக்கு பெருமாள் மீது பெரியாழ்வாருக்கு பரிவு அதிகம். ஆனால் அந்தப் பெருமாள் மீது பரிவு கொள்வதிலே, பெரியாழ்வாரையும் விஞ்சியவள் ஆண்டாள். காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி... என்ற வகையில், இறைவன் மீது அன்பு கொள்வதில், காதலும் ஒரு கருவியாகக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதற்காக ஆழ்வார்கள் நாயக நாயகி பாவத்தைக் கைக்கொண்டார்கள். பகவானை நாயகனாக்கி, தம்மை நாயகியாக எண்ணிக்கொண்டு, காதல் ரசம் வெளிப்படப் பாடினார்கள். இந்த வகையில் மற்ற ஆழ்வார்களுக்கு இல்லாத தனித் தன்மை ஆண்டாளுக்கு இருக்கிறது. மற்ற ஆழ்வார்கள் ஆண்களாக இருந்தாலும், தங்கள் மீது பெண் தன்மை ஏறியதாக எண்ணிப் பாடினார்கள். ஆனால், ஆண்டாள் விஷயத்தில் அப்படி இல்லை.

"ஜன்ம ஸித்த ஸ்திரீத்வம்' என்றபடி, பிறப்பிலேயே பெண்ணாகப் பிறந்தாள். இயல்பாகவே பெண் தன்மை கொண்டிருந்தாள். பெண்ணுக்கே உரிய காதல் மனதுடன் கண்ணனை நினைந்து பாடினாள். அவ்வகையில், ஆழ்வார்கள்தன் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய், பிஞ்சாய்ப் பழுத்தாள் ஆண்டாள் என்றார் மணவாள மாமுனிகள்.

கோதா என்றால், மாலை என்பது பொருள். ஆண்டாளே சூடிக் கொடுத்த சுடர்க் கொடி ஆனாள். மாலையாகிற தமிழை பெருமானுக்குச் சூட்டி அழகு பார்த்தாள். பூமாலையும் பாமாலையும் கொண்டு தமிழ் மாலை சூட்டினாள். பெரியாழ்வாரின் குலத்துக்கு மேலும் பெருமை சேர்ப்பதற்காகவே அவதரித்தவள் ஆண்டாள். நந்தவனம் அமைத்து, மாலை கட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் வடபெருங் கோயிலுடையானுக்குச் சூட்டி அழகு பார்த்தவர் பெரியாழ்வார். அவர் வழியில் அந்த மாலைகளை, தான் சூடி அழகு பார்த்து, பெருமானுக்கு சமர்ப்பித்தவள் - இந்த சூடிக் கொடுத்த சுடர்க்கொடி.

"மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்...'' என்று நாச்சியார் திருமொழியில் சொன்னபடி, "மனிதர் எவருக்கும் வாழ்க்கைப்பட மாட்டேன் அந்த தெய்வத்துக்கே வாழ்க்கைப்படுவேன்'' என்பது ஆண்டாளின் ஒரே குறிக்கோள். ""ஸ்ரீமந் நாராயணனே திருவரங்கநாதனாக இருக்கிறான். அவனே கண்ணனாக அவதரித்தான். அந்தக் கண்ணனுக்கே வாழ்க்கைப் படுவோம்'' என்று இருந்தாள். இந்த உறுதி அவளுக்கு வரக் காரணம், பெரியாழ்வார் சொல்லிக் கொடுத்த கதைகள். பகவானின் அவதார குணங்களை, மகிமைகளை அவர் ஆண்டாளுக்குச் சொல்லிக் கொடுத்தார். அவனே பரதெய்வம் என்பதைப் புரிய வைத்தார். அது புரிந்தவுடன், இந்த உலகுக்கு யார் காரணமோ, எவன் படைத்துக் காப்பவனோ, எவன் நமக்காகவே காதிருக்கிறானோ, எவன் ஒருவனாலே மோட்சம் கிட்டுமோ அவனைத் தவிர வேறு எவர் மீதும் சிந்தையைச் செலுத்த மாட்டோம்... திருவரங்கனுக்கே ஆட்பட்டிருப்போம் என்று மனதிலே உறுதி கொண்டாள் ஆண்டாள்.

இப்படி ஒரு நிலையை ஆண்டாளுக்கு ஏற்படுத்தத்தானே பெருமாளும் ஆண்டாளை அவதரிக்க வைத்தார். இந்தப் பிரபந்தங்களைப் பாட வைத்தார். பகவானை விட்டுப் பிரிவு, துடிப்பு, விரக தாபம் ஆகியவை ஏற்பட, அந்த தாபத்துடன் தனக்குள் இருக்கும் தாபத்தை தீர்த்துக் கொள்ளவே நாச்சியார் திருமொழியைப் பாடினாள் ஆண்டாள்.

அந்த ஆண்டாள் பிறந்த ஆடிப் பூரத்துக்கும் திருவில்லிபுத்தூருக்கும் குறிப்பாக அந்த நந்தவனத்துக்கும் ஒரு மகிமை உண்டு. ஆடிப்பூர நாயகி ஆண்டாள் பாடிய பாசுரங்களான, வேதம் அனைத்துக்கும் வித்தாகின்ற கோதை தமிழைப் படித்தாலும் கேட்டாலும், அது நம் பாதகங்கள் தீர்க்கும்; பரமனடி காட்டும்.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்