கேரளபுத்திரர்
சங்க இலக்கியங்கள் யாவும் சேர நாட்டை சேர நாடு என்றும் அதன் வேந்தர்களை சேரர் என்றும் சேரலரென்றும் குறிக்கின்றன.கிரேக்க நாட்டு வாணிகர் மெகஸ்தனிஸும் சேரமான் என்றே குறிப்பிடுகிறார்.ஆனால் அசோகரின் கல்வெட்டுக்களில் கேரளபுத்திரர் என உள்ளது.ஆனால் அம்மொழியில் சேரளபுத்திரர் எனவும் படிக்கும் படியாக அமைந்துள்ளது.கேரளர் என்ற வழக்குச்சொல் கி பி 8 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டிருக்கலாம்.வேதகாலத்துக்குப்பின் வந்த வட மொழியாளர் தங்கள் மொழிக்கேற்றாற்போல் மாற்றிக்கொண்டனர்........................ஐப்பசி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம். சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்தநாளாகவும் வாமணன் அவதரித்ததும் அன்றுதான் எனவும் குறிப்புகள் உள்ளன. பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைக்காஞ்சியில் பாண்டிய மக்கள் பத்து நாட்களாக எவ்வாறு கொண்டாடினார்கள் என மாங்குடி மருதனார் விவரிக்கிறார்.
“கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார்
மாயோன் மேய ஓண நன் நாள்
கோணம் தின்ற வடு வாழ் முகத்த
சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை
மறம் கொள் சேரி மாறுபொரு செருவின்
மாறாது உற்ற வடு படு நெற்றி
சுரும்பார் கண்ணி பெரும் புகல் மறவர்
கடு களிறு ஓட்டலின் காணூநர் இட்ட
நெடுகரை காழகம் நிலம் பரல் உறுப்ப
கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர…" - மதுரைக் காஞ்சி (அடிகள் 590 முதல் 599 வரை)
நாலாயிர திவ்யபிரபந்தத்தில் பெரியாழ்வார் பரம்பரையாகத் திருமாலுக்கு தொண்டுசெய்வதையும் திருவோண நன்னாளில் நரசிம்ம அவதாரமெடுத்து இரணியனை அழித்தவனை நம் துன்பங்கள் போகப் பல்லாண்டு வாழ்த்துவமே
“எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில்
அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே” - பெரியாழ்வார் திருமொழி 6
தேவாரத்தில் சம்பந்தர் ஓணம் கபலிசரத்தில் (மயிலை) எவ்வாறு கொண்டாடப்பட்டது என்று விளக்குகிறார்
“மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்” - திருஞானசம்பந்தர், தேவாரம் 503, திருமறை 2
இன்று அத்திருவிழா தென் தமிழகத்திலும் கோவில்களோடும் நின்றுவிட்டது.......................................... சேரன் ஆட்சி செய்த கேரளத்தில் ஓணம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
10 நாள் திருவிழா
கொல்லவர்ஷம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் விழா கொண்டாடப்படுகிறது. பருவ மழைக் காலம் முடிந்ததும் எங்கும் பசுமையும் ஈரமும் நிறைந்திருக்கும் கேரளாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் கொண்டாடப்படுகிறது .கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இதைக் கேரளாவின் "அறுவடைத் திருநாள்" என்றும் அழைப்பர். மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்கள் ஓணமாகக் கொண்டாடப்படுகிறது. ஓணம் ஓராயிரம் ஆண்டுகளாகக் கேரளாவில் கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கியமான பண்டிகையென (கி.பி 861 தேதியிட்டுக் கிடைத்த தாமிரத்தகட்டில்) ஓணம் பண்டிகைபற்றிப் பொறிக்கப்பட்டுள்ளது. ஓணம் திருநாள் கொண்டாடப்படும் 10 நாட்களும் மக்கள் அதிகாலையிலே எழுந்து குளித்து வழிபாட்டில் ஈடுபடுவர். கசவு என்று சொல்லக்கூடிய சுத்தமான வெண்ணிற ஆடை உடுத்துவர். வீட்டுப் பெண்கள் வீட்டின் முன்பு 10 நாட்களும் தொடர்ந்து பூக்களினாலான கோலங்கள் இட்டு ஆடிப்பாடி மகிழ்வர். நடைபெறும் திருவிழாவில், ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனி பெயர் கொடுத்துக் கொண்டாடுகிறார்கள். ஓணம் பண்டிகையின் முதல் நாள் அத்தம் , இரண்டாம் நாள் சித்திரா, மூன்றாம் நாள் சுவாதி என்றும் அழைக்கப்படும். அன்று மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். நான்காம் நாளான விசாகத்தில், ஒன்பது சுவைகளில் உணவு தயார் செய்யப்படுகிறது. குறைந்த பட்சம் 64 வகையான உணவு வகை இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும். இவ்வுணவினை ஓண சாத்யா என அழைப்பர். ஐந்தாம் நாள் அனுஷம் (அனிளம்) எனப்படும். அன்று, கேரளாவின் பாரம்பரியமான படகுப்போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் பங்கு பெறுவோர் வஞ்சிப்பாட்டு என்ற பாடலைப் பாடிக்கொண்டு படகைச் செலுத்துவது இதன் சிறப்பம்சம். ஆறாம் நாள் திருக்கேட்டை(திரிக்கேட்டா) , ஏழாம் நாள் மூலம். எட்டாம் நாள் பூராடம். ஒன்பதாம் நாள் உத்திராடம் என்று அழைக்கப்படும். பத்தாம் நாள் திருவோணம் என்ற கொண்டாட்டத்துடன் ஓணத் திருவிழா முடிவடைகிறது.
Comments
Post a Comment