பம்பாய் கலகம்சுதந்திரப்போர்------பம்பாய் கலகம் (Bombay Mutiny) அல்லது வேந்திய இந்தியக் கடற்படைக் கலகம் (Royal Indian Navy Mutiny) என்பது பிரித்தானிய இந்தியாவின் கடற்படையில் பணிபுரிந்த இந்திய மாலுமிகள் பெப்ரவரி 18-20, 1946 காலகட்டத்தில் நடத்திய முழு வேலைநிறுத்தம் மற்றும் கலகத்தைக் குறிக்கிறது. மும்பை கடற்படைத் தளத்தில் தொடங்கிய கலகம் விரைவில் பிற கடற்படைத் தளங்களுக்கும் கப்பல்களுக்கும் பரவியது. 78 கப்பல்கள் மற்றும் 20 கடற்கரைத் தளங்களைச் சேர்ந்த சுமார் 20,000 இந்திய மாலுமிகள் இக்கலகத்தில் ஈடுபட்டனர். மூன்று நாட்களில் கலகம் பிரித்தானியப் படைத்துறையால் அடக்கப்பட்டு விட்டாலும், இந்தியாவுக்கு விடுதலை வழங்க வேண்டும் என்று பிரித்தானியர்கள் முடிவு செய்ய இக்கலகம் முக்கியத் தூண்டுகோலாக இருந்தது.

இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் சுபாஷ் சந்திர போசின் இந்திய தேசிய ராணுவத்தில் பணிபுரிந்து கைது செய்யப்பட்ட இந்திய போர்க்கைதிகள் சிலர் மீது பிரித்தானிய அரசு வழக்கு தொடுத்தது. பிரித்தானியப் பேரரசருக்கு எதிராகப் போர் புரிந்ததாக தேச துரோக மற்றும் அரச துரோகக் குற்றம் சாட்டப்பட்ட அக்கைதிகள் சார்பில் ஜவகர்லால் நேரு போன்றோர் வழங்குரைஞர்களாகச் செயல்பட்டனர். இவ்வழக்குகள் இந்தியாவெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. இந்திய மக்கள் அக்கைதிகளை புரட்சியாளர்களாகவும் விடுதலை வீரர்களாகவும் கருதியதால் பிரித்தானிய அரசின் மீது கடும் அதிருப்தி கொண்டனர். இந்த வெறுப்புணர்வு பிரித்தானிய இந்தியாவின் படைப்பிரிவுகளிலும் பரவியது. முன்னரே தங்களது வேலைச்சூழலில் அதிருப்தி கொண்டிருந்த இந்திய வீரர்கள் மேலும் கோபம் கொண்டனர். ஜனவரி 1946 இல் மும்பை நகரில் தானே பகுதியில் அமைந்திருந்த எச்.எம்.ஐ.எசு அக்பர் பயிற்சித் தளத்தில் வீரர்களுக்கு கொடுக்கப்பட்டத் தரக்குறைவான உணவு மீது அவர்கள் அதிருப்தி கொண்டது, கலகத்துக்கு உடனடிக் காரணமாக அமைந்தது.

பெப்ரவரி 18ம் தேதி இந்திய மாலுமிகளின் கலகம் வெளிப்படையாக வெடித்தது. மும்பையில் நிறுத்தப்பட்டிருந்த சில கப்பல்களும் கடற்படைத் தளங்களும் கலகக்காரர்களின் கட்டுப்பாட்டில் வந்தன. கராச்சி, விசாகப்பட்டினம், கொச்சி போன்ற கடற்படைத் தளங்களுக்கும் விரைவில் கலகம் பரவியது. கலகக்காரர்கள் கலகத்தை ஒருங்கிணைக்க ஒரு நடுவண் வேலைநிறுத்தக் குழுவை அமைத்தனர். அவர்களுக்கு ஆதரவாக மும்பை நகரத்தில் ஒரு நாள் பொது வேலை நிறுத்தமும் கடைபிடிக்கப்பட்டது. பிரித்தானிய கடற்படைக் கொடி கப்பல்களிலிருந்து கடற்படைத் தளங்களிலிருந்தும் அகற்றப்பட்டு மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. பிரித்தானிய அதிகாரிகள் பல இடங்களில் தாக்கப்பட்டனர்.

பெப்ரவரி 19ம் தேதி பிரித்தானிய ஆட்சியாளர்கள் கலகத்தை அடக்குவதற்கான முயற்சிகளைத் தொடங்கினர். கலகக்காரர்கள் கட்டுப்பாட்டிலிருந்த கப்பல்களும் தளங்களும் ஒன்றன்பின் ஒன்றாக சுற்றிவளைக்கப்பட்டு தாக்கப்பட்டன. கலகத்தால் சட்ட ஒழுங்கும், சமூகக் கட்டுப்பாடும் சீர்குலைந்து போகுமெனக் கருதிய இந்திய தேசிய காங்கிரசு மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகள் கலகத்துக்கு வெளிப்படையாக ஆதரவளிக்க மறுத்து விட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போன்ற ஒரு சில கட்சிகளே வெளிப்படையாக கலகக்காரர்களுக்கு ஆதரவளித்தன. பெப்ரவரி 20ம் தேதி கலகம் முற்றிலுமாக அடக்கப்பட்டு கலகக்காரர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

பம்பாய் கலகம் தோல்வியில் முடிவடைந்தாலும் காலனிய அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 1942ம் ஆண்டு நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு கிளர்ச்சியை இந்தியப் படைகளின் துணை கொண்டே பிரித்தானிய அரசு அடக்கியிருந்தது. இந்தியப் படைகளிடையே விடுதலை இயக்கத்துக்கு ஆதரவு பெருகி விட்டதால், இனியொரு முறை பெரும் கிளர்ச்சி ஏற்பட்டால் முன்போல செயல்படுவார்கள் என நம்ப முடியாது என்று பிரித்தானிய ஆட்சியாளர்கள் உணர்ந்தனர். இவ்வாறு இந்தியர்களுக்கு தன்னாட்சி வழங்க இக்கலகம் ஒரு தூண்டுகோலாக அமைந்தது.

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்