கரிகாலன் காலத்தில் காவிரிப்பூம்பட்டினம்

கரிகாலன் காலத்தில் காவிரிப்பூம்பட்டினம்-----ப‌ட‌கிலே உப்பைக் கொண்டு வ‌ந்து நெல்லுக்கு அதை விற்று அந்த‌ப் ப‌ட‌கில் நெல்லை நிர‌ப்பிக் கொள்கிறார்க‌ள் ப‌ர‌த‌வ‌ர்க‌ள். அந்த‌ப் ப‌ட‌குக‌ளைக் க‌ழிக‌ளின் ப‌க்க‌த்தில் குதிரைக‌ளைப் போல‌க் க‌ட்டியிருக்கிறார்க‌ள். ந‌க‌ர‌த்துக்குப் புற‌ம்பே தோப்புக்க‌ளும் பூஞ்சோலைக‌ளும் செறிந்திருக்கின்ற‌ன‌. வ‌லிமையைப் பெற்ற‌ க‌ரைக‌ளை யுடைய‌ ந‌ன்னீர்ப் பொய்கைக‌ள் இருக்கின்ற‌ன‌. அந்த‌ப் பொய்கைக‌ளில் ப‌ல‌ நிற‌ம் பொருந்திய‌ ம‌ல‌ர்க‌ள் ம‌ல‌ர்கின்ற‌ன‌. அவ‌ற்றுள் மிக‌ப் பெரிய‌ நீர்நிலைக‌ள் இர‌ண்டு உண்டு. அவ‌ற்றை இரு காம‌த் திணைஏரி என்று சொல்லுவார்க‌ள்.

    இந்த ஏரிகளுக்கு அப்பால் பலமான கதவுகளையுடைய மதில் ஓங்கி நிற்கிறது. அந்தக் கதவுகளில் சோழ அரசனுடைய புலிச்சின்னத்தைப் பொறித்திருக்கிறார்கள்.

    நகரத்துக்குள்ளே புகுந்தால் முதலிலே கண்ணில் படுவது அன்னதானம் செய்யும் அறச்சாலை. அங்கே சோற்றை வடித்த கஞ்சி ஆற்றைப்போல ஓடுகிறது. அந்தக் கஞ்சியைக் குடிக்க வரும் காளை மாடுகள் தம்முள்ளே சண்டை போடுகின்றன. அதனால் கஞ்சி பாயும் இடம் சேறாகிவிடுகிறது. பிறகு அங்கே வண்டிகள் செல்வதனால் சேறு காய்ந்து புழுதி பறக்கிறது. அருகில் உள்ள மாதங்களிலே அந்தப் புழுதி படிகிறது.

    இந்த அறச்சாலைக்கு அருகே பசுமாடுகளையும் எருதுகளையும் பாதுகாக்கும் சாலைகள் இருக்கின்றன. அவற்றினுள்ளே கேணிகள் உள்ளன. அப்பால் தவம செய்பவர்களின் மடங்களும் முனிவர்கள் வேள்வி செய்யும் சாலைகளும் காலி கோயிலும் உள்ள இலமரச் சோலைகளைக் காணலாம்.

    கடற்கரைப் பக்கத்தில் பரதவர் மக்கள் தமக்கு விருப்பமான ஊனைத் தின்றுவிட்டு அடப்பம் பூவைத் தலையிலே செருகிக்கொண்டு ஆட்டை முட்டவிட்டு விளையாடுகிறார்கள். காடை கவுதாரி கலைச் சண்டையிடச் செய்து பார்க்கிறார்கள். ஒருவரோடு ஒருவர் மற்போரும் வாட்போரும் செய்து விளையாட்டு அயர்கிரார்கள்.

    பரதவர் தெருவில் உறைக்கிணறுகள் இருக்கின்றன. பன்றிகளையும் கோழிகளையும் அவர்கள் வளர்கிறார்கள். அமாவாசை நாளிலும் பௌர்ணமி யன்றும் கடலில் பரதவர் மீன் பிடிக்கப் போகாமல் தம்முடைய தெய்வமாகிய வருணனுக்குப் பூசை போடுகிறார்கள். தம் மனைவிமாருடன் சேர்ந்து மீனின் கொம்பை நட்டு அதில் வருணனை எழுந் தருளுவித்து வழிபடுகிறார்கள். கூதாளம் பூமாலையையும் தாழம்பூவையும் சூடிப் பணங்கள்ளை உண்டு விளையாடுகிறார்கள். காவிரி கடலோடு கலக்குமிடத்தில் தீவினை போகக் கடலாடிப் பிறகு நல்ல நீரில் குளிக்கிறார்கள்.

    பெரிய வீதிகளில் பல மாடங்கள் இருக்கின்றன. வானுலகத்தைப் போன்ற இன்பங்களை உடையவை அவை. அங்குள்ள மகளிர் இரவில் இனிய பாடலைக் கேட்டும், நாடகங்களைக் கண்டும், நிலாவிலே இருந்து மகிழ்ந்தும், கள்ளை அருந்தாமல் உயர்ந்த மதுபானங்களை அருந்தியும், பட்டைக் களைந்துவிட்டு மிக நுட்பமான துகிலை உடுத்தும் தம் கணவருடன் மகிழ்கின்றனர். அப்படியே அவர்கள் தூங்கிப் போகிறார்கள். மாடங்களில் ஏற்றிய விளக்குகள் விடியற்காலத்திலும் சுடர்விட்டு எரிகின்றன. இரவிலே மீன் வேட்டைக்காகச் சென்ற பரதவர்கள் அந்த விளக்கை ஒன்று இரண்டு என்று எண்ணுகிறார்கள்.

    பரதவர் வாழும் அகன்ற தெருவிலே பண்ட சாலை இருக்கிறது. அங்கே கடுமையான காவலை அமைத்திருக்கிறார்கள். உள் நாட்டிலிருந்து வரும் பண்டங்களை அங்கே குவித்திருக்கிறார்கள். அவற்றிற்கெல்லாம் புலிப்பொறியையிட்டுச் சுங்கம் வாங்கிக் கப்பல்களில் வெளிநாட்டுக்கு அனுப்புகிறார்கள்.

    அப்படியே கப்பலில் வெளிநாட்டிலிருந்து வரும் பண்டங்களுக்கும் முத்திரையிட்டுச் சுங்கம் வாங்குகிறார்கள். இந்தப் பண்டசாலையின் முற்றத்தே பல பண்டங்களையுடைய மூட்டைகள் மலையைப் போலக் குவிந்து கிடக்கின்றன. அவற்றின்மேல் நாயும் ஆடும் ஏறி விளையாடுகின்றன. சுங்க வரி தண்டும் அதிகாரிகள் நேர்மையுடன் தங்கள் கடமைகளைச் செய்கிறார்கள். அவர்கள் சிறிதும் சோர்வில்லாமல் வேலை செய்கிறார்கள். அளந்தறியாத பல பண்டங்கள் அங்கே கிடக்கின்றன. ஏவலர்கள் அவற்றைக் கப்பலிலிருந்து இறக்குகிறார்கள்; பலவற்றைக் கப்பலில் ஏற்றுகிறார்கள்.

    திருமகள் களிநடம் புரியும் அங்காடி வீதிகளிலே உயர்ந்த மாடங்கள் இருக்கின்றன. திண்ணைகளும் படிக்கட்டுகளும் இடைகழியும் பல கட்டுகளும் உடைய மாடங்கள் அவை. அங்கே அழகிய மகளிர் கடவுளை வணங்குகிறார்கள். குழல் அகவுகின்றது. யாழ் முரலுகின்றது. முழவும் முரசும் முழங்குகின்றன. எப்போதும் விழா அறாத ஆவண வீதி அது. அங்கே பல வகையான கொடிகள் அசைகின்றன.

    கடவுளைத் தொழும் கோயில்களில் ஒரு வகையான கொடிகள் அசைகின்றன. இன்ன இன்ன பண்டங்கள் இங்கே விற்ப்பெறும் என்பதற்கு அடையாளமாக நட்ட கொடிகள் அங்கங்கே இருக்கின்றன. பல நூல்களைக் கற்றும் கேட்டும் கரை கண்ட அறிவுடைய நல்லாசிரியர், தம்மோடு யாரேனும் வாதம் செய்வாருண்டானால் வருக என்று தம் வீட்டு வாயிலில் நாட்டிய கொடிகள் ஒருசார் அசைகின்றன. கடற்பக்கத்தைப் பார்த்தால் கப்பல்களில் உள்ள கூம்புகளில் கொடிகள் பறக்கின்றன. கள் விற்கும் இடத்தில் அதைத் குறிக்கத் தனியே கொடியை நட்டிருக்கிறார்கள்.

    இப்படிப் பல கொடிகளும் கலந்து பல நிறங்களோடு விளங்கும் பட்டினத்தில் கப்பலில் வந்த அழகான குதிரைகள் ஒருபக்கம் நிற்கின்றன. தமிழ் நாட்டிலிருந்து பிற நாட்டுக்குப் போகவேண்டிய மிளகு மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப் பெற்றிருக்கிறது. இமயமலையிலே பிறந்த மணியும் பொன்னும் ஓரிடத்தில் விற்பனையாகின்றன. மேற்கு மலையிலே விளைந்த சந்தனமும் அகிலும் ஓரிடத்தில் கொட்டிக் கிடக்கின்றன. பாண்டி நாட்டுக் கடலிலே எடுத்த முத்தும் பவளமும் ஓரிடத்தில் பளபளக்கின்றன. கங்கைக்கரையிலே விளைத்தபண்டம் ஒரு பக்கம்; காவிரிக்கரையிலே விளைத்த பொருள் ஒரு பக்கம்; ஈழ நாடாகிய இலங்கையிலிருந்து வந்த உணவுப் பொருள் ஒருசார்; காழகமாகிய பர்மாவிலிருந்து வந்த பண்டம் ஒரு சார்.

    இவ்வளவு பண்டங்கள் நிறைந்து கிடக்கும் ஆவணத்தில் நேர்மையான முறையில் வணிகர்கள் வியாபாரம் செய்கிறார்கள். வேளாளர்கள் நடுநிலையோடு வாழ்கின்றனர். கொலையும் களவும் இன்றி மக்கள் வாழ்கிறார்கள். பசுமாடுகளைப் பாதுகாக்கிறார்கள். புண்ணியச் செயல்களை இடையீடின்றிச் செய்து வருகிறார்கள்.

    எங்கே பார்த்தாலும் வாணிகம். உலகில் உள்ள பண்டங்கள் அத்தனையும் இந்த அங்காடியிலே காணலாம். அதுமாத்திரம் அன்று. உலகத்து மொழிகள் பலவற்றையும் இங்கே கேட்கலாம். அந்த அந்த நாடுகளிலிருந்து வந்து செல்லும் மக்கள் பலர் இங்கே உலவுகிறார்கள். அவர்கள் தங்கள் மொழிகளிலே பேசிக்கொள்கிறார்கள்.

    எப்போதும் விழா நிறைந்த வீதியாக விளங்குகிறது ஆவண வீதி.

    காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பை எண்ணி முடிவு காண முடியுமா?...பட்டினப்பாலைப

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்