ஆதித்த சோழன்

ஆதித்த சோழன் (கி.பி 871 - 907), பரகேசரி விசயாலய சோழனின் மகன். இவனும் தன் தந்தையுடன் திருப்புறப்பிய போரில் பங்குபற்றினான். பல்லவ மன்னன் அபராசித வர்மனை கொன்று தொண்டை நாட்டை கைப்பற்றினான். இவன் காலத்தில் சோழ அரசு சிற்றரசு நிலையில் இருந்து விடுபட எத்தனித்தது.

மேற்கே சகயாத்திரிமலை முதல் கிழக்கே கீழ்க்கடல் வரை காவிரியின் இரு கரைகளிலும் எண்ணற்ற சிவாலயங்களைக் கட்டுவித்தான் ஆதித்தன் என்று சுந்தர சோழன் காலத்து அன்பில் செப்பேடுகள் கூறுகின்றன. ஆதித்தன் காலத்தில் மண்டளிகள் பல கற்றளிகளாக மாற்றியமைக்கப்பட்டன என்றும் இவன் காலத்தில் சுமார் 50 கோயில்கள் வரை கட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருதப்படுகின்றது.

கல்வெட்டு ஆதாரங்கள்
பலம் மிக்க பல்லவ மன்னன் அபராசித வர்மனை தோற்கடித்து, அவனது ஆட்சியைக் கைப்பற்றினான் என்று திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன. கோதண்டராமன் என்னும் சிறப்புப் பெயரை இவனுக்கு இடுவதோடு, ஒரு உயர்ந்த யானையின்மீது அமர்ந்திருந்த பல்லவமன்னன் மீது பாய்ந்து அவனைக்கொன்றான் என்றும் கன்னியாக்குமரிக் கல்வெட்டு கூறுகிறது. தில்லைஸ்தானம் என்னுமிடத்திலுள்ள ஒரு கல்வெட்டு இராஜகேசரி தன் இராஜ்ஜியத்தை, தொண்டைநாடு வரை பரவச்செய்தான் என தெளிவாகக் கூறுகிறது. இதிலிருந்து ஆதித்தன் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றி அதன்மூலம் பல்லவர்களின் ஆட்சியை ஒரு முடிவிற்கு கொண்டுவந்ததோடு, சோழ இராச்சியத்தை இராஷ்டிரகூடர்களின் எல்லைவரை பரப்பினான் என்றே கூற வேண்டும். இதை வைத்து இவன் கி.பி. 890-ல் தான் பல்லவர்களைத் தோல்வியுறச்செய்து, அந்நாட்டைக் கைப்பற்றியிருத்தல் வேண்டும்.

புதிதாகக் கைப்பற்றப்பட்ட தொண்டை மண்டலப் பகுதியில் அமைதியை ஏற்படுத்த சில ஆண்டுகள் தேவைப்பட்டதோடு, பல புதிய படையெடுப்புக்களுக்கும் காரணமாயிற்று. இவ்வெற்றிகளில் கங்க மன்னன் உதவியிருக்கக்கூடும் என்றும் தெரிகிறது, இது எவ்வாறு இருப்பினும் விரைவிலேயே கங்கர் மன்னன், ஆதித்தன் தலைமையை ஏற்றான். தஞ்சாவூர் பட்டணத்தில் முடி சூட்டிக்கொண்ட பின் ஆதித்தன் கொங்கு தேசத்திற்கு வந்து, இந்நாட்டை வெற்றிகொண்டு, தன்னாட்டுடன் சேர்த்து ஆட்சிசெய்தான் என்று கொங்கு தேச ராஜாக்கள் என்னும் குறிப்பேடு கூறுகிறது. இவன் காலத்தில் வாழ்ந்த சேரமன்னன் தாணுரவி என்பவனுடன் ஆதித்தன் நெருங்கிய உறவு கொண்டிருந்தான் என்று தில்லைத்தானத்திலுள்ள ஆண்டு குறிப்பிடாத ஒரு கல்வெட்டு கூறுகிறது.

மறைவு
சித்தூர் மாவட்டம் காளத்தியின் அருகேயுள்ள தொண்டைமானாடு என்னுமிடத்தில் ஆதித்தன் இறந்தான். இவனது மகன் பராந்தகன், இறந்த இடத்தில் கோதண்ட இராமேசுவரம் என்றும் ஆதித்தீசுவரம் என்றும் அழைக்கப்பட்ட கோயிலை எடுப்பித்தான். பராந்தகனைத்தவிர, ஆதித்தனுக்கு கன்னரதேவர் என்ற மற்றொரு மகனும் இருந்தான்.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்