சோலைமலைக் கள்ளன் (மாயோன் - கள்ளழகர் )
சோலைமலைக் கள்ளன் (மாயோன் - கள்ளழகர் )
===================================================
கள்ளர் நாட்டிலுள்ள அழகர்மலையில் கோயில்கொண்டுள்ள கள்ளழகர், கள்ளர் இன ஆண்மகனைபோல வேடமணிந்து வருகிறார். கைகளில் சங்கு, சக்கரம், தலையில் கீரிடம், என காட்சியளிக்கும் அழகர், கள்ளர் மரபினரின் ஆசாரங்களுக்கு கேற்றவாறு கைகொன்றாக வளத்தடி எனப்படும் வளரித்தடி, (கள்ளரின் பழைய போர்க்கருவிகளான வளைதடியும் குறுந்தடியும்) சாட்டை போன்ற கம்பு, கள்ளர் இன ஆண்மகன் அக்காலத்தில் இடுகிற கொண்டை, தலையில் உருமால், காதுகளில் வண்டிகடுக்கன் (தொங்கும் காது மடல்களை உடையவராக) என அணிந்து மதுரை நோக்கி வருகிறார். (கள்ளழகர் கோயில் பார்ப்பனர்கள் கறுப்பானவர்களாக இருக்க என்ன காரணமோ)
.
மேல நாட்டு கள்ளர்கள் அழகர் கோயில் கள்ளழகரை வழிப்படுகின்றவர்கள். கள்ளழகர் கோயில் தேர்திருவிழாக்களில் பட்டுப் பரிவட்டம் முதல் மரியாதைகள் இவர்களுக்குண்டு நரசிங்கன் பட்டி அம்பலக்காரர்கள் பரம்பரையாகக் கள்ளழகர் தேவஸ்தானம் தர்மகர்த்தர்களாக இருந்து வருகின்றார்கள். மதுரை, தல்லாகுளத்தில் கள்ளழகர்க்குச் சிறந்த மண்டகப்படி இவர்களால் நடைபெற்று வருகிறது.கள்ளழகர் கோயில் தேர்த்திருவிழாவின் போது தேரினை இழுக்கும் உரிமை பெற்றவர்கள்.
அழகருக்கு அலங்காநல்லூரில்தான் அலங்காரம் நடைபெற்றது. அதன் காரணமாகவே அந்த ஊருக்கு அலங்காரநல்லூர் என்ற பெயர் ஏற்பட்டு, தற்போது அலங்காநல்லூர் என்று மருவிவிட்டது'.
.
இவனை மாயோன் என்றுதான் 'தொல்'காப்பியம் அழைக்கிறது. மாயோன் என்றால் கள்வன்தானே! கண்ணன் கள்வன் என்று எல்லோரும் மாய்ந்து, மாய்ந்து பாட்டு எழுதிவிட்டனர். அவன் சித்சோரன் (நெஞ்சக் கள்வன்) அதனால் கள்ளழகர். பின்னால் கள்ளர் ஜாதிக்கு குலபதியானதினாலும் கள்ளழகர். ஆண்டாள் மனதைக் கவர்ந்ததினாலும் கள்ளழகர்.
.
சங்ககாலப் பகுதியின் பிற்பகுதியில் தோன்றிய நூல் என்று கருதப்படும் பரிபாடல் 15ஆம் பாடலில் இந்த மலையின் பெருமை விரிவாகப் பேசப்படுகிறது. இதனைப் பாடியவர் இளம்பெரு வழுதி. இரண்டாம் நூற்றாண்டிலேயே கள்ளழகர் என்று பரிபாடலில் அழைக்கப்படுகிறார்.
.
கள்ளழகர் மலையைக் குறிக்கும்பெயர்களில் குறிப்பிடத்தக்கவை சில.
திருமாலிருஞ்சோலை
இருங்குன்று
பெரும்பெயர் இருவரை
கேழ் இருங்குன்று
இக் குன்றில் குடிகொண்டுள்ள திருமலால் "கள்" ( கள்ளணி பசுந்துளவு என்பது துளசிப் பூவோடு கூடிய துளசியிலை மாலை) அணிந்த பசுந்துளசியை மாலையாக அணிந்து கொண்டுள்ளதால் கள்ளழகர் எனப்பட்டார்.
.
அருகர் போற்றிய சோலைமலை, என்றும் முருகனுக்கு உரிய திருமலையாகும். பழுமுதிர் சோலைமலையில் அமர்ந்து அருளும் குறிஞ்சிக் கிழவனாகிய குமரனை,
"சூரர் குலம்வென்று வாகை யொடுசென்று
சோலை மலைநின்ற - பெருமாளே"
என்று திருப்புகழ் பாடிற்று.
.
சோலைமலை பழங்காலத்தில் பாண்டியர்க்கு உரிய கோட்டையாகவும் விளங்கிற்று. பாண்டியர் அரசு வீற்றிருந்த தலைநகராகிய மதுரையின் வட கிழக்கே காதவழி தூரத்தில் உள்ளதாய், பத்து மைல் நீளமும், நாற்பது மைல் சுற்றளவும் உடையதாய்த் திகழ அம் மலையைப் பாண்டியர் தம் காவற் கோட்டையாக்கிக் கொண்டனர். மலையத்துவசன் என்ற பாண்டியன் அக் கோட்டையைக் கட்டினான் என்பர். அந் நாளிலே கட்டிய உட்கோட்டை, வெளிக் கோட்டை ஆகிய இரண்டும் இன்றும் காணப்படுகின்றன. திண்ணிய மதில் அமைந்த சோலைமலையைக் கண்டு, கண்ணும் மனமும் குளிர்ந்தார் பெரியாழ்வார்; "மதில் சூழ் சோலைமலைக்கு அரசே" என்று பாடினார்.
.
இத்தகைய படை வீட்டையும் கோட்டையையும் காத்து நின்றான் ஒரு வீரன். முறுக்கிய மீசையும், தருக்கிய விழியும் உடைய அவ் வீரன் இப்பொழுது காவல் தெய்வமாய். பதினெட்டாம்படிக் கறுப்பன் என்ற பெயரோடு சோலைமலையிலே காட்சி யளிக்கின்றான். அவனை நினைத்தாலே குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்; படிறுடையார் உள்ளம் பறையடிக்கும். நீதி மன்றத்தில் தீராத வழக்குகளும் கறுப்பையன் படிக்கட்டில் தீர்ந்துவிடும்.
.
கறுப்பன் கள்ளர்களுக்கு உரிய தெய்வம். அதிலும் மேலூரைச் சார்ந்த கள்ளர்களுக்கு அவர் மிகச் சிறப்பான உரிமை உடையவர். அப்பகுதியில் கறுப்பணசாமி கோயிலே கள்ளர்கள் பஞ்சாயத்து அவை கூடும் சாவடியாகும். கள்ளர் அல்லது குயவர் சாதியைச் சேர்ந்தவர்களே அவருக்குப் பூசாரியாக இருப்பர்.
.
முருகனுக் குகந்த படைவீட்டிலே - கறுப்பையன் காக்கும் கோட்டை மலையிலே - ஒரு கள்ளனும் நெடுங்காலமாக உள்ளான்! அன்று இன்று எனாதபடி, என்றும் அவன் உள்ளான் என்று ஆன்றோர் கூறுவர். கள்ளனும் அவனே; காப்பானும் அவனே! ஆதியும் அந்தமும் அவனே! ஆதியும் அவனே; சோதியும் அவனே! சோலைமலை அரசனும் அவனே! அம் மாயக் கள்வனைக் கண்டு கொண்டார் ஞானக் கவிஞராகிய நம்மாழ்வார்.
"வஞ்சக் கள்வன் மாமாயன்
மாயக் கவியாய் வந்துஎன்
நெஞ்சம் உயிரும் அவையுண்டு
தானே யாகி நிறைந்தானே"
என்று பாடினார்; பரவினார்; பரவசமாயினார்; உள்ளம் கவர்ந்த கள்வனை நினைந்து உருகினார்; அவன் அழகைக் கண்ணாற் பருகினார்; இன்ப வாரியில் மூழ்கினார்.
இங்ஙனம் ஆழ்வாரது நெஞ்சிலே புகுந்து திருவாய்மொழி பாடுவித்த வஞ்சக் கள்வனே சோலை மலையில் நின்று அருளும் திருமால். அவர் பெருமையால் சோலைமலை, 'திருமால் இருஞ்சோலை' என்னும் பெயர் பெற்றது.
"அருகரோடு புத்தரும் அமர்ந்தருளும் சோலை
மருகனோடு மாமனும் மகிழ்ந்துறையும் சோலை
கருமையோடு* வெள்ளையும் கலந்திலங்கும் சோலை
அருமையான சோலைஎங்கள் அழகர்பெருஞ் சோலை"
என்று ஆடிப் பாடினாள் சோலைமலைக் குறவஞ்சி. அச்சோலையிலே கள்ள அழகரைக் காண்பது ஓர் ஆனந்தம்! --- * வெள்ளை - வெள்ளை நிறமுடைய பலதேவன். அவரும் கண்ணனோடு அம் மலையில் காட்சியளித்தார் என்பது பரிபாடலால் விளங்கும்.
.
அழகர் ஆற்றில் இறங்குவது ஏன் என்பதற்கும் , அழகர் பற்றிய சில செவிவழி செய்திகளாக கூறுவது.
அழகர் மலைக்கு 3 கி.மீ. தூரத்தில் உள்ள கள்ளந்திரி கிராமம், கள்ளர்கள் வாழ்ந்த இடம் என்பதால் அப்பெயர் பெற்றது. இப்போதும், கள்ளழகர் இவ்வூரிலிருந்து கள்ளன் வேடம் தரித்து மதுரை நோக்கிப் புறப்படுகிறார். இது ஆண்டு தோறும் நடக்கிற சித்திரைத் திருவிழாவின் ஒரு சடங்காகவே நடத்தப்படுகிறது.
.
அழகர் என்பவர் அப்பகுதியில் வாழ்ந்த கள்ளர் சமுதாய மக்களின் தலைவன் என்றும், இவர் கொரில்லா முறை தாக்குதல்களை நடத்தி கொள்ளையடித்தும்; மாடுகளைக் கவர்ந்தும், மலையில் ஆட்சி நடத்தி வந்தார் என்றும்.
பழைய மதுரை; அதாவது அன்-றைய பாண்டிய நாடு வைகை ஆற்-றுக்குத் தெற்காக இருப்பது மட்டும்தான்! ஆற்றின் வடக்கே இருந்த பகுதிகள் மருத மரங்கள் நிறைந்த பெரும் காடுகளாக விளங்கின. வடபகுதியில் இருந்து மீனாட்சி- சொக்கன் திருக்கல்யாணத்-திற்கு வருகின்ற பெருத்த சீமான்களைத் தடுத்து நிறுத்தி கொள்ளையிடுவது அழகரின் கள்ளர் படை வழக்கமும் ஆகும். கள்ளர் தலைவன் அழகர் குதிரைகளுடன் கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களுடன் வண்டியூர் சென்று தனது வைப்பாட்டியான துலுக்க நாச்சியார் வீட்டில் தங்கியிருப்பதும், பின் பாதுகாப்புடன் மலையேறுவதும், அவர் வழக்கமாயின!
.
பிற்காலத்திலும் அழகர் மலைக் கள்ளர்களை, மதுரை வீரன் வரை போராடிப் பார்த்தும் அவர்களை அடக்கவும், ஒடுக்கவும் முடியாமல் இருந்து வந்துள்ளது. சங்கிலிக் கருப்பன் என்பவர் அழகரின் பின் தோன்றல் ஆவார். பாண்டிய நாட்டு ஆட்சியை நாயக்-கர்கள் கைப்பற்றிக் கொண்டபோது, கள்ளர்களை எதிர்த்து அமைதியான ஓர் ஆட்சியை நடத்த முடியவில்லை. திருமலை நாயக்க்கர் காலத்தில் கள்ளர்களுடன் இணக்கத்துடன் இருந்து பிறகு மதுரை காவல் கள்ளர்களிடம் ஒப்படைக்கப் பட்டது.
.
அப்பன்திருப்பதி, கள்ளந்திரி பகுதிகளில் கள்ளழகர் மலைக்கு திரும்பும் விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி கள்ளழகர் வருகையையொட்டி அப்பன்திருப்பதி, கள்ளந்திரி பகுதிகளிலுள்ள கிராமங்கள் விழாக்கோலம் பூண்டு அந்த பகுதிகளில் உள்ள திருக்கண், மண்டபங்களில் நாடகம், கரகாட்டம், இன்னிசை கச்சேரி என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கள்ளழகர் மலைக்கு திரும்பும் விழா, இந்த பகுதிகளில் முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
.
நன்றி
உயர் திரு. முனிராஜ் வாணாதிராயர்
Comments
Post a Comment