மகுடம் தாங்கிய மன்னாதி மன்னனைபற்றி

👑மகுடம் தாங்கிய மன்னாதி மன்னனைபற்றி  இந்த பதிவு..

 *தாய்ப்பாலில் எரிந்த பெரு உடையார்  கோவில் தீபம்:*

சோழப்பேரரசன் ராஜராஜசோழனின் அரண்மனை. ஒருநாள் மன்னனைப் பார்த்து ‘சோழப்பேரரசே கோவிலுக்காகக் கொடுத்த நன்கொடைகள் ஏராளம் இருந்தாலும், உங்கள் திருமுகத்தில் தீராத கவலை படிந்திருக்கிறதே என்ன காரணம்?’ என்றார் அமைச்சர்.

மன்னர் கண்மூடி யோசித்தார். நெடுங்காற்றை உள்வாங்கி சீராக மூச்சுவிட்டார். கண் திறந்தார். நிதானமான குரலில் பேசத்தொடங்கினார்.

‘சோழப்பேரரசின் அடையாளம் இந்தப்பெருவுடையார் கோவிலின் மூலம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் அழியக்கூடாது என்று தான் கவலைப்படுகிறேன். அரண்மனைகள் தனிச்சொத்து, ஆலயங்கள் மக்கள் சொத்து என்று கருதப்படுமாயின் மக்களுக்கும் இதில் பங்கிருக்க வேண்டும். சோழமண்டலத்தில் கடைக்கோடியில் சிற்றூரில் வாழும் மக்களும் இந்த ஆலயத்தின் பங்குதாரர்களாக மாற்றிவிடும் திட்டத்தைத்தான் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்’ என்றார்.

‘திட்டம் என்ன மன்னா?’ அமைச்சர் கேட்டார்.

‘அதோ அந்தத்திரு விளக்குகள் செல்வந்தர்களின் நேர்த்திக் கடன்களால் எரிகின்றன. தினந்தோறும் கோவில்களில் தீபங்கள் எரிய வேண்டும். அதற்காக ஆடுகளையும், மாடுகளையும் ஏழைகளுக்கு வழங்கப் போகிறேன். அதற்குப்பதிலாக அவர்கள் திரு விளக்குகள் எரிய நெய் தந்தால் மட்டும் போதும். மொத்த வருமானமும் அவர் களுக்கே. அதாவது ஏழையின் அடுப்பும், ஆலயத்தின் திருவிளக்கும் ஒரே திரியில் எரியும். இந்த ஆலயத்தோடு அடித்தட்டு மக்களுக்கு உறவு மேம்படும். இதுதான் என் திட்டம், சரியா?’ என்றார்.

‘மிகச்சரியானது மன்னா’ என்று வணங்கினார்.

அரசன் ஆணை பிறப்பித்தான். ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும். கால்நடைகளை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுங்கள். எந்த நிலை யிலும் நிபந்தனை வழங்காது கட்டுப்பாடு வகுத்து கண்காணியுங்கள் என்றான்.

ஒருநாள் கோவில்களைச் சுற்றி வரும் பொழுது ஒரு கோவிலில் மட்டும் விளக்கு எரியவில்லை. காரணம் கேட்டறிந்தார்.

எவத்தூர் மாராயன் என்பவனுக்கு 42 பசு மாடுகள் வழங்கப்பட்டுள்ளன. அவனுடைய கட்டுப்பாட்டில் எரியவேண்டிய விளக்கு  கடந்த ஏழு நாட்களாக எரியவில்லை என்பதை அறிந்தார்.

‘எவனவன், இறைவன் கட்டளையை நிறைவேற்ற மறுப்பவன். பூட்டுங்கள் தேரை, ஓட்டுங்கள் எவத்தூருக்கு’ என்றான்.

காலி மனையால் சூழப்பட்ட ஒரு குடிசையின் முன் மன்னரின் தேர் நின்றது. ‘பேரரசன் வந்திருக்கிறேன், மாராயா வெளியே வா’  என்று குரல் கொடுத்தார்.
உள்ளே ஒரு பெண்ணின் விசும்பலும் குழந்தையின் அழுகுரலும் கேட்டது.
சற்று நேரத்தில் கதவைத் திறந்து கசங்கிய சேலையும், கலைந்த கூந்தலும், கலங்கிய கண்களுமாய் பெண்ணொருத்தி வெளியே வந்தாள். அவளது இடுப்பில் நாராய் தொங்கிக் கொண்டிருந்தது, சவலை பாய்ந்த குழந்தை ஒன்று. பேரரசரைக் கண்டதும் அஞ்சி நடுங்கி கீழே விழுந்தாள்.

‘எழுந்திரு பெண்ணே! நீ யார்?’

‘நாந்தாங்க மாராயன் பொஞ்சாதி’

‘உன் கணவன் எங்கே?’

‘என் புரு‌ஷனும், ராசா கொடுத்த மாடுகளும் போன மாசம் காவிரி வெள்ளத்தில் ஆத்தோடு போயிருச்சி...’

அவள் சொல்வது மெய்யா என்பது போல திரும்பிப்பார்த்தார். ஆம்! என்று வருத்தத்தோடு தலை அசைத்தனர் பொதுமக்கள்.

‘உனக்காக வருந்துகிறேன். ஆனால் ஒரு கேள்வி. கடந்த மாதம் இறந்தார் என்கிறாய். ஏழு நாட்களுக்கு முன்பு வரை திருவிளக்கு எரிந்திருக்கிறது. கணவனும், மாடுகளும் இறந்தபின் இருபத்து மூன்று நாட்கள் எப்படி நீ விளக்கு எரித்தாய்?’.

அவள் தேம்பித் தேம்பி அழுதாள். இடுப்பில் நழுவிய குழந்தையை மார்போடு கட்டிக்கொண்டு, ‘அதை மட்டும் கேட்காதீர்கள் மன்னா’ என்று கண்கலங்கினாள்.

‘பெண்ணே! அஞ்சாதே உண்மையைச் சொல்’.

‘சொல்கிறேன் மன்னா! புரு‌ஷன் செத்துப் போயிட்டாலும் ராசாவுக்குக் கொடுத்த வாக்கை மீறக்கூடாது பாருங்க. அதனால என்  தாய்ப்பாலை விற்று மூணு ஆளாக்கு நெய் வாங்கி தீபத்தை எரிய வச்சேன். ஒரு வாரமாய் தாய்ப்பால் வத்திப்போச்சு, திரு விளக்கு அத்துப்போச்சு. எங்களை மன்னிச்சிருங்க மகராசா’ என்று குழந்தையோடு தேரின் காலடியில் விழுந்தாள்.

நடந்ததை அறிந்த பெருமூச்சுவிட்ட மன்னன் ராஜராஜன் துடிதுடித்துப்போனான் .கண்கள் கலங்கியது தேகம் சிலிர்த்தது.

தேரைவிட்டு கீழிறங்கி தாயையும் குழந்தையையும் சேர்த்தெடுத்து ‘உன்னைப் போன்றவர்களால் தான் பெருமை அடைகிறது என் சோழப்பேரரசு. இன்று முதல் இந்தத்தாயை திருமஞ்சனப் பணிப்பெண்ணாக நியமிக்கின்றேன். அரண்மனை சிற்பியை அழைத்து #தாய்ப்பாலால் #விளக்கெரித்த #இவள் #பெயரை #கல் #வெட்டில் #பொறித்து #விடுங்கள்’ #என்றான்.

Comments

  1. அப்பெண்ணின் பெயர் அறிய விரும்புகிறேன்
    pls do whatsapp 9840304424

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்